நாட்டில் நிலவும் கொவிட்-19 தொடர் இடர் நிலையினால்  பாதிக்கப்பட்டிருக்கும் அம்பாறை மாவட்ட மக்களுக்கு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ பொதி வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் இன்று 06-05-2020 உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர் பதுர்சலாம் சன்ஸீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம். எம். நஸீர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இச்செயற்றிட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

கல்முனை பிராந்தியத்தை தளமாக கொண்டு முற்போக்குடன் பல வினைத்திறன்மிக்க செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்ற கல்முனையன்ஸ் போரமானது நாட்டில் நிலவும் கொவிட்-19 இடர் நிலையில் பல கட்ட நிவாரண விநியோகப்பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றது.

அந்தவகையில் கல்முனையன்ஸ் போரம்  விடுத்த வேண்டுகோளுக்கமைய 6 தொன் பேரிச்சம்பழத்தினை பெஸ்ட் புட் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினர் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.

குறித்த பேரீச்சம்பழமானது அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புக்களூடாக இணங்கானப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவிருக்கின்றன.

ஏலவே இரு கட்ட உலர் உணவுப்பொதி விநியோகத்தினூடாகவும், நிதியாகவும் சுமார் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணங்களை கடந்த மாதம் கல்முனையன்ஸ் போரம் கல்முனை பிராந்தியத்தில் விநியோகித்திருந்த நிலையிலேயே தற்பொழுது இவ்நிவாரணத்தையும் வழங்க போரம் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் போது கல்முனை பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜவ்பர், தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்முனையன்ஸ் போரத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல் - இம்ரான் நெய்னார்






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.