(சுடர் ஒளியின் முன்னாள் ஆசிரியர் சிவா ராமசாமி)

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் “சுடர் ஒளி” மாலைப் பத்திரிகையின் தலைப்பைப் பயன்படுத்தி போலியாக செய்திகள் உலாவருகின்றன.

அதன் முன்னாள் ஆசிரியர் என்ற வகையில் அதன் மீதான அக்கறையின்பால் இவை தொடர்பில் நேற்றிரவே யாழில் உள்ள நண்பர் பிரபாவுடன் பேசினேன். இதனை கவனத்திற் கொள்வதாக அவரும் உறுதியளித்தார்.

அதேசமயம் சற்றுமுன்னர் என்னை தொடர்புகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த போலிச் செய்திகளை மறுத்தார்.
அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு, “எமது சமூகத்தில் தொடக்க நிலையிலுள்ள இனவாதமானது எமது தாய் நாட்டின் மக்களுக்கு மத்தியில் இன, மத, சமூகப் பிரிவினைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இது எமது தேசிய நலனுக்கு எதிரானதும், அதற்கு குந்தகம் விளைவிப்பதும் ஆகும். மனிதத் தன்மைக்கும், உயர் மனித விழுமியங்களுக்கும் கூட அது எதிரானது.

எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாதச் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை நம் அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியவை. இத்தகைய வெறுக்கத்தக்க செயற்பாடுகள் கௌதம புத்தரின் உன்னத போதனைகளுக்கும் முரணானவை ஆகும்.

ஆசிர்வதிக்கப்பட்ட அந்தப் போதனைகளுக்கு தவறான அர்த்தம் கற்பிப்பதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் அவற்றுக்கு எதிரான குற்றமாகவும் தேசத்துரோகமாகவுமே அமையும்.” என்றார் சஜித்.
அரசியல் கட்சிகளின் தலைவர்மாரை நேரடியாக விமர்சனம் செய்வது நாகரீகமாக கேள்விக்குட்படுத்துவதே ஜனநாயகப் பண்பு.

அதைவிடுத்து போலியான செய்திகளை தயாரிப்பது, போலிப் பிரசாரங்களை மேற்கொள்வது நல்லதல்ல, இப்படிச் செய்வதும் அந்த அரசியல் பிரமுகர்களை மேலும் விளம்பரப்படுத்தும்.
எனவே இவ்வாறான வேலைகளைச் செய்வோர் ஒரு தடவை அங்கொடை வைத்தியசாலையில் மனநல பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது.

அது நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லது..!
(ஒரு தகவலுக்காக அந்த போலிச் செய்திகளை இணைத்துள்ளேன் )




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.