- அன்ஸிர் -

சுவிட்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர்ந்த ஜிப்ரியின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 06.05.2020 நல்லடக்கம் செய்யப்பட்டது.

இடைவெளிகளை பேணி, ஜனாஸா தொழுகையும் நடத்தப்பட்டது. சுமார் 40 பேர் இதில் பங்கேற்றனர்.

ஜிப்ரியின் மகன் ஜனாஸா தொழுகையை தொழுவிக்க, மௌலவி ஒருவர் துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

கொரோன மைய்யத்து என்பதால், குளிப்பாட்ட அனுமதியில்லாத நிலையில், ஜனாஸாவுக்கு அவரது மகன் தையமம் செய்து, ஜனாஸாவை தக்பீர் கட்டச் செய்தார்.

இதன்போது மகன் எந்தவித சிறப்பு ஆடைகளும் அணியவில்லை என்றபோதும், கைகளுக்கு மாத்திரம் கையுறை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சடலங்கள் வைக்கப்படும் சாலையிலிருந்து, ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் மையவாடிக்கு, காரில் ஜனாஸா கொண்டு வரப்பட்டது.
காரில் இருந்து ஜனாஸா வைக்கப்பட்டிருந்த பெட்டியை, இலங்கை சகோதரர்கள் கையேற்று தூக்கிச்சென்று கபுறில் வைத்தனர்.

சாதாரண கபுறுகள் எப்படி வெட்டப்படுமோ, அதேபோன்றே மர்ஹும் ஜிப்ரியின் ஜனாஸா அடக்கப்பட்ட கபுறும் வெட்டப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்ற சகோதரர்கள், ஜனாஸாவை கபுறுக்குள் வைத்த பின்னர், தமது கைகளால் கபுறுக்குள் ஒரு பிடி மண்ணை அள்ளிப் போட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த, சகோதரர் முயீஸ் வஹாப்தீன் மர்ஹும் ஜிப்ரி குறித்த சில நினைவுகளை, இங்கு பகிர்ந்து கொண்டார்.

பொலிஸார் சிலர் பிரதான வாயிலுக்கு அருகில் நின்றிருந்தனர். பிரதேச ஊழியர்கள் மற்றும் மையவாடி பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் சிலரும் அங்கு காணப்பட்டனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவரின் உடலை, நல்லடக்கம் செய்யலாமென உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அறிவித்துள்ளமையும், WHO நிறுவனமும் ஜெனீவா நகரிலேயே உள்ளமையும் இங்கு மேலதிகத் தகவலாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.