கொவிட்-19 தொற்றினால் உலகில் சகல துறைகளும் முடங்கி, பொருளாதாரம் எதிர்பாராதளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை இதன் பாதிப்பு மிகக் கடுமையானது என்றே சொல்லவேண்டும். காரணம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர், அரசாங்கம் திறைசேரியிலிருந்து நிதியைப் பெற்று பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்து வருகிறது.

இதுதொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், எதிர்க்கட்சிகள் பிழையான தகவல்களை கூறிவருகின்றன. பாராளுமன்றம் நிதியொதுக்கீடு செய்யாத விடயங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. நிதியை செலவிடுவது தொடர்பில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பதிய பாராளுமன்றம் கூடியபின், நிதியை செலவிட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி கேள்வியெழுப்ப முடியும் என கூறப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பிரமரின் இந்தக் கூற்றை சவாலுக்குட்படுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 150/4ஆவது சரத்தின் பிரகாரம் பொதுத் தேர்தல் செலவீனங்களுக்காக ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து நிதியை விடுவிக்கவும் செலவிடுவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது. இதுதவிர, அரசியலமைப்பின் 150/3ஆம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு புறம்பாக, அரச சேவைகளுக்காக ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து நிதியை பெறுதல் மற்றும் செலவிடுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என மங்கள சமரவீர கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 148ஆவது சரத்துக்கு அமைவாக, ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர் அரச நிதியை செலவிடுவதற்கான முழு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு மாத்திரமே உள்ளது. புதிய பாராளுமன்றம் கூடும்வரை அரச ஊழியர்களுக்கான சம்பளத்தைக்கூட வழங்க முடியாது. ஆனால், பாராளுமன்றத்தை கூட்டாமல் எப்படிய அரச நிதியை செலவழிக்க முடியுமென்று நிரூபித்துக்காட்டுமாறு மங்கள சமரவீர ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்துக்கு வெளிநாடுகளிலிருந்து பல நிதியுதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதன்மூலம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின்போது, எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சரின் செயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த திறைசரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல, வெளிநாடுகளிலிருந்து எவ்வித கொவிட்-19 நிதியும் இதுவரை இலங்கைக்கு கிடைக்கவில்லை. ஆனால், இலங்கைக்கு 127 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கி கைச்சாத்திட்டுள்ளது. அது விரைவில் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால், அமெரிக்கா 1.3 மில்லியன் டொலர், சீனா 500 மில்லியன் டொலர், உலக வங்கி 128 மில்லியன் டொலர், ஐரோப்பிய யூனியன் 22 மில்லியன் டொலர், ஆசிய அபிவிருத்தி வங்கி 8,170,000 ரூபா கொவிட்-19 நிதியாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர உள்நாட்டிலும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நிதியுதவிகள் கிடைத்துள்ளன. முடியுமானல் அரசாங்கம் இதை மறுக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வரவு, செலவுத் திட்ட அழுத்தங்களை மக்கள் மீது திணிக்காதிருப்பதற்காக அரசாங்க உழியர்கள் தங்களின் மே மாத சம்பளத்தை அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்மூலம் அரச செலவை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தானும், ஜனாதிபதி செயலக ஊழியர்களும் சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளோம். முழு மாத சம்பளத்தையும் வழங்க முடியாதவர்கள் அரைவாசி சம்பளத்தையோ அல்லது ஒரு வார சம்பளத்தையோ அல்லது ஒருநாள் சம்பளத்தையோ வழங்குங்கள். இவ்வாறு வழங்கப்படும் பணம் திறைசேரிக்குச் சென்று அரசின் சுமையை குறைக்க உதவும் என ஜனாதிபதியின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளரின் இந்த அறிவிப்பு குறித்து அரச ஊழியர்கள் பலத்த விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதி செயலக ஊழியர்கள் மாதச் சம்பளம் பெற்றுக்கொண்டுதான் வாழ்க்கையை நடாத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இல்லை. ஆனால், அரசாங்கம் வழங்கும் ஒரு மாத சம்பளத்தை மாத்திரம் நம்பி பிழைப்பு நடாத்தும் குடும்பங்களின் பிரச்சினைகள் அரசின் மேலதிகாரிகளுக்கு தெரிவதில்லையென அரச ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வீடுகளில் சிறைப்பட்டுள்ள மக்களின் செலவீனங்கள் வழமையை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலருணவுப் பொருட்கள் வழங்கப்படும்போதும் சரி, அரசின் 5000 ரூபா நிதியுதவி வழங்கப்படும்போது சரி அரச ஊழியர்கள் உள்வாங்கப்படவில்லை. காரணம், அவர்களுக்கு நிரந்தரமான வருமானமொன்று கிடைத்து வந்தது. ஆனால், தற்போது அதையும் பிடுங்கிக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் 8ஆம் திகதி முன்கூட்டியே வழங்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த மே மாத சம்பளத்துக்காக 42 - 47 நாட்கள் வரை காத்திருக்கவேண்டும். அதிகரித்துள்ள செலவுக்கு மத்தியில் பெரும்பாலான அரச ஊழியர்கள் பலர் கடன் சுமைகளுக்கு முகம்கொடுத்தே அந்த நாட்களை கடத்தி வருகின்றனர். மே மாத சம்பளத்தின் மூலம் தங்களின் சுமைகளை குறைக்கலாம் என்று நினைத்திருந்தவர்களின் வயிற்றில் அடித்துள்ளது அரசாங்கம்.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட அத்தியவசிய சேவைகள் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்தன. இதன்போது அரச ஊழியர்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்காமல், அரச இயந்திரத்தை தொடர்ச்சியாக இயக்கிக்கொண்டிருந்தார்கள். இந்த காலப்பகுதியில் சம்பளம் வழங்குவதற்கு பணம் தேவை என்பதை காரணம்காட்டி, மின்சாரம் மற்றும் நீர் கட்டணப் பட்டியல்களும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் மீளக்கூட்டப்பட்டால் வேட்புமனுக்கள் இரத்தாகும். (அரச விடுமுறை தினமொன்றில் வேட்புமனுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், அது செல்லுபடியாகுமா என்றொரு சர்ச்சையும் இருக்கிறது.) பிரிந்துள்ள ரணில் அணியும் சஜித் அணியும் ஒருவேளை ஒன்றுசேரலாம். அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலமில்லை என்பதால், விரும்பியவாறு எதையும் செய்யமுடியாத சூழ்நிலை போன்ற கௌரவ பிரச்சினைகளால் அரசாங்கம் பாராளுமன்றத்தை கூட்டுவதை இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தை மீளக்கூட்டி, எதிர்க்கட்சியையும் இணைத்துக்கொண்டு வரவு, செலவுத் திட்டத்தை நிறைவேற்றி அரச இயந்திரத்தை சுமூகமாக இயக்குவதுடன் கொவிட்-19 தொற்றையும் வெற்றிகொள்வதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது. அரசாங்கத்தின் இந்த வறட்டுக் கௌரவத்தினால் பாதிக்கப்படப்போவது மாதச் சம்பளத்தின் மூலம் பிழைப்பு நடாத்தும் அரச ஊழியர்கள் மட்டுமல்ல முழு நாடும்தான்.

நன்றி: நவமணி 08.05.2020

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.