தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தாம் கூறியதாக வெளியான செய்தி தவறான மொழிப்பெயர்ப்பால் ஏற்பட்ட தவறான செய்தி என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டதாக வெளியான தகவலை அடுத்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எனினும் அவர் தரப்பில் இருந்து இது தொடர்பில் விளக்கங்கள் தரப்படவில்லை.

இந்தநிலையில் அவருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, சிங்கள ஊடகத்தின் கேள்விகளுக்கு தாம் வழங்கிய பதிலில் தெளிவான விடயங்களையே தாம் குறிப்பிட்டிருந்ததாக கூறினார்.

ஆரம்பத்தில் குறித்த சிங்கள ஊடகவியலாளர், தமிழ் தேசியக்கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதானே என்ற கேள்வியை தம்மிடம் தொடுத்தார்.

எனினும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தற்போது தாம் இயங்கி வருகின்றபோதும் தமிழரசுக்கட்சி 1949ம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.
1970ம் ஆண்டிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் தாம் அவரிடம் கூறியதாக சுமந்திரன் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதல் கூட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையில்தானே இடம்பெற்றது என்று சிங்கள ஊடகவியலாளர் கேட்டபோது, இல்லை தனக்கு தெரிந்தளவில் அந்தக்கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது என்று தாம் குறிப்பிட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.
புலிகளின் அரசியல் நோக்கம்தானே உங்களின் நோக்கமும் என்று சிங்கள ஊடகவியலாளர் கேட்டபோது, இல்லை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நோக்கம் தனிநாடு என்றபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நோக்கம் சமஸ்டி என்று குறிப்பிட்டதாக சுமந்திரன் கூறினார்.

எனினும் சமஸ்டி என்றால் தனி நாடுதானே என்ற சிங்கள ஊடகவியலாளரின் கேள்விக்கு, தாம் இல்லையென்று பதில் வழங்கியதாகவும் அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளில் சமஸ்டிமுறை இருப்பதை தாம் சுட்டிக்காட்டியதாக சுமந்திரன் தெரிவித்தார்.

இதன்போதே விடுதலைப் புலிகளின் (சன்னத்த வியாபாரய) ஆயுத நடவடிக்கைக்கு நீங்கள் ஆதரவளிக்கவில்லையா? என்று சிங்கள ஊடகவியலாளர் கேட்டார்.
அதற்கு தாம் வன்முறைக்கோ, ஆயுத நடவடிக்கைக்கைக்கோ ஆதரவில்லை என்றுக்கூறியதாக சுமந்திரன் தெரிவித்தார்.

இதனையே தமிழ் ஊடகங்கள் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்துக்கு தாம் ஆதரவில்லை என்ற கருத்துப்பட மொழிப்பெயர்ப்பை செய்து செய்திகளை வெளியிட்டதாக சுமந்திரன் விளக்கமளித்தார்.

(தமிழ் வின்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.