(ஆர்.யசி)

சுகாதார அதிகாரிகள் நாட்டின் நிலைமையை உறுதிப்படுத்தினால் அப்போதில் இருந்து அடுத்த 12 மணி நேரத்தில் சகல விமான சேவைகளையும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எனினும் நிலைமைகள் மோசமாக இருக்கின்ற காரணத்தினால் இப்போது பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார்.

விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்தை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் விமான சேவைகளை வழமைக்கு கொண்டுவருவது குறித்து இன்னமும் சரியான திகதி ஒன்று தீர்மானிக்கப்படவில்லை. கொவிட்-19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தினால் எம்மால் இன்னமும் சுற்றுலாத் துறையை முன்னெடுக்க முடியாதுள்ளது.

விமான சேவைகளை ஆரம்பிக்க முன்னர் நாட்டின் சுகாதார நிலைமைகள் ஆரோக்கியமானதாக இருக்கின்றது என்ற சான்றிதழை சுகாதார அதிகாரிகள் வழங்க வேண்டும். அவ்வாறு சுகாதார அதிகாரிகளின் அனுமதி எமக்கு கிடைத்தவுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் விமான சேவைகளை ஆரம்பிக்க எம்மால் முடியும்.

அவசர நிலைமைகளில் சேவைகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் ஒரு சில நாடுகளுக்கான விமான சேவைகள் இயங்கிக்கொண்டே உள்ளது. அத்துடன் பொதிகளை கொண்டு செல்லவும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பயணிகள் விமானமே ஆரம்பிக்க தாமதமாக உள்ளது. எனினும் விரைவில் நிலைமைகள் வழமைக்கு திரும்பிய பின்னர் மீண்டும் சேவைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.