மனிதனின் இறப்பும், பிறப்பும் இறைவன் நிர்ணயித்த விதிகள். அவை நடந்தே தீரும். எமக்கு சிறுவயது முதல் அல்குர்ஆனைக் கற்பித்த ஸாலிஹ் ஆசிரியர் அவர்கள் இன்று காலமானார்கள். சாலிஹ் ஆசிரியரை ஊரில் பொதுவாக சாலி மாஸ்டர் என்பது அழைப்பது வழமை.

மூன்று தசாப்தங்களாக ஆசிரியராக இருந்து சிறந்த மாணவர்களை உருவாக்கிச் சென்றவர். பலருக்கும் அவர் ஆசிரியராக இருந்தாலும் எனக்கும், எனது குடும்பத்தவரகளுக்கும்,சம வயது நண்பர்களுக்கும் உஸ்தாதாக  இருந்தவர்.

 காலை முதல் பிற்பகல் வரை பாடசாலையின் உப அதிபராகவும், மாலைநேரத்தில் குர்ஆன் மத்ரஸாவில் .உஸ்தாதாகவும் இருந்தவர்.

பாடசாலை விட்டதும் வீட்டிலிருந்து குர்ஆன் மத்ரஸாவுக்கு ஓடோடிச் செல்வோம்.
 கொஞ்சம் தாமதமாகிவிட்டாலும் அவரது பிரம்பு நினைவில் வரும்.

 மத்ரஸாவிற்கு  எல்லோரும் வந்து சேர்ந்தவுடன் ' அருளாளன் அன்புடையோன் அல்லாஹூவின் கருணை பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே' என்ற பைத்துடன் அன்றைய குர்ஆன் மத்ரஸா ஆரம்பமாகும்.

அழுத்தம் திருத்தமாக குர்ஆனை ஒப்புவிக்க வேண்டும், தஃலிமுல் குர்ஆன் முதல் 30ம் ஜூஸ் வரை ஓதும் சகல மாணவர்களும் இருப்பார். சரியான முறையில் ஒத சிரமப்படுவோருக்கு மேல் ஜூஸ் மாணவர்கள் பொறுப்பாக ஒப்படைப்பார்.

சந்தர்ப்ப துஆக்களை அனைவரும் மனனம் செய்ய வேண்டும், சூரா யாஸீன் சூரா றஹ்மான், சூரா வாகியா, சூரா முல்க்  போன்ற சூறாக்களை அவரது முயற்சியால் பெரும்பாலான மாணவர்கள் மனனமிட்டிருந்தார்கள். அம்ம ஜூஸ் ஐ தமிழ்மொழிபெயர்ப்புடன் மனனம் செய்ய வைத்தார்கள்.

இதற்கு மேலதிமாக மாணவர் மன்றம் போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கி எமது கலைத் திறமைகளை வெளிப்படுத்த உதவினார்கள்.

குர்ஆன் மத்ரஸாவில் சரியான முறையில் கற்பத்தால்  இஸ்லாம் பாடத்தில் A என்ற அதி திறமைச் சித்தியை பெறுவது இலகுவான விடயம் என்பதை அவர்கள் நிரூபித்துக்காட்டிவிட்டார்கள்.

அவர் புகுட்டிய சன்மார்க்கக் கல்வியால் இன்று வரை நன்மையடைந்து கொண்டிருக்கின்றோம்.

 புனித ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் அவர்கள் இறையடிசேர்ந்துவிட்டார்கள். வல்லநாயன் அன்னாரின் சேவைகளை ஏற்று  ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக. அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் இறைவன் அருள்புரிவானாக

ஆமீன்

- பஸ்ஹான் நவாஸ் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.