கடந்த 26 ஆம் திகதி காலமான இ.தொ.க. வின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இன்று (31) மாலை 05.15 மணியளவில் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் அக்னியில் சங்கமமாகியது.

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அன்னாரது பத்தரமுல்ல இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் கொழும்பு ஜயரட்ன மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர் இ.தொ.க வின் தலைமைக் காரியாலயம் சௌமிய பவனில் வைக்கப்பட்டு அதனையடுத்து அவரது சொந்த ஊரான வெவண்டனுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நுவரெலியா, தலவாக்கலை ஊடாக கொட்டக்கலைக்கு கொண்டுவரப்பட்டு இ.தொ.க காரியாலயமான CLF இல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்போடு கொட்டகலையிலிருந்து ஹட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்கிற்கு இறுதி அஞ்சலிக்காக இன்று (31) கொண்டுவரப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இரு மருங்கிலும் சுகாதார இடைவெளியை பேணி நின்று மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர்.

இறுதி அஞ்சலி நிகழ்வில் பிரமுகர்களின் இரங்கல் உரையை அடுத்து அன்னாரின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இந்து சமய முறைப்படி இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது.

இறுதி அஞ்சலி நிகழ்விற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக முன்னாள் அமைச்சர் வி. இராதகிருஸ்ணன் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜி.எல்.பீரிஸ் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நவீன் திசாநாயக்க, சி.பி ரத்நாகக்க, நாமல் ராஜபக்ஷ, மற்றும் மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் நுவரெலியா மாவட்ட செயலாளர் புஸ்பகுமார, உட்பட சிவனொளிபாதமலை பிரதான தேரர், மற்றும் இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-சதீஸ்குமார்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.