பெரும் புத்திஜீவியை நாடு இழந்திருக்கிறது

-ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்-


ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளரும் புத்திஜீவியுமான கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் இன்று தனது 79ஆவது வயதில் மறைந்தார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவரது இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கும் நாட்டுக்கும் பாரிய இழப்பாகும்.

கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் மார்க்கப் பணிக்காகவும் தன்னை அர்ப்பணித்த பன்முக ஆளுமை கொண்ட ஒரு பெரும் புத்திஜீவியை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்திருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுப்பதற்கு தலைமை தாங்கி இவர் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக “Muslims of Sri Lanka- Avenues to Antiquity” எனும் நூல் வரலாற்று நூல் இலங்கை முஸ்லிம்களால் நன்றியோடு நினைவுகூரத்தக்க மாபெரும் சாதனையாகும்.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக நளீம் ஹாஜியாருடன் இணைந்து இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கலாநிதி சுக்ரி இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, சமூகப் பண்பாட்டு பெறுமானங்கள் பற்றி ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், ஏ.எம்.ஏ. அஸீஸ், எம்.எம்.எம். மஹ்றூப் வரிசையில் பெரிய பங்கினைச் செலுத்திய அறிஞராகவும் விளங்குகிறார்.

ஜாமிஆவின் வெளியீட்டுப் பணியகத்தினால் வெளியிடப்படும் காலாண்டு இஸ்லாமிய சஞ்சிகையான ‘இஸ்லாமிய சிந்தனை’ யின் ஆலோசராகவும் அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்து கடைசி வரை பங்களிப்புச் செய்து வந்த கலாநதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களை சாதனைகளைப் பாராட்டும் வகையில் ஸ்ரீ லங்கா  முஸ்லிம் மீடியா போரம் அவருக்கு வாழ்நாள் சாதனைளாயளர் விருது வழங்கி கௌரவித்தது. மீடியா போரம் அதனது வருடாந்த மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க தீர்மானித்ததையடுத்து முதன் முதலில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைத்ததை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றோம்.

வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து அவரது அத்தனை நற்கருமங்களை ஏற்று அங்கீகரித்து உயர்ந்த சுவனபதியை வழங்குமாறு இந்த ரழமானின் கடைசிப் பகுதியில் பிரார்த்திப்போமாக!

என்.எம். அமீன்
தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.