தற்போதைய நிலைமை வழமைக்குத் திரும்புவதற்கு இரு ஆண்டுகள் அளவில் செல்லலாம் என்று கூறுகின்றார்கள். எனினும் பாராளுமன்றத் தேர்தலை இனியும் நடாத்துவதானால் தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கமைய தேர்தலை நடாத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

இன்று (02) இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் கருத்துத்தெரிவிக்கையில், "தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தலை நடாத்த முடியாது. பல்வேறு நடைமுறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அதனை செய்வதற்கு தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார். "

"ஏற்கனவே அரசியலமைப்பு ரீதியிலான சிக்கல்கள் உள்ளன. இப்போது நீங்கள் (மஹிந்த தேசப்பிரிய) புதுப்பிரச்சினையை கூறுகிறீர்கள். சட்டங்களை திருத்த வேண்டும் என்கிறீர்கள். அப்படியாயின் அரசியலமைப்பின் 33 ஆவது பிரிவுக்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தல் சட்டங்களை திருத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் ஆலோசனை கூறுங்கள் என்று நான் தெரிவித்தேன். நாடாளுமன்றத்தை கூட்டுமாறு என்னால் கோர முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், அவ்வாறு கோர முடியாது தான். ஆனால் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று நான் அவரிடம் தெரிவித்தேன்" என்று சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.