(ஆர்.யசி)


கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் வழங்குவதாக கூறிய நிதியுதவியில் ஒரு டொலரேனும் இன்னும் வந்துசேரவில்லை என்கிறது அரசாங்கம்.

உலக வங்கி வழங்கிய 127 மில்லியன் அமெரிக்க டொலர்களும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமைகளை கையாள வழங்கப்பட்டதல்ல எனவும் கூறுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் சர்வதேச நிதி உதவிகள் மற்றும் கடன்கள் மூலம் பெறப்பட்ட நிதி கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கத்தில் இருந்து மீளும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றதா? அல்லது நிதி இன்னமும் பயன்படுத்தாது பத்திரப்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வியை உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல், காலை 10.15 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 12.45 மணியளவில் நிறைவடைந்தது.

இதற்கு பதில் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி உதவிகள் வழங்குவதாக கூறியுள்ள போதிலும் சர்வதேச நாடுகளின் நிதி உதவிகள் இன்னமும் வந்துசேரவில்லை என்ற காரணிகளை கூறியுள்ளதுடன் நிதியமைச்சரின் செயலாளரிடம் அது குறித்த காரணிகளை தெளிவுபடுத்த வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய இந்த விடயங்கள் குறித்து காரணிகளை கூறிய நிதியமைச்சரின் செயலாளர், கொவிட்-19 தொற்று நோய் பரவல் காரணமாக நாடு பாதிக்கப்பட்ட வேளையில் பல நாடுகளின் உதவிகள் பொருட்கள் மூலமாக கிடைத்தது. நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும் பல நாடுகள் கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் எமக்கு தருவதாக கூறிய நிதி உதவியில் ஒரு டொலர் கூட இன்னமும் எமது திறைசேரிக்கு வந்து சேரவில்லை.
அதேபோல் உலக வங்கி கொடுத்த 127 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவியும் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேலைத்திட்டதிற்கு வழங்கப்பட்டதல்ல.

இந்த நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் இலங்கை சர்வதேச நாடுகளுக்கு வழங்க வேண்டியுள்ள கடன் தொகையை சற்று தாமதப்படுத்த வேண்டும் என இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் அவ்வாறான கால தாமதத்தின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பும் வரையில் சர்வதேச கடனாக வழங்கவே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த 127 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொவிட்-19 நிவாரண தொகையாக வழங்க முடியாது. எவ்வாறு இருப்பினும் தனிப்பட்ட ரீதியில் இலங்கையின் செல்வந்தர்கள், நிறுவனங்கள் வழங்கிய நன்கொடைகள் முழுவதையும் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.