எமது நாட்டில் மூன்று தசாப்தங்களாக கோரத் தாண்டவமாடிய உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆவது  ஆண்டு நிறைவை நினைவு கூருகின்ற வாரத்தில் நாம் தற்போது நின்று கொண்டிருக்கின்றோம்.

வன்முறைகள் முற்றாக ஒழிக்கப்பட்டு, இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அர்த்தமுள்ள தீர்வுகளை அடைந்து , சமாதானம் நிலைநிறுத்தப்பட்டு , சௌஜன்யமான முன்னேற்றகரமான நாடாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பங்களிப்புகளை வாரி வழங்குவதற்கு எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ  அப்போதெல்லாம் பாரிய பங்களிப்புக்களை தன்னலமற்ற முறையில் வழங்கியவன் என்கின்ற வகையில் இன்றைய எமது நாட்டின் வீழ்ச்சியையும் , இழிநிலையையும் பார்த்து கனத்த மனத்துடன் எனது அனுபவங்கள் சிலவற்றினைப் பகிர்கிறேன்.

இலங்கையின் ஒரு குறித்த இனத்துக்கோ , சமுதாயத்திற்கோ என்றில்லாமல் , அனைத்து பிரஜைகளும் சமாதானத்தின் அதி உயர்ந்த பயன்களை சந்தோஷமாக திருப்திகரமாக அனுபவிக்க வேண்டுமென்பதற்காகவே பல வருடங்களாக  அர்ப்பணிப்புக்கள் நிறைந்த நடவடிக்கைகள், சிரத்தையுடனான விடாமுயற்சிகள், தியாகங்கள் என்பனவற்றினை நான் மேற்கொண்டேன்.

சமாதானத்தை நோக்கிய யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் (Cease - Fire Agreement - 2002) ஊடாக சகஜ நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நான் இதயசுத்தியுடன் மேற்கொண்ட தீரம் நிறைந்த செயற்பாடுகள் , அதற்காக அப்போது விடுதலைப் புலிகளின் கோட்டைகள்  முதல்கொண்டு குகைகள் வரை சென்று  மேற்கொண்ட பிரயத்தனங்கள் அதற்குப் பின்னரான நாட்களில் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பல ஆபத்துக்களை ஏற்படுத்தின.

அதனால் நானும் என் குடும்பமும் அனுபவித்த அச்சுறுத்தல்கள், அதிர்ச்சிகள், சங்கடங்கள்,அவமானங்கள், தியாகங்கள் மற்றும்  தொடர்ச்சியாக நாங்கள்  அனுபவித்து வந்த நிர்க்கதியான நிலை என கடந்த அந்த இருண்ட நாட்களை எண்ணும் போதெல்லாம் திக்கென்று இரத்தம் உறைகின்றது .

வடக்கு புலிகளுக்கும்,கிழக்கு புலிகளுக்குமிடையே ஏற்பட்ட பிளவுகளால் இலங்கை அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டு இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் முடங்கிவிடாது புதிய அரசாங்கத்தின் ஊடாகவும் (2004) சமாதான முன்னெடுப்புக்கள் தொடரவேண்டும் என்கின்ற நியதியை மனதில் கொண்டவனாகவும்,வடக்கிலிருந்து வந்த புலிகளுக்கும் கருணா அம்மானின் கிழக்கு புலிகளுக்கும் இடையே ஏற்பட இருந்த பாரிய மோதல் சூழ்நிலையை மாற்றியமைத்து, கருணா அம்மான் மற்றும் அவரது சகாக்களுடன் கிழக்கிலிருந்து கொழும்பு நோக்கிய அபாயகரமான பயணத்தினை மேற்கொண்டு சமாதான முன்னெடுப்புக்கள் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொய்வின்றி தொடர்வதற்காக எடுத்த அந்த அபாயகரமான , துணிகரமான நடவடிக்கைதான் இன்று 11 ஆவது வருடமாக நினைவு கூருகின்ற இந்த நாளுக்கு வழிசமைத்தது என்றால் அது மிகையாகாது.

இன முரண்பாடுகளாலும் , இயற்கை அனர்த்தங்களாலும்  நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல்லின மக்களும் வாழ்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக இருந்து பல தசாப்தங்களாக மாவட்டத்தின் அபிவிருத்திக்கும்,பல்லின மக்களது சமாதான சகவாழ்வுக்கான காத்திரமான பங்களிப்பினை நேர்மையான, ஊழல்களற்ற ,இனமத பேதமற்ற வகையில் பலவிதமான சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மிகவும் நிதானத்துடனும்  ,மனிதாபிமான அணுகுமுறைகளுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் மக்களுடன் கலந்து சேவைகளை ஆற்றிவருகிறேன்.

யுத்த மோதல்களின் அகோரமான பாதிப்புக்களையும், ஈடுசெய்ய முடியாத உயிரிழப்புக்களையும், இழப்பீடு செய்யமுடியாத சேதங்களையும் நேரடியாக எதிர்கொண்டு மிகவும் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும்  இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அமைவாக ,

''எவர் ஓர் ஆன்மாவை (ஒரு அபாயகரமான சூழலிருந்து காப்பாற்றி) வாழவைக்கின்றாரோ அவர் மனிதர்கள் யாவரையும்  வாழ வைத்தவர் போலாவார்...''
சூறா ''அல்மாயிதா'' பாகம் : 5, அத்தியாயம் : 32 எனும் அல்குர்ஆன் வசனத்துக்கு அமைவாக மனிதாபிமான தன்மையை முன்னிறுத்தி  ஈடுபட்டேன்.

இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து  ஓர் இக்கட்டான இருள் சூழ்ந்த நிர்க்கதி நிலையினை நானும் எனது குடும்பத்தினரும் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது, எனது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்ற நேரத்திலே அவர்களைக் கடத்துவதற்கு ஒரு குழு பின் தொடர்ந்ததை உணர்ந்த எனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மிகவும் லாவகமாகவும் , புத்திக்கூர்மையுடனும் செயற்பட்டதன் காரணத்தினால் இறை அருளுடன் கூடிய பாதுகாப்பால் பாதுகாக்கப்பட்டார்கள்.

நீங்களும், உங்களது குடும்பமும் உடனடியாக வன்னிக்கு வாருங்கள் உங்களுடன் நிறைய பேசவேண்டும் , விசாரணைகள் செய்யவேண்டும் என தொலைபேசி அழைப்புக்கள் ஊடான அச்சுறுத்தல்கள் நிதமும் வந்துகொண்டிருந்தன.

நான் புலிகள் இயக்கத்தின் இலக்குக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன் என்ற அடிப்படையில் எனக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே இருந்த எனது பல உறவினர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்களால் பின்தொடரப்பட்டு அவர்கள் ஊடாகவும் பல அச்சுறுத்தல்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. இவ்வாறான நிலையில் என்னுடன் அரசியல் ரீதியிலான தொடர்புடன் இருந்த அரசியல் பிரமுகர்கள் கூட தொடர்புகளைக் குறைத்துக்கொண்டார்கள். அவர்கள் தங்களது அரசியல் அந்தஸ்துக்களை தக்கவைத்து எதிர்கால தேர்தல்களில் சரிவுகள் ஏற்ப்படாமல் இருப்பதற்காக என்னுடைய சகவாசத்தை தவிர்ந்து கொள்ளுதல், ஒரு காரணியாக கருதியதுதான் அதற்கான  காரணமாக இருந்திருக்கலாம். என்னைப்பொருத்தவரைக்கும் நாட்டின் நன்மை கருதியே பாரிய நற்காரியம் செய்திருக்கிறேன் என்ற உணர்வே மேலோங்கி இருந்தது. இந்த உண்மையை  உணர்ந்த எனது ஆத்மார்த்தமான நண்பர்களையும் , குடும்ப உறுப்பினர்களையும் தவிர மற்றவர்களிடம்  இருந்து நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டோம்.

அந்த அசாதாரண நிலையில் நாட்டின் எதிர்கால சுபிட்சத்துக்குக் கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தை நாட்டின் நன்மையை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செய்திருக்கிறேன் என்ற திருப்திதான் என் மனதிலே நிறைந்திருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு மாற்று வழியொன்று எனக்குத் தெரியவில்லை. நாட்டைவிட்டு எனது மனைவி, மகன், மகளுடன் வெளியேறியபோது, நாங்கள் மீண்டும் தாயகம் திரும்புவோமா என்ற எண்ணம் கிஞ்சித்தும் இருக்கவில்லை. அந்த நம்பிக்கை சிறிதேனும் என் சிந்தனையில் வரவுமில்லை.

93 வயதிலே இருந்த எனது அருமைத்தாயார், ஒரு மகனாக பக்கத்தில் இருந்து பவித்திரமாக பராமரித்து கவனிக்க வேண்டிய என்அன்புத் தாயையும், உடன் பிறப்புக்களையும் , என்னை என்றும் நேசிக்கின்ற ,எனக்காக அர்ப்பணிக்கின்ற ஆயிரக்கணக்கான ஆதரவாளர் சொந்தங்களையும் விட்டு கணத்த இதயத்துடன் கண்ணீர் சிந்தியவனாக விடைபெற்ற வேளை என்னை ஆரக் கட்டித் தழுவிய எனது தாய் "அழுத கண்ணுடன் செல்லும் நீங்கள் 4பேரும் இறைவன் உதவியால் சிரித்த முகத்துடன் திரும்பி வருவீர்கள் , அதுவரை நான் உங்களுக்காக காத்திருப்பேன் என பிரார்த்தித்து வழி அனுப்பி வைத்தார்கள், அந்த ரணம் மிக்க நிகழ்வுகள் என்றும் மறந்திடாது,

இவ்வாறு எமது நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காக என்னைப் போன்றே எண்ணிலடங்கா முஸ்லிம் சகோதரர்கள் அவர்களது அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் எமது தாய் மண்ணிற்காக வழங்கி இருக்கிறார்கள்,
அவ்வாறானவர்கள் எமது இராணுவத்திலும் பொலிஸ் , சிவில் சேவைகளிலும் நாட்டிற்கு எப்போதெல்லாம்  அதி உயர் சேவைகள் தேவைப்பட்டதோ அப்போதல்லாம் நாட்டிற்கு விசுவாசத்துடன் வழங்கினார்கள்.

அகோர யுத்தத்தினால் பல நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம் பொது மக்களது உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் , பல்லாயிரக் கணக்கானோர் அகதிகளாக ஆனதுடன், பொருளாதார ரீதியான இழப்புக்களையும் எதிர் கொண்டே இருந்தது எம் சமூகம்
எவ்வாறு இருந்தாலும் நாட்டுப்பற்றுடன் , இந்த தேசத்தின் இறைமையை பாதுகாப்பதற்காக கொள்கையில் திடமாக இருந்தார்கள். எமது நாடு துண்டாடப்படாமல் தீர்வுகளை எய்வதே என்றும் எங்கள் பிரார்த்தனையாகவும் நோக்காகவும் இருந்து வந்தது.

இராணுவ , பொலிஸ் சேவையில் இருந்தவர்களும் , வட கிழக்கிலே வாழ்ந்த பொது மக்களும் இந்த நாட்டின் இறைமையை பாதுகாக்க நாட்டுப்பற்றுடன் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள் என்பதை எவரும் மறுக்கவோ ,மறக்கவோ, மறைக்கவோ முடியாது,
இந்தளவிற்கு இந்த நாட்டிற்காக ஒன்று சேர்ந்தவர்கள், எம்மக்கள். அன்று எமது நாட்டை பாதுகாப்பதற்காக எமது பங்களிப்பை எதிர்பார்த்தவர்கள், ணஅந்த கடமைகளை சாதித்துக்கொடுத்தபோது எம்மை தட்டி பாராட்டியவர்கள் , இன்று, எம்மை அடக்கி ஆண்டு ஓரங்கட்ட எத்தனிக்கிறார்கள். எமது இதயசுத்தியடன் கூடிய நாட்டுப்பற்றைகூட அற்ப்பத்தனமாக அரசியல் இலாபத்தை அடைவதற்காக ஆட்சியை பிடிப்பதற்காக, பதவிகளை தக்க  வைப்பதற்காக களங்கப்படுத்துகிறார்கள்.
எனவே இவ்வாறு ஒரு காலத்தில் முல்வேலிகள் சூழ்ந்திருந்த திறந்த தடுப்பு முகாம்களில் பணயக்கைதிகளாகவும், இயந்திர துப்பாக்கியின் மூலமாக நெருங்கிய உறவுகளது உயிர்களை இழந்தவர்களாகவும் நேரடி பாதிப்புகளுக்கெல்லாம் உள்பட்டவர்கள் கூட இன்று வெறுக்கத்தக்க நெருக்கடிக்குள் சிக்குண்டு துவம்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவை
எல்லாம் அற்ப்ப அரசியல் அடைவுகளை நோக்கி நகர்த்துகின்ற ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரல்

1980களின் ஆரம்ப காலத்தில் எமது நாடு முகம் கொடுத்த சூழ்நிலைக்கு நாங்கள் மீண்டும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் , இது எங்கேதான் எங்களை கொண்டு செல்லப்போகிறதோ என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

ஒரு கொடூரமான காலச்சக்கரத்தை கடந்து கொண்டிருக்கின்ற இவ்வாறானதொரு கஷ்டமான காலகட்டத்திலே நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிராமல் இது பற்றி கேள்வி எழுப்புவது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும்.
மேலும் இதன் முக்கியத்துவம் என்னவென்றால் நாம் அனைவரும் ஒற்றுமையாக பேதங்களை மறந்து, இணைந்து செயற்படுவதன் மூலமாகவே  நம் தேசத்தை கட்டி எழுப்ப முடியும்,
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக இருக்கலாம், நோய்தொற்றை முற்றாக எதிர்த்து ஒழிக்கும் செயற்பாடாக இருக்கலாம், அல்லது பொருளாதார ரீதியில் நாங்கள் தன்னிறைவை காண்பதற்கான முயற்சிகளாக இருக்கலாம், சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப் போராட்டமாக இருக்கலாம் , நிலைபேரான அபிவிருத்திகளை அடைவதற்கான முயற்சியாக இருக்கலாம் , எதுவாக இருந்தாலும் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவதன் மூலமாகத்தான் ஒளிமயமான நல்லதொரு எதிர்காலத்தை நாம் அடையமுடியும்.

நாட்டிற்காக தியாகம் செய்த தேசிய வீரர்களை நினைவுகூறுகின்ற - கெளரவிக்கின்ற இந்த வாரத்திலே நாங்கள் அனைவரும் மேலும் தீவிரமாக முன்னேற்றகரமாக சென்று, நம் சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி நம் முயற்சிகள் திருவினையாக்க நம் நல்லோர் கடந்துவந்த பாதையை மறவாது, எங்கள் எதிர்காலப்பயணம் தடம்புறளாது ஒரு ஸ்த்திரமான, சமாதனமான, சுபீட்சமான எதிர்காலத்தை  கட்டி எழுப்புவோம்,

எங்கள் மத்தியில் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக நல்லிணக்கத்தை  கட்டிஎழுப்புவதற்க்கான ஆர்வத்துடன் ஒன்றுபட்டு, நீதியை கடைப்பிடித்து நியாயத்தைப்பேணி பன்முகத்தன்மையில் சமத்துவம் பேனுவதில் பெருமிதம் கொண்டு நாங்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் என்ற அடையாளத்துடன் நம் நாட்டை கட்டி எழுப்புவோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.