சமூக மாற்றத்துக்கான புலமைத்துவ முக்கியத்துவத்தை
உணர்த்தும் கலாநிதி சுக்ரி அவர்களின் மறைவு
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகர் அஞ்சலி
நமது கல்வி முறைமை என்பது புள்ளிகளைப் பெற்று வெற்றிகளைப் பெற்றதாக சத்தமிட்டுக் கொள்வதுதான். உண்மையில் கற்ற கல்வியின் வெற்றி என்பதை அதனூடாகப் பரீட்சையில் பெற்ற வெற்றியை விட அந்த அறிவைக் கொண்டு சமூக மாற்றத்திற்காக வழங்கல் செய்யப்பட்ட விடயங்களைக் கொண்டே அளவீடு செய்ய முடியும்.
கலாநிதி சுக்ரி எனும் புலமைத்துவ ஆளுமையின் மறைவில் இலங்கை முஸ்லிம் சமூகம்
அத்தகைய ஒரு அளவீட்டை செய்வதன் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களோடு இணைந்து இலங்கை வாழ் மலையகத் தமிழ் சமூகத்தின் சார்பில் எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா விடுத்திருக்கும் அஞ்சலி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
அவரது அஞ்சலி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமூக மாற்ற செயன்முறைக்கான கல்விப்புலமைத்துவ தேவைப்பாட்டை உணர்ந்து நிற்கும் மலையகத் தமிழ் சமூகத்தின் ஒருவனாகவே கலாநிதி சுக்ரி அவர்களின் மறைவினை அடுத்ததான முஸ்லிம் சமூகத்தின் பிரதிபலிப்பை என்னால் உணர முடிகிறது. அவரது துறையானது என் போன்றவர்கள் அவருடனான நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தும் சூழல்களை உருவாக்காதபோதும் எனது நட்பு வட்டத்தின் இஸ்லாமிய நண்பர்கள் தோழர்கள் அவர் பற்றி சிலாகித்து உரையாடுவதை அவதானித்து வந்துள்ளேன்.
நண்பர் சிராஜ் மஷ்ஷூர் அவருடன் ஒரு நீண்ட உரையாடலைச் செய்துள்ளதாகவும் அதனை நண்பர் ஹசீன் வீடியோ தொகுப்பாக்கிக் கொண்டிருப்பதாகவும் ஒரு முக நூல் பதிவு வந்தபோது, அத்தகைய ஒரு நேர்காணல் பதிவிடப்படும்போது அதனை முழுமையாக பார்க்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்தேன். சிராஜ் எவ்வாறு உரையாடல் நிகழத்தியிருப்பார் எனும் அனுமானம் ஒன்று என்னிடத்தில் ஏற்பட்டிருந்தது. அதே போல நண்பர் ஹசீன் என்னிடம் ஒரு நீண்ட உரையாடல் பதிவு செய்தபோது அவரது ஆளுமையையும் அறிவேன். எனவே அந்த வீடியோ மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது என்பேன். இன்னும் அது நிறைவு பெறவில்லை எனும் மனக்குறையை அவர்களின் இன்றைய பதிவுகளில் காண முடிகிறது.
எங்களது முதல் டாக்டர் எனும் எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களது பதிவும் அஷ்ரப் சமட், அஜாஸ் போன்ற ஊடக நண்பர்களின் பதிவும் அவர்பற்றிய பல்பரிமாணப் பக்கங்களை காட்டி நிற்கின்றன. நண்பர் அஷ்ரப் சமட்டின் பதிவுகள் அவர் 2020 மார்ச் மாதத்திலும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் “சம்மாந்துறை” வரலாறு எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பதை காட்டுகிறது. இது இறக்கும் தறுவாயிலும் கலாநிதி சுக்ரி இயங்கி இருக்கிறார் என்பதற்கான சான்றாகிறது. இந்தக்காட்சி அவ்வாறு இயங்கிய எமது பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் வாழ்க்கையை ஒரு கணம் எனக்குள் மீட்டிச் சென்றது.
சமூகத்துக்காக எழுதுவது, இயங்குவது, செயற்படுவது ஒரு தனிக்கலை. அதற்கு அறிவையும் தாண்டிய அர்ப்பணிப்பு மனது மிக அவசியம் ஆகிறது. நாம் கலாநிதி ஆகிவிட்டோம் என்ற “ லேபிளுடன்” பண சம்பாத்தியத்துக்கு அதனைப் பயன்படுத்திக்கொள்வதும் அல்லது பணம் செலவிட்டு கலாநிதி ஆகிக் கொள்வதும் சமகாலத்தில் நம் கண் முன்னே அரங்கேறும் காட்சிகள் தான். இதே சமகாலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கற்றுத்தேர்ந்து தான்சார்ந்த சமூகத்தின் முன்னோக்கிய நகர்வுக்காக அந்த அறிவை அர்ப்பணிப்பாக்குவதற்கு முதலில் விசாலமான மனது வேண்டும். அந்த விசால மனதின் விலாசங்களாகவே இன்றைய நாள்முழுவதும் முகநூலில் உலாவி வரும் கலாநிதி சுக்ரி அவர்களுக்கான அஞ்சலி குறிப்புகள் அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது. அந்த ஆயிரமாயிரம் இதயங்களோடு இணைந்து அவருடைய ஆன்மா அவரது இறை நம்பிக்கையின் எல்லைகளை அடைய நானும் அஞ்சலிக்கிறேன்.
சமூக மாற்றத்துக்கான புலமைத்துவ முக்கியத்துவத்தை உணர்த்தும் கலாநிதி சுக்ரி அவர்களின் மறைவு இன்னும் ஆயிரமாயிரம் சுக்ரிகள் உருவாகவேண்டும் எனும் உந்துதல் செய்தியை எம்மிடையே விட்டுச் செல்வதாக உணர்கிறேன்.
அஞ்சலிகளுடன்
திலகர்
19/05/2020

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.