(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தொடரும் நிலையில்,  அந்த தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். எனும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் தவறாக வழங்கப்பட்டுள்ளமை குறித்து தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை அவ்வாறான தவறான மருத்துவ அறிக்கைகள் 13 வரை வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகூட பரிசோதக நிபுணர்கள் தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். ஸ்ரீ  ஜயவர்தனபுர ஆய்வு கூடத்திலிருந்து அவ்வாறான தவறான அறிக்கைகள் 8 உம், கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இருந்து கடந்த 5 ஆம் திகதி வழங்கப்பட்ட பரிசோதனை அறிக்கைகள் 4 உம், கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரி ஆய்வு கூடத்திலிருந்து கொடுக்கப்பட்ட ஒரு மருத்துவ அறிக்கையும் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும்  சுகாதார அமைச்சின் கீழ் உள்ள எந்த ஆய்வு கூடத்திலிருந்தும் தவறான அறிக்கைகள் கொடுக்கப்படவில்லை எனவும், மேற்படி தவறான அறிக்கைகள், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆய்வுகூடங்களில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக பரிசோதனைகளின் போதே கண்டறியப்பட்டு திருத்தப்பட்டதாக அவர் கூறினார்.

 இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதக நிபுணர்கள் தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில்,
'கடந்த 5 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டது.

தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறையின் தாதி, கொலன்னாவை - சாலமுல்ல மற்றும் ராஜகிரிய பண்டாரநாயக்கபுர,  மோதரை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முஸ்லிம் பெண் ஒருவர்  ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த அறிக்கைகள் குறித்து நாம், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பரிசோதனை மையங்களில்  ஆய்வு செய்தபோது, கொரோனா  உள்ளதாக கூறி கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளில் வழுக்கள் உள்ளமை கண்டறியப்பட்டது.

 ஏற்கனவே எமது கண்கானிப்புக்குட்பட்ட விடயம் தான்,  ஸ்ரீ  ஜயவர்தனபுர ஆய்வுகூடம்  ஊடாக  8 தவறான அறிக்கைகள் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக ஆய்வு கூடத்தினால் வழங்கப்பட்ட அந்த 4 அறிக்கைகள் கூட தவறானது என  உறுதியாகியுள்ளது. அதே போல் கொத்தலாவை பல்கலையினால் வழங்கப்பட்ட ஒரு அறிக்கை கூட தவறானது என்பது உறுதியாகியது.

அதன்படி 13 தவறான மருத்துவ அறிக்கைகள் மக்களின் கைகளுக்கு சென்றுள்ளன. இதனால் மக்களுக்கு மருத்துவ ஆய்வு அறிக்கைகள், மருத்துவ பரிசோதனையாளர்கள் தொடர்பிலான நம்பிக்கையில் கேள்வி எழுந்துள்ளது.

ஒன்றை மட்டும் மிகத் தெளிவாக கூறுகின்றேன். சுகாதார அமைச்சின் கீழுள்ள எந்த மருத்துவ ஆய்வு கூடத்திலும்  இதுவரை தவறான மருத்துவ சான்றிதழ்கள் கொடுக்கப்படவில்லை.

சுகாதார அமைச்சின் கீழ் 10 மருத்துவ பரிசோதனை கூடங்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கவென தனியாக உள்ளன. அவற்றில் சேவையாற்ற எந்த சந்தர்பத்திலும் 200 மருத்துவ பரிசோதகர்கள் தயாராக உள்ளார்கள். அவ்வாறான பின்னணியில், இவ்வாறான தொற்று பரவல் சூழலில், ஆய்வுகள் குறித்து சரியான நடவடிக்கைகள் தேவை. அந்த பொறுப்பை சரிவர செய்யாத, இந்த தொற்றை கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள நிபுணர்கள்,  பணிப்பாளர்கள் தொடர்பில் கடமையை சரிவர செய்யாமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு  நாம் ஜனாதிபதியை கோருகின்றோம்' என்றார்.

முன்னதாக கடந்த 5 ஆம் திகதி கொழும்பில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்ட தொற்றாளர்களில் 52 வயதுடைய பெண் உயிரிழந்திருந்தார். அவரது இறுதிக்கிரியைகள் தொற்று நோய் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களின் கீழ் இடம்பெற்றன. பின்னர் அன்றைய தினம் கண்டறியப்பட்ட ஏனைய 3 தொற்றாளர்களுக்கும் தொற்று இல்லை என சுகாதார சேவைகள் பனிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவே வெளிப்படையாக கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில் குறித்த தினம் வெளியிடப்பட்ட 4 மருத்துவ அறிக்கைகளும் தவறானது என தற்போது மருத்துவ பரிசோதக நிபுணர்கள் தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளமை பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.