சகோதரர் ரம்ஸி ராஸிக் கைதாகியுள்ளார் எனும் செய்தி முகநூலில் பரவத் தொடங்கியபோது பலரும் அவர் யார் ? எதற்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனக் கேட்டுப் பலரும் நம்முடன் தொடர்புகொண்டனர். உண்மையிலேயே நிறையப் பேருக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை.
சிங்களத்தில் முகநூல் பாவிப்பவர்களுக்கு ரம்ஸி ராஸிக் குறித்துத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்குச் சிங்கள முகநூல் வட்டாரத்தில் மிகுந்த பிரபல்யம் பெற்றவர் தோழர் ரம்ஸி ராஸிக்.
கண்டி, கட்டுகஸ்தொட்டையைச் சேர்ந்த ரம்ஸி ராஸிக் 50 வயதுடைய, ஓய்வுபெற்ற அரசாங்கப் பணியாளர். அவரது சுகயீனம் காரணமாக உரிய வயதுக்கு முன்னரே அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வில் அனுப்பப்பட்டவர். மனைவி ஓர் ஆசிரியை. பாடசாலை செல்லும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுள்ள ரம்ஸி, காலஞ்சென்ற ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஸ்டார் ராஸிக் அவர்களின் மகனாவார். தந்தையைப் போலவே தனயனும் நல்ல எழுத்தாற்றலும் மொழிப் புலமையும் அனைத்துக்கும் மேலாகத் தீவிர சமூக சிந்தனையும் கொண்டவர்.
மார்க்க அறிவும் பரந்த அளவிலான சமூக, அரசியல் தெளிவும் கொண்டிருந்த அவர் அதிகமாகச் சிங்களத்திலும் ஓரளவு தமிழிலும் கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து முகநூலில் எழுதி வருபவர்.
தன் சொந்தப் பெயரிலேயே முகநூல் கணக்கைக் கொண்டுள்ள ரம்ஸி பொதுவாக நடுநிலை இஸ்லாமியப் பார்வையும் சிந்தனையும் கொண்டவராக இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்தும் தேசிய ஒற்றுமை, ஐக்கியம், சகவாழ்வு குறித்தும் எழுதிவருபவர்.

அவரது முகநூலில் அவருக்கு அதிகமான சிங்களச் சகோதரர்கள், சகோதரிகள் உட்பட முஸ்லிம்கள், தமிழர்களும் நட்புவட்டத்தில் இருந்தனர். அதேவேளை அவரது கருத்துக்களைத் தொடர்ந்து வாசித்தும் மறுத்தும் விமர்சித்தும் வரும் ஏராளமான சிங்கள நண்பர்களும் - (சில நேரங்களில்) எதிரிகளும் இருந்துவந்தனர்.
ரம்ஸி எதிலும் நிதானமான சிந்தனைப்போக்கைக் கொண்டவர். முஸ்லிம்கள் மத்தியில் உள்ள மூடத்தனங்களையும் தீவிர இஸ்லாமிய சிந்தனைப் போக்குகளையும் தைரியமாக விமர்சித்து வந்தவர்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்துப் பொதுத் தளங்களில் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்கள் குறித்தே ரம்ஸியின் பெரும்பாலான எழுத்துக்கள் அமைந்திருக்கும். தொடர்ந்து பலமணி நேரம் முகநூலில் விவாதிப்பார், பதிலளிப்பார், எவ்வளவுதான் மோசமான வார்த்தைகள் கொண்டு மாற்றுமொழிச் சகோதரர்கள் கொமண்ட் செய்தாலும் கோபப்படாமலும் நிதானமாகவும் உரையாடும் பக்குவமும் பொறுமையும் கொண்டவர். ஆனால் அண்மைக்காலமாகத் தொடந்து முஸ்லிம்கள் மீது ஊடகங்களில் கட்டவிழ்த்து விடப்படும் பொய்ப் பிரச்சாரங்களாலும் அவதூறுகளாலும் ரம்ஸி மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையை அடைந்திருந்தார். குறிப்பாக கொவிட்19 தொற்றின் பின்னர் நிலைமை மோசமானது.
குறிப்பாக முஸ்லிம்கள்தான் கொரோனாவைப் பரப்புகிறார்கள், சட்டத்தை மதிக்காமல் நடக்கிறார்கள் போன்ற தவறான பிரச்சாரங்கள், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியைப் பலாத்காரமாகக் கொரண்டைன் நிலையமாக எடுத்துக்கொண்டது முதல் மூன்று முஸ்லிம் ஜனாஸாக்களுக்குக் கொரோனா முத்திரை குத்தி எரித்த போது ரம்ஸி பொறுமையின் எல்லையைத் தொட்டிருந்தார். சிங்களத்தில் பதிவுகள் தீச்சுவாலைகளாக வெடித்தன. ஆனாலும் அத்தனை கோபமான நிலையிலும் ரம்ஸி சட்டத்துக்கு விரோதமாக எதையும் எழுதவில்லை.
தெரண தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாத நிகழ்ச்சியில் சத்துர அல்விஸ் மற்றும் சில அரசியல்வாதிகளும் நடந்துகொண்ட மிகக் கீழ்த்தரமான, குரோதமான, இனவெறுப்பூட்டும் நிகழ்வைப் பார்த்துக் கொதிப்படைந்த நிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி ரம்ஸி ஒரு பதிவை இட்டிருந்தார். மிகவும் நிதானமான, அறிவுபூர்வமான அந்தப் பதிவில் "முஸ்லிம்கள் தங்கள் மீது மேற்கொள்ளப்படும் சிந்தனா ரீதியான தாக்குதல்களுக்கு எதிராக சிந்தனா ரீதியான ஜிஹாதை மேற்கொள்ள வேண்டும். பேனாக்களையும் தட்டச்சுப் பலகையையும் கொண்டு அறிவுபூர்வமாக ஜிஹாத் செய்ய வேண்டும்" எனச் சில வசனங்களையும் சேர்த்திருந்தார். இங்கே வில்லங்கத்தையும் விவகாரத்தையும் கொண்டுவந்து இன்று ரம்ஸியை சிறைச்சாலைக்குள் அடைத்துவிட்டுள்ள சொல் ஜிஹாத் என்பதுதான். அவர் அந்தச் சொல்லை மிகவும் நுணுக்கமாகவே பயன்படுத்தி இருந்தார். ஆயுதப் போராட்டம் என்ற பொருளை எந்த வகையிலும் கொள்ள முடியாத விதமாகவே Ideological war என ஆங்கிலத்திலும் அடைப்புக் குறிக்குள் இட்டிருந்தார். ஆனாலும் இனவாதிகளின் குருட்டுக் கண்களுக்கு இவையெல்லாம் தெரியவில்லை. ஜிஹாத் என்ற சொல் மட்டுமே பேரச்சமூட்டும் வெடிகுண்டுகளாகத் தெரிந்தன !
இந்தப் பதிவைத் தொடந்து ரம்ஸியின் முகநூலில் இனவாதத் தீ கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.. நூற்றுக்கணக்கான காரசாரமான அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் கொமண்டுகளாகக் கிளம்பி வெடித்தன...
இத்தகைய பயங்கரமான பின்னூட்டங்களையும் அச்சுறுத்தல்களையும் கண்ட ரம்ஸி ஏப்ரல் 3 ஆம் தேதி தனது கடைசிப் பதிவை முகநூலில் போட்டிருந்தார். அதில் "இதற்கு மேலும் நான் முகநூலில் இதுபோல எழுதப் போவதில்லை. நான் எனது எழுத்துப்பணியை நிறுத்திக் கொள்கிறேன். என் உயிர் மற்றும் வாழ்வு குறித்து எனது மகள் மிகுந்த அச்சத்தில் உள்ளார். நான் இனி ஒதுங்கிக் கொள்கிறேன்.." எனச் சொல்லி இருந்தார். அதுதான் முகநூலில் அவர் இட்டிருந்த கடைசிப் பதிவு !
முகநூல் வழியாக தனக்கு விடுக்கப்பட்டிருந்த கொலை மிரட்டல்கள் தொடர்பாக ரம்ஸி 2020.04.09ஆம் தேதி மு.ப. 11.04 அளவில் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு மின்னஞ்சல் வழியாக முறைப்பாடு ஒன்றைச் செய்கிறார். அதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் அதே தினம் பின்னேரம் கொழும்பிலிருந்து சென்ற புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டுக் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டு அடுத்த நாள் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.
ரம்ஸி கைதுசெய்யப்பட்டவுடன் அவரது குடும்பத்தினர் ஒரு சட்டத்தரணியை ஏற்பாடு செய்துள்ளனர். முஸ்லிம் சமூகத்தின் பொதுப் பிரச்சினைகளின்போது நீதிமன்றத்தில் இலவசமாகத் தோன்றி வாதிடுபவர் எனப் புகழ்பெற்றிருந்த அந்த சட்டத்தரணி ரம்ஸியின் முதலாவது வழக்குத் தவணை அன்று நீதிமன்றம் வரவில்லை, தனது உதவியாளரான வேறொரு சட்டத்தரணியையே அனுப்பி வைத்தார். ரம்ஸிக்கு எதிராக ICCPR சட்டத்தின் கீழும் கணனிவழிக் குற்றங்கள் சட்டத்தின் கீழும் முதல் தகவல் அறிக்கைகள் நீதிமன்றத்தில் புலனாய்வுத் துறையினரால் முன்வைக்கப்பட்டன.

ICCPR சட்டத்தில் உள்ள மிகப்பெரும் சிக்கல் - பிணை வழங்கும் அதிகாரம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு இல்லாமையும் அதனாலேயே பொலிஸ்தரப்புக்கு அதிக சாதகம் இருப்பதுமாகும். ஆனாலும் துணிச்சலான - நேர்மையான மஜிஸ்ட்ரேட்டுகள் பொலிஸ் சோடிக்கும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கான நியாயமான, பலமான ஆதாரங்களைப் பொலிசாரிடம் கோரி நிற்பர். அத்தகைய உறுதியான ஆதாரங்கள் இல்லாதபோது மஜிஸ்ட்ரேட் சந்தேக நபரை விடுவிக்க (Discharge) மட்டுமே முடியும். பிணை வழங்க முடியாது. இச்சட்டத்தின் கீழ் கைதாகும் நபர்களை முதலாவது தவணையிலேயே வக்கீல்கள் விடுவித்துக்கொள்ள வேண்டும். தவறி ரிமாண்ட் ஆகிவிட்டால் பின்னர் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது. மேல் நீதிமன்றத்தில் தான் பிணை எடுக்க முடியும். அதற்கு நிறையக் காலமும் செலவும் ஆகும். துரதிர்ஷ்டவசமாக ரம்ஸி ராசிக்கின் வழக்கில் முதல் தவணையில் இந்த வேலை சரியாகச் செய்யப்படவில்லை.

அந்த வகையில் ரம்ஸி ராஸிக் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப் பட்டுவிட்டார். இதுவரை எனக்கு எதுவும் தெரியாது. பத்தாம் தேதி மாலையே விசயம் என் கவனத்துக்கு வந்தது. நான் விசாரித்துப் பார்த்துவிட்டுச் சில பதிவுகளை முகநூலில் இட்டேன். அதன் மூலமாக ரம்ஸியின் சொந்த சகோதரர் ஒருவர் என்னுடன் தொடர்புகொண்டார். அப்போதைய சூழலில் அவருக்குத் தேவையான சில ஆலோசனைகளை முன்வைத்தேன். அடுத்த தவணைக்குக் கவனமாகக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று பொருத்தமான ஒரு சட்டத்தரணி வேண்டுமென்றும் சொன்னேன். அதற்கான சில முயற்சிகளை நான் தீவிரமாக முன்னெடுத்தேன். ஆனாலும் சிலர் அதில் தலையிட்டு எனது முயற்சிகளைத் தடுத்துவிட்டனர்.
அடுத்த தவணை ஏப்ரல் 22 இல் ரம்ஸியின் குடும்பத்தார் ஆரம்பத்தில் ஏற்பாடு செய்திருந்த சட்டத்தரணி மன்றில் ஆஜரானார். ஆனாலும் அன்று பதில் நீதவானே பொறுப்பில் இருந்த காரணத்தினால் அன்றும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. ரம்ஸி மீண்டும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுவிட்டார். அதுவரை நான் சொன்ன விடயங்களின் உண்மைத்தன்மைகளை ரம்ஸியின் சகோதரர் நன்றாக உணர்ந்து கொண்டார். அதன் காரணமாக அன்றிலிருந்து நான் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்க முன்வந்து இன்று வரை என்னுடன் சேர்ந்து பணியாற்றுகிறார்.

அந்த அடிப்படையில் கடந்த 30 ஆம் தேதி ஜனாதிபதி சட்டத்தரணி திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் ரம்ஸியின் சார்பில் மன்றில் ஆஜராகி மிகத் தெளிவாக கருத்துக்களை முன்வைத்துள்ளார். அன்றைய தினம் ரம்ஸியை விடுவிக்க முடியாதென்று எங்களுக்குத் தெரியும். முதல் தவணையில் செய்ய வேண்டியதை மூன்றாம் தவணையில் செய்ய முடியாது. காரணம் இந்த வழக்கு ஆபத்தானது. இதில் மஜிஸ்ரேட்டுக்குப் பெரிதாகத் தலையிட முடியாது. பிணை வழங்கவும் முடியாது. திரு சுமந்திரன் ஆஜராகி விடயங்களை முன்வைத்திருப்பதன் விளைவாக இப்போது இந்த வழக்குப் பொதுவெளியில் பேசப்படும் நிலைக்கு வந்துவிட்டது. எங்களுக்குத் தேவைப்பட்டதும் அதுதான். இனி மேல்நீதிமன்றத்தில்தான் பிணையெடுக்க வேண்டுமென்ற போதிலும் இப்போதுள்ள நிலையில் ரம்ஸியின் கைது விவகாரம் பொதுத் தளங்களில் பேசப்படத் தொடங்கியுள்ளது. பல்வேறு தரப்புகளிலிருந்தும் பல்வேறு முயற்சிகளும் அழுத்தங்களும் வெளிப்படலாம் என்பதால் நல்லதொரு முடிவு விரைவில் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம்.
(மீதி அடுத்த இதழில் தொடரும்)

நன்றி: நம்மவன் வாராந்த மின்னிதழ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.