(செ.தேன்மொழி)

பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கான காலம் இருக்கின்ற நிலையில் இடையில் பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலை நடத்த எடுத்த தீர்மானத்தின் ஊடாகவே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படாமல் உடன் பாராளுமன்றத்தை கூட்டுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை அரசாங்கம் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு நிதி தொடர்பான செயற்பாடுகளை கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு கையளித்து கடந்த கால குடும்ப ஆட்சியையே மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, தேர்தல் தொடர்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியே முடிவடைய இருந்தது. இதற்கமைய பாராளுமன்றத்தை களைத்திருந்தால் ஒக்டோம்பர் மாதம் தேர்தலை நடத்த முடிந்திருக்கும்.

இந்த நெருக்கடிக்குள் மத்தியில் யார் பொதுத் தேர்தலை நடத்த தீர்மானம் எடுக்க சொன்னது. அரசாங்கமே தேர்தல் தொடர்பில் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

பாராளுமன்றத்தை மார்ச் மாதம் களைத்தால் ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும். தற்போது அதுவும் நடைபெற வாய்ப்பில்லை. இதன் காரணமாகவும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. இதனால் அந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலும் தற்போது சிக்கல் நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்ட காலப்பகுதியில் வைரஸ் பரவல் அதிகரித்திருந்தமையினால், மூன்று நாட்கள் அரச விடுமுறை அறிவிப்பட்டன. இந்த காலப்பகுதியிலே வேட்பு மனு தாக்கல் செய்யபட்டது. தற்போது இந்த வேட்பு மனு செல்லுப்படியாகுமா என்பது தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதால் தேர்தல் சட்டங்களை ஒழுங்கான முறையில் நிறைவேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தில் வாக்காளரின் விரலில் மை பூச வேண்டும். அதனை இந்த வைரஸ் தொற்றுக்கு மத்தியில் செயற்படுத்த முடியுமா? இதனால் தேர்தலை நடாத்துவதென்றால் தேர்தல் சட்டத்தையும் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஏற்று உணர்ந்து கொண்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இடைவெளியை பேணுவதன் ஊடாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என்பதற்காகவே நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டிருந்தோம். ஆனால் ஊரடங்குக்கென்று தனிச்சட்டம் இருக்கின்றது இந்நிலையில் இதனூடாகவும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது.

மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அரச நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும் சிக்கல்கள் காணப்படுகின்றன. பாராளுமன்றத்தை களைத்ததற்கு பின்னர் மூன்று மாதங்களுக்கான 7200 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் பாராளுமன்றம் களைக்கப்பட்டால், புதிய பாராளுமன்றம் கூடப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னரே நிதி ஒதுக்கீடு செய்யமுடியும். இதுவே 153 சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை களைத்துவிட்டு அனைத்து பொறுப்புகளையும் பசில் ராஜபக்ஸவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். அமைச்சரவைக்கும் தற்போது அனுமதி இல்லை. நீதியற்ற முறையில் அரசியலமைப்பும் மீறி செயற்பட்டு வருகின்றனர்.

பாராளுமன்றத்தை கூட்ட வேண்டாம். பாராளுமன்றம் கூடி மருந்து கண்டுப்பிடிக்கவா என கேள்வி எழுப்பி பாராளுமன்றம் கூடுவதை நிராகரித்தனர். பின்னர் அனைத்து முதலீடுகளையும் முகாமைத்துவம் செய்ய தமது உறவினர் ஒருவருக்கு ஒப்படைத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அலரி மாளிகைக்கு அழைத்துள்ளனர். இதற்கு முன்னரும் இவ்வாறு அழைப்பு விடுத்திருந்த போது நாங்கள் சென்றோம். இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்புகள் இடம்பெற்ற போது, நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இதன்போது வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனையை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்ட போது அதனை ஒருபோதும் நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் நாங்கள் எதற்கு அங்கு செல்ல வேண்டும். அதனாலேயே செல்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தோம். பாராளுமன்றத்தை கூட்டுவதால் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வுகான முடியும். தொற்று நோய்பரவல் காலங்களில் செயற்படும் விதம் தொடர்பான புதிய சட்டங்களை அமுல்படுத்தல், முறையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

பாராளுமன்றத்தை களைத்துவிட்டு முறையற்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பும் என்றே பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் முன்னெடுத்த குடும்ப ஆட்சியையே மீண்டும் செயற்படுத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.