அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பானது இவ்வருடத்திற்கான தனது செயற்றிட்டங்களை ஆரம்பித்து வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறது. அதற்கமைவாக இதுவரையில் நான்கு பெரும் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதன் முதற்கட்டமாக எதிர்கால உணவுப் பற்றாக்குறை, பொருளாதார ரீதியிலான சவால்கள் ஆகியவற்றை வினைத்திறனாக முகம் கொடுக்கும் நோக்கோடு 1000 வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டத்திற்கான வழிகாட்டல்களை தேசிய சூறா சபையோடு இணைந்து  எமது அமைப்பு வழங்கி வருகின்றது. இச்செயற்றிட்டத்தில்  கணிசமான எண்ணிக்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் எம்மோடு இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது அமைப்பின் தன்னார்வ செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றிணைத்தான தன்னார்வ தொண்டர் குழுவென்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது எதிர்காலத்தில் எமது உதவி தேவைப்படும் பல்வேறு நிறுவனங்களோடு கைகோர்த்து இயங்க தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் நோக்கிலும், சமூகத்திற்கு பயனுடைய தலைப்புகளினாலான கட்டுரைகளை வழங்கும் நோக்கிலும் கட்டுரைச் செயற்றிட்டம் எம்மால் ஆரம்பிக்கப்பட்டது. இச்செயற்றிட்டத்தில் எமது தன்னார்வ தொண்டர் குழுவை சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான  பல்கலைக்கழக மாணவர்கள் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவர்களது கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையதள பத்திரிகைகள் என்பவற்றில் வெளியிடப்பட்டு வருகின்றன. அத்தோடு எமது அமைப்பின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறன.

நாட்டில் நிலவுகின்ற நெருக்கடியான இச்சூழ்நிலையானது கல்வி இணைய மயமாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எமக்கு உணர்த்தியுள்ளது. எதிர்வரும் காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள எமது மாணவர்களது நலன் கருதி கடந்தகால பரீட்சை வினாக்களை மையப்படுத்தியதான விளக்கக் காணொளிகளை எமது உத்தியோகபூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து  வருகின்றோம். இச்செயற்பாடுகளுக்கு எமது தன்னார்வ தொண்டர் குழு பாரியதொரு பங்களிப்பை வழங்கி வருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.