அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் மதிப்பிற்குரிய கலாநிதி  P.B. ஜெயசுந்தர அவர்களுக்கு,

அரசாங்க ஊழியர்களின் மே மாதச் சம்பளத்தினை முழுமையாகவோ, பகுதியாகவோ அல்லது நாட் சம்பளத்தினையோ அரசாங்கத்திற்கு வழங்குமாறு பணித்துள்ளீர்கள். அதற்கு முன்னுதாரணமாக தங்களின் சம்பளத்தினை வழங்கும் செயற்பாட்டினையும் ஆரம்பித்துள்ளீர்கள் சந்தோசமான செய்திதான்.

இருந்தும் இந்த நாட்டிலுள்ள அரச சேவையில் பணியாற்றுபவர்கள் தத்தமது சம்பளத்தினை முழுமையாகவோ, பகுதியாகவோ வழங்குவதற்கு ஏதுவான எந்த சூழலும் இல்லை என்பதனை ஒரு சிரேஷ்ட நிருவாக அதிகாரியான நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.

சிரேஷ்ட நிருவாக அதிகாரியான நீங்கள் இந்த வேண்டுகோளை என்ன அடிப்படையில் இட்டுள்ளீர்கள் என்பதனை அரச சேவையாளர்கள் தங்களது “கண்புருவங்களை” உயர்த்திக்கேட்கின்றனர்.

அரச சேவையாளர்களின் வாழ்க்கை வட்டத்தினை புரிந்து கொள்ளாது எழுந்தமானமாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளீர்களா? அல்லது வேண்டுமென்றே இப்படியான ஒரு கருத்தை சொல்லியுள்ளீர்களா? என்பதனை  புரியாத நிலையில் அரச சேவையாளர்கள் பலர் இருந்துகொண்டிருக்கின்றனர்.

Covid-19 அசாதாரண சூழலில் அரச சேவையாளர்கள் பாதிக்கப்படவில்லை என்கிற கருத்து உங்களை மேவியிருக்கலாம் அதனாலேயே இப்படி ஒரு கருத்தை நீங்கள் சொல்லியிருக்கக் கூடும்.

அரசாங்க சேவையாளர்கள் ஒன்றும் செலவில்லாது வாழ்பவர்கள் அல்ல, குடும்பங்கள் இல்லாது வாழும் தனி ஜீவன்களுமல்ல. COVID-19  அசாதாரண சூழலில் தங்கிவாழும், கூட்டுக் குடும்பங்களுக்கு சொந்தக்காரர்களாக மாறிய கதை உங்களுக்கு தெரியாமலிருக்கலாம் என்பதற்காக இந்தச் சிறிய விடயத்தைச் சொல்லுகின்றேன்.

அரச சேவையாளர்களில் அதிகம் பேர் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் கடன் அடிப்படையிலே பெற்றுக்கொள்கின்றனர். மாதம் முடிவுறும்போது எடுக்கின்ற சம்பளத்தின் முக்கால் வாசியை கடைகளுக்கு கொடுத்துவிட்டு அடுத்த மாதம் வரும்வரைக்கும் அன்னாந்து பார்த்துக்கொண்டு, ஏப்பம் விடும் ஓசையை கூட உணராத நிலையிலா நீங்கள் இருந்தீர்கள் என்பதனை எண்ணும் போது ஆச்சர்யமாக இருக்கின்றது.

இந்த இடத்தில் எங்கள் கிராமத்து நகைச்சுவை ஒன்றை சொல்லிவிட்டு அடுத்த விடயத்துக்கு நகரலாம் “ ஒருவர் டிப், டொப் ஆக உடுத்துக்கொண்டு போக, வழியால் வந்த ஒருத்தர் கேட்டாராம் என்ன செய்ரயல் எண்டு அதற்கு அவர் சொன்னாராம் நான் ஆசிரியர், பாடசாலைக்கு போரேன் எண்டு சொல்ல, வழியால் வந்தவர் கேட்டாராம் சாப்பாட்டுக்கு என்ன செய்ரயல் எண்டு”. வடக்கு- கிழக்கில் அரச சேவை பற்றிய பார்வை இது.

நீங்கள் அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் உங்கள் சம்பளத்தினை தாரளமாக கொடுக்கலாம். நீங்கள் ஏராளமாக கொடுக்கலாம். அதனைப்போல் எல்லோரும் வழங்க முடியாது. அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. உங்களுக்கும் நண்பர்கள் இருப்பார்கள் உங்கள் அதிகாரத்தினை பயன்படுத்தி ஏதாவது ஒரு வியாபாரத்திற்கான உதவியை நாடியிருப்பர். நீங்கள் நட்பு ரீதியில் அதற்கு உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு உதவியும் இருப்பீர்கள். இந்த நன்றிக்கடனுக்காக உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி புரிந்திருப்பர். அந்த உதவி சாதாரணமாக ஒரு அரச சேவையாளனின் அரைவருட வாழ்க்கைச் செலவாக சிலநேரம் இருக்கும். அதனையும் தாண்டி ஏதாவது ஒரு கம்பனியின் பங்கு தாரராக சிலநேரம் நீங்கள் இருக்க வாய்ப்பிருக்கின்றது. அந்தவருமானம் உங்கள் பணிக்கொடையை வழங்குமளவிற்கானதாக இருக்கும். ஆனால் நீங்கள் வழங்கச் சொல்லுகின்ற அரச பணியாளர்கள் மிக மிக அரிது நமது தேசத்தில். ஏனென்றால் இந்தப் பணியாளர்களுக்கு வழங்கும் சம்பள அளவுத் திட்டத்தின் தன்மை  அப்படியுள்ளது. உங்கள் எண்ணத்தில் ஒரு அரச பணியாளனின் மிகக் குறைந்த மாதச்  சம்பளம் எவ்வளவு?

Covid-19 அசாதாரண சூழலில் அர்பணிப்பு மிக்க பணியாற்றும் இரணுவம், பொலீஸ் மற்றும் சுகாதாரப் பிரிவினர் என்பவர்களும் அரச சேவையாளர்களே. நீங்கள் கோரியுள்ள மே மாத சம்பள விடயம் இப்பணியாளர்களுக்கும் பொருந்துமா? இல்லையா?

அர்பணிப்பு மிக்க சேவையாற்றி தங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நிலையில் படையினர் உட்பட சுகாதார சேவையினர் உள்ளனர். அந்நிலையில் சம்பளத்தினையும் வழங்குங்கள் என கோருவது என்ன நியாயம்.

Covid-19 ன் நிதிக்கு தங்களது சம்பளத்தில் இருந்து ஒருநாள் பணிக்கொடையை கேட்டீர்கள் ஏப்ரல் மாதச் சம்பளத்தில் இருந்து இலங்கையிலுள்ள பெரும்பாலான அரச பணியாளர்கள் வழங்கினர். இது மிகப்பெரியதொரு பங்களிப்பாகவே பார்க்கப்படுதல் வேண்டும்.

மே மாதச் சம்பளத்தினை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த போது அநேகமான அரச பணியாளர்கள் வழங்க விருப்பத்துடன் இருக்கின்றனர். ஆனால் தங்களின் குழந்தைகளுக்கான பால்மாவை எப்படி கொள்வனவு செய்வது என்கிற கேள்வி எழுந்தவுடன் விருப்பம் வெறுப்பாகிவிட்டது.

அரச பணியாளர்கள்- Covid-19 ஆசாதாரண சூழலில் அரசு வழங்கும் எந்த மானியத்திற்கும் தகுதியற்றவர்கள். தனவந்தர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் வழங்கும் குறைந்தபட்ச நிவாரணமான 5கிலோ அரிசிக்கு தகுதியற்ற பணியாளர்களை பார்த்து மே மாதச் சம்பளத்தினை வழங்குங்கள் என கேட்பதிலுள்ள நியாயங்கள் என்ன?

நீங்கள் கோரியதற்கு ஒரு நியாயமான காரணத்தை மட்டுமே சொல்ல முடியும். கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகம் செல்லவில்லைதானே பணிக்கொடையை வழங்கினால் என்ன என்று கேட்கலாம். அந்த விடுமுறை யாருக்கு கிடைத்தது. ஒரு அரசாங்க அதிபருக்கு? பிரதேச செயலாளருக்கு? கிராம உத்தியோகத்தருக்கு? சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு? அல்லது படை உயர் அதிகாரிக்கு , சிப்பாய்களுக்கு அல்லது பொலீஸ் உயர் அதிகாரிக்கு , கொஸ்தாபல்களுக்கு அல்லது வைத்தியர்களுக்கு, ஊழியர்களுக்கு என யாருக்கு கிடைத்தது. இப்படியானவர்களின் நிலையை எப்படி சொல்வது. பம்பரம் போல் சுழன்று அரச உத்தரவுக்கு அடிபணிந்து அயராது பணியாற்றும் இப்படியானவர்களுக்கு உங்கள் நிவாரணம்தான் என்ன?

ஆக, மே மாதச் சம்பளம் அல்ல, நீங்கள் கோரும் நிதிக்கு ஒரு இலட்சம்  வீதம் கடந்த நாடாளுமன்றில் இருந்த 225 பேரிடம் வினயமாய் கேட்டுப்பாருங்கள், மக்களுக்கு இதனையாவது செய்கிறார்களா என்று பார்ப்போம்.

இந்த தேசத்து மக்கள் வழங்கிய வரிகளில் சிறப்புரிமை என்கிற அடையாளத்துடன் அனுபவித்தவர்கள் அவர்களே. இப்படியெல்லாம் இருக்கும் போது வங்கிக்கடன், இதரகடன்கள் கழிந்து வெறும் சில்லறைகளை மீதமாய் பெறும் ஒரு சாதாரண அரச பணியாளனை கேட்டுக்கொள்வது வெட்கப்படுத்துவதற்கு சமனில்லையா என கேட்கத் தோனுகிறது.

றிசாத் ஏ காதர் 
ஊடகவியலாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.