மார்ச் 2 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் பின்னரான 6ஆம் திகதியன்று, இடைக்காலக் கணக்கறிக்கை மூலம் 12.29 பில்லியன் ரூபாயை அரசாங்கம் இரகசியமான முறையில் நிறைவேற்றியுள்ளதென, மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அரச நிதி நிலைவரம் தொடர்பான அறிக்கையில் இதனைக் காணமுடிவதாகக் கூறினார்.
இடைக்காலக் கணக்கறிக்கை ஊடாக அரச செலவீனங்களுக்கான நிதி ஒதுக்கப்படுமாயின், அது தொடர்பில் நாடளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனத் தெரிவித்த அவர், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், 12.29 பில்லியன் ரூபாய் நிதி எவ்வாறு நிறைவேற்றப்பட்டதென்பது சர்ச்சையாக உள்ளதென்றும் கூறினார்.
இடைக்கால கணக்கறிக்கை ஊடாக நிதி ஒதுக்கீட்டை நாடாளுமன்றமே மேற்கொள்ள முடியுமெனச் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதியாலோ அல்லது வேறு எந்த நபராலோ, இதனை மேற்கொள்ள முடியாதெனவும் தெரிவித்த அவர், 2020ஆம் ஆண்டுக்காக ஒரே ஓர் இடைக்கால கணக்கறிக்கையே நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பான உண்மையை அறிவதற்கு, மக்களுக்கு உரிமை உண்டெனத் தெரிவித்த அவர், இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை தயாரித்தது யார், அதற்கான தீர்மானங்களை மேற்கொண்டது யார், எவ்வாறு அது நிறைவேற்றப்பட்டது போன்ற கேள்விகளுக்கான பதில்களை, நிதி அமைச்சு நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர்கள், நாட்டுக்காகப் பாரிய அர்ப்பணிப்புகளைச் செய்வதாக மக்களுக்கு வெளிக்காட்டிக்கொண்டு, இராஜாங்க அமைச்சர்களுக்கு மக்கள் பணத்தில் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கி வருவதாக தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளைத் தடுக்க, தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஹந்துன்நெத்தி கோரினார்.
இராஜாங்க அமைச்சர்களுக்கு வீடு, வாகனம் போன்ற வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தேர்தல் சட்ட மீறலாகும். ஒருவருக்கு 240,000 ரூபாய் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இதனை 5,000 ரூபாய் கொடுப்பனவாக 48 குடும்பங்களுக்கு வழங்கலாம் என சுட்டிக்காட்டிய அவர், அமைச்சர்களுக்கு 7, 8 வாகனங்கள் உள்ளனவென்றும் சுட்டிக்காட்டினார்.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.