இலங்கைச் சமூகம் ஒரு பேரறிஞரை இழந்துவிட்டது !

லுக்மான் சஹாப்தீன்
தேசியத் தலைவர்,
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்.

இலகுவில் நிரப்பப்பட முடியாத பாரியதொரு சிந்தனையாளருக்கான வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி அவர்கள்.

 ஒரே வசனத்தில் சொல்வதாயின் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகமும் ஒரு பேரறிஞரை இழந்துவிட்டுள்ளது என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் லுக்மான் ஷஹாப்தீன் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுளார்.

மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சி வரலாற்றில் மர்ஹூம் நளீம் ஹாஜியாரும் 2020.05.19 ஆம் தேதி காலமான மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி ஆகிய இருவரும் ஒப்பில்லாப் பெரும் பங்களிப்பைச் செய்திருப்பவர்கள் இவ்விருவரில் எவர் பெயரை நினைத்தாலும் அடுத்த கணம் மற்றவரின் பெயரும் உடனே நினைவுக்கு வருமளவுக்கு இவ்விருவரும் ஒரே இலக்கில் பயணித்தவர்கள். முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சி எனும் நாணயத்தின் இரு பக்கங்களாக நளீம் ஹாஜியாரும் ஷுக்ரியும் ஒப்பிடத் தக்கவர்கள்.

கலாநிதி ஷுக்ரி அவர்கள் எடின்பர்க் மேற்கத்தியப் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டப் படிப்பை இஸ்லாமிய தத்துவவியலில் ஆய்வுசெய்தவர் என்றபோதிலும் மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்துக்கு உள்ளாகி விடாமலும் அதேவேளை பழைமைத்துவக் கண்ணோட்டங்களுக்கும் பலியாகிவிடாமலும் தனக்கே உரித்தான இஸ்லாம் கூறும் நடுநிலைச் சிந்தனைப் போக்கை இலங்கையில் நிறுவன ரீதியாகக் கட்டமைத்துத் தன் வாழ்நாள் முழுதும் அச்சிந்தனைக்காகவே தன்னை அர்ப்பணித்திருந்தார். அதற்கான உயிர்வாழும் புகழ்பெற்ற அடையாளமாக ஜாமிஆ நளீமியா திகழ்கிறது. அது உருவாக்கிய கல்விமான்கள் வெறுமனே மார்க்க அறிஞர்களாக மட்டுமல்லாது தேசிய, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பதவிகளிலும் இருப்பதை நாம் அவதானிக்கலாம். கலாநிதி ஷுக்ரி அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு கடந்த முப்பது ஆண்டுகளாகத் தொடந்து வெளிவரும் இஸ்லாமிய சிந்தனை எனும் காலாண்டு இதழ் பெறுமதிமிக்க ஆய்விதளாகக் கருதப்படுகிறது. தத்துவ வித்துக்கள் எனும் தலைப்பில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் கலாநிதி ஷுக்ரி அவர்கள் நிகழ்த்திவந்த தொடர் பேச்சு வரலாற்றுப் புகழ் மிக்கது.

தொல்பொருள் ஆய்வுத் துறையிலும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மற்றும் பாரம்பரியம் குறித்தும் ஷுக்ரி அவர்கள் மிகுந்த பங்களிப்புச் செய்துள்ளார். இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களைச் சார்ந்த கல்விமான்களோடும் பல்கலைக்கழகங்களின் செனட் சபைகளோடும் மிகவும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் அவர் முன்னின்று ஏற்பாடுசெய்து நடாத்தியுள்ள கருத்தரங்குகளும் மாநாடுகளும் காத்திரமானவை. முஸ்லிம் அல்லாத மாற்றுமத அறிஞர்களைக் கொண்டே முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வுசெய்து அவற்றைப் பகிரங்கமாக சமர்ப்பிக்கவைத்துப் பின்னர் அவ்வாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான .... Muslims of Sri Lanka. Avenues to Antiquity  எனும் நூல் ஷுக்ரி அவர்கள் முஸ்லிம்களின் வரலாற்றுக்குச் செய்துள்ள மாபெரும் பங்களிப்பாகும்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஷுக்ரி அவர்களின் ஜனாஸா மிகவும் எளிமையான முறையில் நிகழ்ந்து முடிந்துவிட்டுள்ளது. நாட்டில் இயல்புநிலை நிலவியிருந்தால் லட்சக்கணக்கான மக்கள் அவரது ஜனாஸாவில் நிச்சயமாகக் கலந்து கண்ணியப்படுத்தி இருப்பார்கள். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியோடும் ஆரம்ப காலம் முதலே கலாநிதி ஷுக்ரி அவர்கள் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார் என்பதை மிகுந்த நன்றிகளோடு நினைவு கூருகிறோம்.

புனித ரமழான் மாதத்தின் கடைசிப் பத்துத் தினங்களில் நம்மை விட்டுப் பிரிந்துசென்றுள்ள மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி அவர்களுக்கு மேலான சுவனத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் பரிசளிப்பானாக !

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.