முல்லைத்தீவு, பழைய செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த தேரரின் உடல், நீதிமன்ற உத்தரவை மீறி கோவில் வளாகத்தில் அடாவடியாகத் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி ஆராய்ந்து பார்ப்பதாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (13) அறிவித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான  ஏ.எச்.எம்.டீ. நவாஸ், நீதியரசர் சோபித ராஜகருணா ஆகியோர் முன்னிலையில், இந்த மனு நேற்று அழைக்கப்பட்ட போதே, அதை ஆராய்வதற்கு திகதி குறிக்கப்பட்டது.
குறித்த விஹாராதிபதியின் உடலைத் தகனம் செய்ததால், நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டி, ஞானசார தேரர், முல்லைத்தீவு பொலிஸ் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர், முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிக்கப்பட்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவினால் இந்த மனுத்  தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்வின்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.