'கொவிட் 19க்கு எதிராக ஒன்றுபடுவோம்' என்ற தலைப்பில் 2020 மே மாதம் 04ஆம் திகதி இடம்பெற்ற அணிசேரா அமைப்பின் இணையவழி மூலமான மாநாட்டில் இலங்கை சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி
மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை.
மேதகையீர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கம்.
முதலில், நவீன காலத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான சவால்களில் ஒன்றை எதிர்கொள்வதற்காக, இந்த உச்சிமாநாட்டை நடத்துவதற்காக சரியான நேரத்தில் முன்னெடுப்புகளை செய்த, அணிசேரா இயக்கத்தின் தலைவரான அசர்பைஜானின் தலைவர் மேதகு இலாம் அலியேவை வாழ்த்துகிறேன்.

COVID -19 ஐ முறியடிப்பதில் உலகளாவிய ஒருமைப்பாடு, ஒற்றுமை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பல்தரப்பு ஒத்துழைப்புக்கு ஆதரவாக இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கொடிய வைரஸை எதிர்த்துப் போராடுவதிலும், கற்றுக்கொண்ட சிறந்த நடைமுறைகள் மற்றும் படிப்பினைகளைப் பகிர்ந்து கொள்வதிலும் உலகளாவிய கூட்டு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க அணிசேரா உறுப்பு நாடுகளுக்கு இந்த உச்சிமாநாடு ஒரு முக்கியமான தளமாக அமையும் என்று இலங்கை உறுதியாக நம்புகிறது.
தொற்றுநோய்களின் போது அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இலங்கையிலும் உலக அளவிலும் உள்ள முன்னணி சுகாதார மற்றும் அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகத்திற்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொற்றுநோயிலிருந்து நமது நாடுகளுக்கும் மக்களுக்கும் ஏற்படும் பேரழிவு தரும் சுகாதார பாதிப்புகள், மனிதாபிமான நெருக்கடி, பொருளாதாரங்களின் பேரழிவு மற்றும் சமூக மற்றும் உளவியல் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவற்றால் இலங்கை ஆழ்ந்த கவலையில் உள்ளது.
எனவே, இந்த உச்சிமாநாட்டின் பிரகடனத்தை அங்கீகரிப்பதில் இலங்கை மகிழ்ச்சியடைகிறது.
அவசர தேவைகள் குறித்து நன்கொடையாளர்களை உணர்த்துவதற்காக உறுப்பு நாடுகளின் அடிப்படை மனிதாபிமான மற்றும் மருத்துவ தேவைகள் குறித்த தரவுத்தளமொன்றை தொகுக்க ஒரு அணிசேரா செயலணியை நிறுவுவதற்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முன்னெடுப்பை இலங்கை அங்கீகரிக்கிறது.
COVID -19 உலகளாவிய மனிதாபிமான பதிற்குறி திட்டம்' மற்றும் ஐக்கிய நாடுகளின் COVID -19 பதிற்குறி மற்றும் மீட்பு நிதியத்தை நிறுவுவதை நாங்கள் பாராட்டுகிறோம்.
தொற்றுநோய்க்கான உலகளாவிய மறுமொழியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் WHO இன் முயற்சிகளையும் இலங்கை ஆதரிக்கிறது.
COVID -19 அச்சுறுத்தலை இலங்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் பரிசோதனைகளில் 3வீதம் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் 0.97வீதம் என்ற மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது.

பெப்ரவரி மாத ஆரம்பத்தில், தொற்றுநோய் பரவுவதைக் கண்காணிப்பதற்கும், வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முக்கிய சுகாதாரப் பணியாளர்கள், உயர்மட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு பணிக்குழுவை எனது அரசாங்கம் நிறுவியது.
முதல் கொவிட் -19 இலங்கை நோயாளி மார்ச் 11 அன்று அடையாளம் காணப்பட்டார். ஆரம்ப நோயாளிகள் பல நாடுகளிலிருந்து வந்த இலங்கையர்கள். அப்போதிருந்து, பாதிக்கப்பட்ட 717 பேர் கண்டறியப்பட்டுள்ளனர், 183 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர், 527 பேர் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றனர். இந்த நபர்களில் பெரும்பாலானோர் அறிகுறியற்றவர்கள்.
நாங்கள் சில சிறப்பான, தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்: ஆயுதப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவுதல் மற்றும் தொடர்பு கண்காணிப்பு செய்ய அரச புலனாய்வு சேவைகள், பொலிஸ் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரை அனுப்புதல். இந்த இரண்டு நடவடிக்கைகளும் இலங்கைக்கு இந்த தொற்றுநோயை சமாளிக்க உதவியது, சுகாதார அதிகாரிகள் உகந்த மட்டத்தில் செயல்பட உதவுகிறது.

வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கண்டறியப்பட்ட போதெல்லாம், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட நபர்களின் விவரங்களைக் கண்டறிய தொடர்பு கண்டுபிடிக்கும் முறை பயன்படுத்தப்பட்டது. அடையாளம் காணப்பட்டவுடன், அத்தகைய நபர்கள் அனைவரும் சிறப்பாக நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் அல்லது அத்தகைய நபர்களை சுய தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு முழுப் பகுதியும் தொற்று பரவியுள்ளதாக கண்டறியப்பட்டால், அத்தகைய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. இதுவரை அடையாளம் காணப்பட்ட 31 கிளஸ்டர்களில், 27 முற்றிலும் நடுநிலையானவை, மற்ற 4கிளஸ்டர்கள் பொது மக்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் கடுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
விரிவான பி.சி.ஆர் பரிசோதனை உள்ளதுடன், சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து பி.சி.ஆர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் நன்கு நிறுவப்பட்ட தடுப்பு பொறிமுறையை உள்ளடக்கிய ஒரு சிறந்த இலவச சுகாதார முறையால், பொது சுகாதார செயல்முறைகளைப் பயன்படுத்தி இந்த கொடிய வைரஸ் பரவுவதை இலங்கையால் கட்டுப்படுத்த முடிந்தது.
கொவிட் -19 வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய சேவைகளுக்கு உதவுவதற்காக, எனது அரசாங்கம் மார்ச் 18 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்து மக்கள் நடமாட்டத்தை தடை செய்தது.
பணிகள் ஸ்தம்பித்து வருவதால், சவாலைத் தணிக்க இலங்கை தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 
அவை,
- குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், நாள் வருமானம் பெறுவோர் மற்றும் விவசாயிகளுக்கு நிதி உதவி
- இலங்கையர்களை நாடு திரும்புவதை ஒருங்கிணைந்த முறையில் நிர்வகித்தல்.
- ஏற்கனவேயுள்ள கைத்தொழில்களை ஊக்குவிக்கும் அதேநேரம் புதிய பொருளாதார போக்குகளை உருவாக்க வர்த்தக வழிகளை ஆராய்தல்.
- விவசாயி, நுகர்வோர் மற்றும் விநியோகஸ்தரை இணைப்பது, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது மற்றும் தொலை கல்வி உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னேறுதல்.

இந்த வைரஸுக்கு பதிலளிக்க தேவையான முக்கிய மருத்துவ வளங்களை அனைத்து நாடுகளுக்கும் கட்டுப்பாடற்ற வகையில் பெறுவதையும் மேலும் அவற்றை கொள்முதல் செய்வதில் தடைகளை எதிர்கொள்ளாதிருப்பதையும் உறுதி செய்வது அவசியம்,
தொற்றுநோயினால் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் எதிர்பார்க்காத வகையில் பொருளாதார மற்றும் கடன் நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று இலங்கை ஆழ்ந்த அக்கறையுடன் குறிப்பிடுவதைப் போல, இந்த நாடுகளுக்கான கடன் நிவாரணம் மற்றும் நிதி தூண்டுதலின் தேவை முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இது சம்பந்தமாக, இலங்கை தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கான கடன் வேண்டுகோளையும், பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு அதிக நிதி உதவிகளையும் வழங்குவதற்கான உலகளாவிய முறையீடுகளில் இணைந்துகொள்கிறது.
இந்த தொற்றுநோயால் விரிவடைந்துள்ள முக்கியமான மற்றும் மாறுபட்ட பொருளாதார மற்றும் சமூக சவால்களை மத்திய வருமானம் பெறும் நாடுகளும் எதிர்கொள்கின்றன என்பதை வலியுறுத்துவது முக்கியம். எனவே, இந்த குறிப்பிட்ட கட்டத்தில் அவர்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதும் எதிர்மறையான பொருளாதார விளைவுகளைத் தவிர்க்க தேவையான நிதி உதவியை வழங்குவதும் முக்கியம்.
தேசிய மற்றும் பிராந்திய மட்டத்திலான முயற்சிகள் நெருக்கடிக்கு உலகளாவிய பதிலை பலப்படுத்துவதாக இலங்கை நம்புகிறது. சவாலை சமாளிக்கும் முயற்சிகளில் தெற்காசிய பிராந்தியத்திற்கு உதவுவதற்காக இலங்கை சார்க் கொவிட் - 19 அவசர நிதிக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது.
கொவிட் 19 தொற்றுநோய் தொடர்பாக அதன் அனுபவங்களையும் வெற்றிகளையும் சக உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள இலங்கை விரும்புகிறது.
இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக் அணிசேரா அமைப்பின்; தலைவருக்கு இலங்கையின் பாராட்டுக்களை நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் முறியடிப்பதிலும் அணிசேரா அமைப்பின் முன்னெடுப்புகளுக்கு எமது நாட்டின் ஆதரவை உறுதியளிக்கிறேன்.
நன்றி.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.