(எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம் சடலங்களை புதைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. அத்துடன் சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் குரல் கொடுப்பதற்காக எம்.பி பதவி கிடைக்காமல் போகுமாக இருந்தால் அதற்காக கொஞ்சமும் கவலைப்படமாட்டேன் என ஜனாதிபதி சட்டத்தரணியும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினருமான அலி சப்ரி தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிங்களை தகனம் செய்வது தொடர்பாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பில் சிங்கள கடும்போக்கு அமைப்புகள் தெரிவித்துவரும் விமர்சனம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொவிட் 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிங்களை தகனம் செய்வது தொடர்பாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு நான் பேட்டியளித்தமை தொடர்பாக ஒருசில கடும்போக்குவாதிகள் விமர்சித்து வருகின்றனர். குறித்த ஊடகத்துக்கு நான் பேட்டியளிக்கவில்லை.ஏற்கெனவே வேறு ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் தான் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் உலக நாடுகளில் கொரோனாவினால் இறப்பவர்களை புதைக்க அனுமதிக்கையில் இலங்கையில் அதற்கு மறுப்பதாக இருந்தால் அது விஞ்ஞானபூர்வமாகவோ மருத்துவ ரீதியாகவோ உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.புதைப்பதற்கு இலங்கையில் அனுமதி வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. நான் புதிதாக எதுவும் கூறவில்லை. இந்த நிலையிலே இனவாதிகள் சிலர் இதனை பூதாகரமாக்க முயல்கின்றனர்.

மேலும் கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களை தகனம் செய்வது தொடர்பாக நான் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கத்தில் இருக்கும் யாரும் என்மீது குற்றம் சாட்டியதில்லை. ஆளும் தரப்பில் பலரும் என்னுடன் நெருங்கிய தொடர்பை வைத்துள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் கூட என்னிடம் இது பற்றி வினவவில்லை.எனது சமூகத்திற்காக நான் குரல் கொடுப்பதை அவர்கள் ஒருபோதும் தடுத்தது கிடையாது.

அத்துடன் கொரோனாவினால் இறக்கும் முஸ்லிங்களை தகனம் செய்வதற்கு எதிராக மூன்று வழக்குகள் தொடுக்கப்படுள்ளன.
சிறந்த சட்டத்தரணிகள் ஆஜராக இருக்கிறார்கள். நான் இதில் ஆஜராகவில்லை.ஏதோ ஒரு வகையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு வருமாக இருந்தால் அதனை வரவேற்கிறோம். அரசியல் ரீதியில் இந்த பிரச்சினையை தீர்க்க நான் முயன்றேன்.

என்னால் இயன்றதை மேற்கொண்டேன்.அதனை வேறு தரப்பினருக்கு செய்ய முடியாது.சிலர் ஜனநாயக வழியில் வழக்கு தொடுத்துள்ளனர். வேறு சிலர் ராஜதந்திர மட்டத்தில் தீர்க்க முயல்கிறார்கள். எமது உரிமைகளுக்காக போராடுவதில் எந்த தடையும் கிடையாது.

தற்பொழுது முஸ்லிங்கள் தொடர்பான எந்தப் பிரச்சினை வந்தாலும் என்னைத்தான் அதிகமானவர்கள் குற்றங்கூறுகிறார்கள். நான் இந்த அரசாங்கத்தின் எம்.பியோ  அமைச்சரோ கிடையாது. பல ஆயிரம் வாக்குகள் பெற்று வந்தவனல்ல. கட்சியுடன் தொடர்புபட்டிருப்பதால் என்னை தேசிய பட்டியலில் இணைத்துள்ளனர்.
என்னால் எல்லாம் செய்ய முடியாது.

கடந்த தேர்தலில் முஸ்லிங்களின் கணிசமான வாக்குகள் கிடைத்திருந்தால் இதனை விட பல விடயங்களை சாதித்திருக்க முடியும். உரிமையுடன் தலையிட்டிருக்கலாம். எமக்கு கிடைக்கும் வாக்குகளை தடுத்து விட்டு எப்படி எம்மிடம் எதிர்பார்க்க முடியும். சகல விடயங்களையும் சம்பந்தப்பட்ட தரப்பின் ஆலோசனை பெற்றே ஜனாதிபதி செய்கிறார்.

எம்மால் முடிந்ததை செய்து விட்டு இறைவனிடம் பொறுப்பு கூற வேண்டும்.
அத்துடன் சடலங்கள்  தகனம் செய்வது தொடர்பாக எமது உயர்மட்ட நிபுணர்கள் குழுவினர், ஜனாதிபதி நியமித்துள்ள 18 பேர் கொண்ட மருத்துவர் குழுவுடன் இருதடவைகள் கலந்துரையாடியுள்ளனர்.

பல்வேறு வாதங்கள் இடம்பெற்றன. புதைப்பதால் நீரினூடாக பரவலாம் என சந்தேகத்தை முன்வைத்தார்கள்.ஆனால் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.

எமது நியாயங்களை அவர்கள் ஏற்பதாக இல்லை. இந்த மருத்துவ குழுவுக்கு மாற்றமாக ஜனாதிபதியால் செயற்பட முடியாது. புதைக்க இடமளிக்காததில் விஞ்ஞானபூர்வ காரணம் எதுவும் கிடையாது என்பதே எமது நம்பிக்கை. இந்தக் குழு அனுமதித்தால் புதைக்க தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஜனாதிபதியும் பிரதமரும் கூட கூறியுள்ளனர்.

அத்துடன் அரசாங்கத்தின் தேசியப்பட்டியலில் எனக்கு பெரிய ஆசையோ எதிர்பார்ப்போ கிடையாது. சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எம்மால் முடிந்ததை செய்யவே முயல்கிறேன்.

கடும்போக்காளர்கள் விமர்சிப்பார்கள் என்பதற்காக நான் வாய்மூடி இருப்பதை யாராவது விரும்பினால் அது நடக்காது.

எனது சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் பேச வேண்டிய நேரத்தில் முன்வந்து பேசுவேன்.
அதனால் எனக்கு தேசிய பட்டியல் வாய்ப்பு கிடைக்காமல் போகுமாக இருந்தால், எந்த கவலையும் கிடையாது.அவ்வாறு எதுவும் நடக்காது.ஜனாதிபதியும் பிரதமரும் என்னுடனே உள்ளனர். எனது சமூகத்திற்காக பேசுவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.