மாமியாரின் கையால் அடி வாங்கி சாகப்போவதாக App மூலம் FB இல் பகிர்ந்தவரின் ID இனையும் காணவில்லை



(ஸபர் அஹ்மத்)

பலருடைய ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் முடங்கி  இங்கிருந்து ஆவியாய்ப் போய் இருக்கிறார்கள்.இப்படி திடு திடுப்பென்று மறைந்து போன ஆட்களைப் பார்க்கும் போது ஃபேஸ்புக் ஜனநாயக கொள்கைகளை மீறுவோரும் அல்ல.ஆழ்ந்த உறக்கத்தில் ஏழாவது ஜாமத்தில் இருக்கும் போது எழுப்பிக் கேட்டாலும் பகுத்தறிவாய் பேசக் கூடியவர்கள்.ஆக இது அவர்களது பிரச்சினை கிடையாது.ஃபேஸ்புக் பிரதான பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலானா மார்க்கின் தவறு போல இருக்கிறது.அந்த ஆளிடம் இந்நாட்களில் யாரையாவது ரிப்போர்ட் பண்ணப் போனால் , "covid19 காரணமாய் குறைவான வளங்கள் வரப்பிரசாதங்களுடன் பணிபுரிவதாய் சத்தியம் செய்துகொண்டு இருப்பார்".ஆக , இது ஆள்பற்றாக்குறையால் அவர்களது நெட்வேர்க் சேர்வர்களில் ஏற்பட்ட கோளாறோ தெரியாது..

இதெல்லாம் இப்படி இருக்க நேற்று ஃபேஸ்புக்கை கொஞ்சம் சுத்தம் செய்து பார்த்தேன்.அதிகமான பேஜ் ரிக்வஸ்ட்கள் வந்து இருந்தன.அனுப்பியவர்கள் யாரையும் பரிச்சயம் இல்லை.லத்தீன் அமெரிக்க தேச பெயர்களைப் போல வாயில் நுழைய மறுத்தன.இத்தனை நாளாய் இங்கேதான் இருந்து இருக்கிறார்கள்.பேஜ்களைப் ப்ரமோட் பண்ணும் போது மட்டும் குடத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்துவிடுகிறார்கள்.அத்தனைபேர் வீஸாவையும் ரத்து செய்து காலி பண்ணிவிட்டேன்.

இந்தக் களேபரம் முடிய பேர்த் டேக்கள் காட்டின.அங்கே போய் பார்த்தால் அதிலும் பாதி சனம் யார் என்று தெரியவில்லை.உடனே கபால மோட்சம் பெற்றார்கள்.ப்ரெண்ட் ரிக்வஸ்ட் பெண்டிங் எல்லாம் தாறுமாறாகி கொரானா கால முடி மாதிரி வளர்ந்து ஆயிரம் ஆகி இருந்தது.படுசுவாரஷியமான பெயர்கள்.'நிலாவிலும் நித்தியானந்தாவை நினைப்பவள்,ஊரடங்கால் ஊமையானவள், இப்படி வகைவகையான ஸ்டைலில் ஃபேக் ஐடிக்கள்.முடியுமானவரை சானிட்டஸைர் ஊற்றி கழுவிவிட்டேன்.நீக்கித் தள்ளும் போது இருக்கும் சுகம் இருக்கிறதே.அடடா..இன்றைய தேதியில் கொழும்பில் வாகனம் ஓட்டுவது போல ஜிவ்வென்று உற்சாகமாய் இருக்கும்...முழுசாய் சுத்தம் செய்ய நிறைய நேரமும் பொறுமையும் தேவை.இப்போதைக்கு இது போதும்.

நான் நீக்கியது ஒரு இருநூறு இருக்கலாம்.மார்க் தன் பங்கிற்கு போனஸாய்  ஐம்பது அறுபது பேரை வெட்டித் தள்ளியது தான் பரிதாபம்.அதில் வேண்டப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள்..ஃபேஸ்புக் வழியே கண்ட கண்ட App போய் ஜோதிடம் பார்த்த பலருக்கும் ஆப்பு விழுந்து இருக்கிறதாம்.சிலநாட்களுக்கு முன்னர் எனக்கு பெர்சனலாய் தெரிந்த ஒருவர் ஏதோ அப்ளிகேஷன் போய் தான் தனது மாமியாரின் கையால் அடிவாங்கியே இறந்து போக இருப்பதாகப் பகிர்ந்து இருந்தார்.அவரது ஃபேஸ்புக் ஐடி போய்விட்டது.அவருக்கு ஐம்பது வயது இருக்கும்.அதுவும் எப்போது சாகுவாராம்? இன்னும் இருபத்தொன்பது கழித்து எழுபத்தொன்பதில்..ஆனால் கொலைகாரப் பட்டம் பெறப் போகும் பெரும் வள்ளல், பேருபகாரி மாமிக்கு இப்போது எண்பத்தைந்து வயது.பாரிசவாதம் வந்து கைகால் விளங்காமல் படுக்கையில் கிடக்கிறது அது..இந்த இலட்சணத்தில் எழுந்து இருபத்தொன்பது ஆண்டுகள் கழிந்து 114 வது வயதில் மருமகனைக் கொல்லுமாம்.என்ன ஒரு அபத்தம்...ஐடி போகாமல் வேறு என்ன செய்யும்.மார்க்கும் மாமியும் கொடுத்த தண்டனை இது..


கருத்துகள்