மறைந்த கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி மற்றும் எம்.ஐ.எம் நளீம் ஹாஜியார் ஆகியோர் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் இரு கண்களாக மதிக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிது காலம் சுகயீனமுற்ற நிலையில் இன்று (19) காலை காலமான தலைசிறந்த முஸ்லிம் கல்விமான் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி அவர்களின் மறைவையொட்டிய அவரது அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரித்தானியாவில் கலாநிதிப் பட்டம் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபு - இஸ்லாமிய நாகரீகத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கலாநிதி எ.எம்.ஏம். ஷுக்ரியின் திறமைகளை சரிவர அடையாளம் கண்டுகொண்ட கொடை வள்ளல் மர்ஹூம் நளீம் ஹாஜியார், தமது நீண்ட கால கனவான ஜாமிஆ நளீமியா கலாபீடத்தை நனவாக்க அன்னாரை உறுதுணையாகக் கொண்டார்.
அவர்கள் இருவரினதும் உன்னதமான பங்களிப்பின் பயனாக சமயக் கல்வியையும், உலகக் கல்வியையும் ஜாமிஆ நளீமியாவில் ஒருசேர கற்றுத் தேறிய அறிஞர் பரம்பரையொன்றே உருவாகியது. அவர்கள் நாடளாவிய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் ஆற்றிவரும் பணிகள் அளப்பிரியன.
மறைந்த கலாநிதி ஷுக்ரி சிறந்த ஆய்வாளராவும், சிந்தனையாளராகவும் விளங்கினார். இலங்கை முஸ்லிம்கனைப் பற்றிய அவரது வரலாற்று நூலும் ஏனைய நூல்களும் அரிய பல தகவல்களைத் தருகின்றன. “இஸ்லாமிய சிந்தனை“ அவரது எண்ணக்கருவில் உதித்தி சஞ்சிகை ஆகும்.
வெளிவாரிப் பட்டங்களுக்கு அப்பால் ஜாமிஆ நளீமியா கலாபீடத்தை பல்கலைக்கழக பட்டம் வழங்கும் நிறுவனமாக மேலும் தரமுயர்த்துவதற்கு தமது வாழ்வின் இறுதிவரை அயராது முயற்சித்த ஒருவராக மறைந்த கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரியை நான் காண்கின்றேன்.
நான் உயர்கல்விக்கு பொறுப்பான அமைச்சராக பதவி வகித்தபோது, என்னை அமைச்சிலும் இல்லத்திலும் சந்தித்து பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படும் அந்த கைங்காரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுகொண்டார், தொலைபேசியிலும் தொடர்புகொண்டிருந்தார்.
அதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துகொண்டிருந்த நிலையில், சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அவரது வாழ்நாட்களில் அது நிறைவேறாமல் இருந்தது அவரை மிகவும் கவலையில் ஆழ்த்தியிருந்தது. ஜாமிஆ நளீமியா மீது அவருக்கு இருந்த அந்த கடைசி ஆசை நிறைவேற அல்லாஹ் அருள்புரிவானாக.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் காலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி அவர்களுக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸுல் அஃலா சுவன வாழ்வை வழங்குவானாக.
அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், ஜாமிஆ நளீமியா வாரிசுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.