ஆக்கம் – ஆதிப் அஹமட்

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில்  ஒவ்வொரு ஆண்டும்  மே மாதம் 3 ஆம் திகதி பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டாடுவது, உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரத்தின் நிலையை மதிப்பிடுவது, ஊடகங்களின்  சுதந்திரம் மீதான தாக்குதல்களில் இருந்து ஊடகங்களை பாதுகாப்பது மற்றும் உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது போன்ற பிரதான நோக்கங்களை மையப்படுத்தியதாகவே இந்த பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்படுகின்றது.

அச்சமோ சாதகமோ இல்லாத பத்திரிகைத்துறை (Journalism without fear and favor) என்ற தொனிப்பொருளின் கீழே இந்த வருடத்துக்கான(2020) பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.

பத்திரிகை சுதந்திரத்துக்கென வருடத்தில் ஒரு நாள் அனுஷ்டிக்கப்பட்டாலும் தினம் தினம் ஊடக சுதந்திரம் பற்றி பேசப்பட்டாலும் இன்னமும் ஊடகங்கள் முற்று முழுதான சுதந்திரத்துடன் இயங்கவில்லை என்பதும் கசப்பான உண்மையாகும்.உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் ஒரு ஊடகவியலாளனாவது  நசுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறான்.உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆட்சியாளர்கள்  சுயாதீன ஊடகங்களை நசுக்க முனைவதும் அதனை எதிர்த்து பத்திரிகையாளர்கள் போராடுவதும் ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகின்றது எனலாம்.

ஜனநாயகத்தின் தூண்களாக நிறைவேற்று அதிகாரம்,சட்டவாக்கம்,நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு விடயங்களே உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.இங்கு ஊடகத்துறை என்பதை விடவும் சுயாதீன அல்லது சுதந்திர ஊடகம் என்பது மிகப்பொருத்தமாக அமையும். ஊடகத்துறைக்கு இந்த வரிசையிலே நான்காவது இடம் வழங்கப்பட்டிருந்தாலும் அதற்கு மேலுள்ள பிரதான மூன்று துறைகளும் சரியாக பொறுப்போடு இயங்குகின்றதா என்பதை கண்காணித்து அதனை மக்களுக்கு கொண்டுசேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

ஒரு நாட்டில் ஊடகங்களுக்கான சுதந்திரமும் சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் ஜனநாயகத்தின் ஏனைய  தூண்கள் மூன்றும் சீராக இயங்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.ஏனெனில் ஊடகத்துறைக்கான சுதந்திரத்தன்மை அல்லது சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் அதனூடாக ஏனைய துறைகளின் பொறுப்புக்கூறல் (Accountability) எனும் பாரிய பொறுப்பு உறுதிப்படுத்தப்படும்.தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற போது அதற்குரிய பொறுப்பினை உரிய தரப்பு ஏற்று அதனை சீர்செய்ய இங்கு வாய்ப்பு அளிக்கப்படும்.இவ்வாறு ஊடகங்களின் மூலமாக பொறுப்புக்கூறல் எனும் விடயமானது உறுதிப்படுத்தப்படுவதனால் நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளும் நன்மையாடைவர்.

இன்று பிறக்கின்ற குழந்தைகள் முதல் பெரியோர் வரை ஒவ்வொரு நொடிப்பொழுதையும் ஊடகங்களோடு கடக்கின்ற ஒரு நவீன யுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.ஏனெனில் ஊடகங்கள் என்பது பத்திரிகைகள்,வானொலிகள்,தொலைக்காட்சிகள் என்பதையும் தாண்டி நாம் இன்று நம் அன்றாட வாழ்வில் தொடராக பயன்படுத்தப்படுகின்ற இணையத்தளங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளையும் கூட ஊடகங்கள் என்ற வகைக்குள்ளே அடக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு ஊடகங்களை கைகளுக்குள்ளே வைத்துக்கொண்டு  வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருக்கும் ஊடகத்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதில் நிச்சயம் பொறுப்பு உண்டு.பொறுப்பு என்பதையும் தாண்டி இது நாம் ஒவ்வொருவரின் மீதும் சாட்டப்பட்ட சமூகக்கடமை என்று கூட சொல்ல முடியும்.ஏனெனில் ஊடகங்களின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் அதனூடாக நிறைவேற்று அதிகாரம்,சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன தங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றும்.இதன் காரணமாக பிரயோசனமடையப்போகும் தரப்பு மக்களே.ஏனெனில் ஒவ்வொரு ஊடகங்களும் சுயாதீனத்தன்மையோடு நேர்த்தியாக பணி செய்வது மக்களுக்காகவே.

உலக நாடுகளில் ஆட்சி செய்கின்ற அரசாங்கங்களின் மீது மாத்திரமே இந்த ஊடகங்களின் சுதந்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவது என்ற பொறுப்பினை சாட்டிவிட்டு இருக்காமல் இந்த ஊடகங்களை பயன்படுத்துகின்ற நாம் ஒவ்வொருவரும் ஊடகத்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதில் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள இந்த உலக பத்திரிகை தினத்திலிருந்து முயற்சிப்போம்.அவ்வாறான ஒவ்வொருவரின் முயற்சியும் என்றோ ஒரு நாள் நிச்சயம் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை இல்லாதொழித்து சுயாதீனத்தன்மையினை நிச்சயம் உறுதிப்படுத்தும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.