கொரோனா வைரஸ் தொற்று காரணமாக செயலிழந்துள்ள தனியார் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளத்தின் அரைவாசி அல்லது குறைந்தபட்சம் ரூபா 14,500 ஆகிய இரண்டில் எது கூடுதலானதோ அத்தொகையை சம்பளமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து இலங்கையிலுள்ள தனியார் தொழில்துறையினர் மற்றும் தொழிற் சங்கங்கள் உள்ளிட்டவர்களுடன் இது தொடர்பிலான பல்வேறு விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இம்முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதன்போது கொவிட்-19 வைரஸ் காரணமாக தனியார் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்ற, ஊழியர் சேமலாப நிதியம் செலுத்தப்படும், சம்பளப் பட்டியலில் சம்பளம் பெற்று வரும் எந்தவொரு ஊழியர்களையும் பணியிலிருந்து நீக்காதிருக்கவும் முதலாளிமார் சம்மேளனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் தமது தொழில்துறையை மூடாது, மீளக் கட்டியமைத்து, புத்துயிர் பெறப்படும் வரை, மாதாந்த சம்பளத்தின் அரைவாசி அல்லது குறைந்தபட்சம் ரூபா 14,500 ஆகிய இரண்டில் எது கூடுதலானதோ அத்தொகையை சம்பளமாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது தொழில் வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் தொழில் வழங்குநருக்கு ஏற்படும் பாதிப்பை ஓரளவுக்கு குறைக்கும் வகையிலும் இத்தீர்மானம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
சம்பளம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர்களின் அறக்கட்டளை நிதி, கடன்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தொழில் தருநர் செலுத்த வேண்டிய கடப்பாடுகளுக்குள் காணப்படும் நிலையில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகமாக தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்ற ஊழியர்கள் காணப்படுகின்றனர். சிறு, நடுத்தர, பாரிய கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள இவர்கள் பொருளாதார இயந்திரத்தின் பெரும் பங்கை வகிக்கின்றனர்.
அரசாங்கத்திற்கு பாரமற்ற ஒன்றாக தனியார் பிரிவு காணப்படுவதோடு, அரசாங்கத்திற்கு வருமானம் வழங்குகின்ற, வரி செலுத்துகின்ற பிரிவாகவும் அது காணப்படுவதோடு, பெருமளவிலானோருக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் தருகின்ற ஒரு பிரிவாகவும் அது காணப்படுகின்றது என அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் மாத்திரமல்லாது, தனியார் பிரிவு உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கஷ்டத்துக்கு முகம் கொடுத்துள்ளது. தற்பொழுது பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு, வருமானம் இன்றிய நிலையில் பல இலட்சக்கணக்கானோருக்கு எவ்வாறு சம்பளம் வழங்குவது எனும் பிரச்சினை எழுகின்றது. மேற்கத்திய நாடுகளில் இப்பிரச்சினைக்கு வீடுகளுக்கு அனுப்புவதே தீர்வாக காணப்படுகின்றது என தெரிவித்த அமைச்சர், இலங்கையில் அவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
(Thinakaran)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.