ஓர் ஊரில், ஒற்றைக் கால் முடமான மனிதரொருவர் வாழ்ந்து வந்தார். ஆரோக்கியமான காலினால் கைத்தடியின் உதவியோடு ஓரளவு நடமாடுவார். ஆனால் போக வேண்டிய எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாமல் தவிப்பார்.

அதே ஊரில் கண் பார்வையிழந்த ஒருவரும் இருந்தார். எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் அவரால் போய் வர முடியும். ஆனால் வழி தெறியாமல் தடுமாறுவார்.

இவர்கள் இருவரும் கடைத் தெருவின் ஓரத்தில் கைவிடப்பட்ட கடை அறையொன்றில் வாழ்ந்து வந்தனர்.

முடவருக்கு நிறைந்த வாசிப்புப் பழக்கம் உண்டு. விரிந்த அறிவும் விடயங்களை ஆராயும் பரந்த அகப்பார்வையும் உண்டு.

ஒரு நாள் இவருக்கு ஒரு தகவல் கிடைக்கின்றது. *தூரத்தில் உள்ள மலை உச்சியில் ஒரு பொக்கிஷம் உள்ளது* என்ற தகவல்தான் அது.

தனக்குக் கிடைக்கும் பாக்கியத்தை தன்னோடிருக்கும் குருடருக்கும் கிடைக்க வேண்டும் என அவர் விரும்பினார். இந்தத் தகவலை குருடரிடம் சொன்னார்.

குருடருக்கும் இந்த பாக்கியங்களைப் பெற்றுக்கொள்ளும் ஆவல் பிறந்தது. ஆனால் அந்த இடத்தை அவரால் தேடிப் பிடிக்க முடியாது.

ஒருவனுக்கு வழி தெரியும். போக முடியாது. மற்றவனால் போக முடியும் வழி தெரியாது.

இருவரும் ஒரு யோசனையைக் கையாளுகின்றனர். முடவரை தனது முதுகில் குருடர் சுமந்துகொள்கின்றார். முடவர் வழி காட்டுவார். குருடர் பயணம் செய்வார்.

போகும் வழியில் இரவாகி விட்டது. வீதியோரம் மரத்தடியில் இரவைக் கழிக்கின்றனர். மறு நாள் காலை அம் மரத்தடியில் இன்னும் இரண்டு மனிதர்கள் இருப்பதைக் காணுகின்றனர்.

அதில் ஒருவன் அரை ஊமை. மற்றவன் முக்காச் செவிடு. இவர்கள் இருவருக்கும் தாங்கள் செல்லும் பயணத்தின் நோக்கத்தை முடவர் கூறுகின்றார். அவர்களும் பயணத்தில் சேர்ந்துகொள்கின்றனர்.

அரை ஊமையின் மனதில் நிறைய எண்ணங்கள் தோன்றும். ஆனால் நினைப்பதை எல்லாம் பேச மாட்டான். எல்லா விடயங்களையும் கூர்ந்து கவனிப்பான். நல்லதைச் சொன்னால் ஏற்றுக்கொள்வான்.

முக்காச் செவிடனுக்கு சொல்வதும் புரியாது. சொன்னாலும் விளங்காது. எப்போதும் ஏதாவதொன்றை உளரிக்கொண்டே இருப்பான். பேசுவது பொருத்தமானதா ? இல்லையா ? என்றெல்லாம் கவனிக்க மாட்டான்.

நால்வருமாகச் சேர்ந்து காடுகள், வெளிகள், மணல்மேடுகள் என இன்னல்களை சகித்துக்கொண்டும் தடைகளைத் தாண்டிக்கொண்டும் இன்னோரன்ன சிரமங்களை அனுபவித்துக்கொண்டும் பயணிக்கின்றனர்.

இத்தனை சிரமங்களை விடவும் செவிடனின் தொந்தரவு தாங்க முடியாமல் போகின்றது. எடுத்ததுக்கெல்லாம் எந்தப் பிரயோசனமும் இல்லாத கேள்விகள் கேட்பான். சொல்வதை அரையும் குறையுமாக புரிந்துகொள்வான். பிறகு அதை விமர்சிப்பான். இவனை அழைத்து செல்வதும் பாதுகாப்பில்லை, நடு வழியில் கைவிடவும் மனமில்லை.

திடீர் என ஊமை அந்த செவிடனை பிடித்து அவனது இரண்டு கைகளையும் கட்டினான். வாயைத் திறக்க முடியாதுவாறு துணியினால் அடைத்தான். செவிடன் திக்குமுக்காடிப் போனான். ஊமை அவனை தனது கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டான்.

முடவர் வழிகாட்ட, குருடர் முன்னே செல்ல, ஊமை இவர்களைப் பின்தொடர, அவனது கைப்பிடிக்குள் இருந்த செவிடனுமாகச் சேர்ந்து மலையின் உச்சியை அடைகின்றனர்.

தாம் எதிர்பார்த்து வந்த அரும் பொக்கிஷத்தைக் கண் குளிர கண்டனர். அதன் பாக்கியங்களை மனம் மகிழ அனுபவித்தனர். நீடூழி காலம் நிறைவான இன்பத்துடன் வாழ்ந்தனர்.

 ~ ~ ~  ~ ~ ~  ~ ~ ~  ~ ~ ~  ~ ~ ~

இவர்களைப் போல ஒவ்வொரு சமூகத்திலும் நாலு வகை மனிதர்கள் இருப்பார்கள்.

1. அறிஞர்கள் :
போகும் வழி, போக வேண்டிய இடம், கிடைக்கும் பாக்கியங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அதனை அவர்களினால் எளிதில் அடைந்துவிட முடியாது. ‘சமூக அங்கீகாரம்’ எனும் கால் சுகமாக இருந்தாலும் ‘அதிகாரம்’ என்ற கால் பலவீனமாக இருக்கும்.

2. அரசியல்வாதிகள் :
பாக்கியங்களைப் பெற வேண்டும் மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற ஆவல் இருக்கும். அங்கீகாரம் + அதிகாரம் இரண்டு கால்களும் சுகமாக இருக்கும். ஆனால் வழி தெரியாமல் தடுமாறுவார்கள்.

3. நியாயவாதிகள் :
நிறைய சிந்திப்பார்கள். குறைவாகப் பேசுவார்கள். நடப்புக்களை அவதானிப்பார்கள். தக்க சமயத்தில் சரியான செயலைச் செய்வார்கள்.

4. வீணர்கள் :
சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்குபவர்கள். சொல்வதை விளங்கிக்கொள்ள மாட்டார்கள். அரையும் குறையுமாகக் செவியுற்றதை வைத்து விமர்சனமும், விதண்டாவாதமும் செய்வார்கள்.

இந்த நான்கு மனிதர்களில் நான் யார் ? என்ற கேள்வியை நம் ஒவ்வொருவரும் நமது நெஞ்சில் கைவைத்து கேட்டுக்கொள்வோம்.

- Hisham Hussain -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.