பதின்மூன்றாவது தொடர்....................

பாலஸ்தீன சிறுவர்களும், கைதிகளை விடுவிக்கும் தந்திரோபாயமும், போராளிகளின் மனோ வலிமையையும்.

பாலஸ்தீன பகுதியில் யூத இராணுவம் பொதுமக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடாத்தி முஸ்லிம்களை தொடர்ந்து அச்சநிலையில் வைத்துக்கொள்ள முற்படுவது இஸ்ரேல் உருவானதிலிருந்து இன்றுவரைக்கும் நடைபெற்று வருகின்றது.

அதிலும் குறிப்பாக அவர்கள் இலக்கு வைப்பது சிறுவர்களை. “இன்றைய சிறுவர்கள் நாளைய சந்ததிகள்” அதனால் சிறுவர்களை கொலை செய்யும்போது நாளைய சந்ததிகள் அழிந்துவிடும் என்பது அவர்களது திட்டமாகும்.

அத்துடன் ஏராளமான பாலஸ்தீன மக்களை விசாரணையின்றி இஸ்ரேலிய சிறைகளில் அடைத்து வைத்துள்ளது. அவ்வாறு அடைக்கப்பட்டவர்களில் அதிகமான சிறுவர்களும் அடங்குவார்கள். சில நேரங்களில் போராளி இயக்கங்களின் முக்கியஸ்தர்களும் இஸ்ரேலிய சோதனை சாவடிகளில் மாட்டிக்கொள்வதுண்டு.

அவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட தங்கள் உறுப்பினர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலிய இராணுவத்தினர்களை கடத்திச் சென்று இஸ்ரேலிய அரசுக்கு போராளிகள் நிபந்தனை விதிப்பார்கள்.

வேறு வழியின்றி நிபந்தனைக்கு உடன்பட்டு சிறையில் இருக்கும் போராளிகளை இஸ்ரேலிய அரசு விடுவிக்கும். இவ்வாறுதான் கைதிகளை விடுவிக்கும் தந்திரோபாயத்தினை சந்தர்ப்பம் கிடைக்கும்போது போராளிகள் மேற்கொள்வார்கள்.

சில நேரங்களில் மொசாட் அமைப்பின் முக்கியஸ்தர்களும் ஹமாஸ் இயக்க போராளிகளிடம் வசமாக மாட்டிக்கொள்வதுண்டு.

அந்தவகையில் 1997 இல் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் அவர்களை ஜோர்டானில் உள்ள அவர்களது காரியாலயம் முன்பாக கொலை செய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டது.

ஜோர்டானுடன் இஸ்ரேலிய அரசுக்கு இராஜதந்திர உறவுகள் இருந்ததனால் ஜோர்டானுக்குள் சென்று துப்பாக்கி தாக்குதல் நடாத்தினால் அது உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காக கனடா நாட்டு கடவுச்சீட்டுடன் இரண்டு மொசாட் உளவாளிகள் இரசாயன பதார்த்தை காலித் மிஷால் மீது தெளித்து கொலை செய்வதற்கான திட்டத்தை இஸ்ரேல் மேற்கொண்டது.

காலித் மிசால் அவர்கள் எப்போதும் தனது பாதுகாப்பு விடயத்தில் மிகவும் அவதானமாக இருப்பவர். சாதாரண நபர்களையும் சந்தேகப்படுபவர். அதேபோன்று தன்னை நெருங்கிய இரண்டு மொசாட் உளவாளிகள் மீதும் சந்தேகம் கொள்ளும்போதே காரியம் முடிந்துள்ளது.

உடனடியாக காலித் மிஷாலின் மெய்ப்பாதுகாவலர்கள் மிகவும் துரிதமாக செயல்பட்டதனால் இரண்டு இஸ்ரேலிய கொலையாளிகளையும் மடக்கிப் பிடித்தனர். காலித் மிஷால் கோமாநிலைக்கு சென்றார்.

பிடிபட்ட இரண்டு மொசாட்டின் கொலையாளிகளும் சாதாரணமானவர்கள் அல்ல. விசேட பயிற்சி பெற்றவர்கள். இது இஸ்ரேலுக்கு பாரிய தோல்வியாகும். இவர்கள் இருவரையும் ஹமாசுக்காக ஒரு கேடயமாக ஜோர்டான் அரசு பயன்படுத்தியது.

ஏற்கனவே இஸ்ரேலினால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹமாஸ் இயக்க தலைவர் ஷேக் அஹமத் யாசீன் அவர்களையும் இன்னும் பல ஹமாஸ் உறுப்பினர்களையும் விடுவிக்குமாறு விதித்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அவர்களை இஸ்ரேலிய அரசு விடுவித்தது.

அவ்வாறு விடுவிக்கப்பட்ட ஹமாஸ் இயக்க தலைவர் ஷேக் அஹமத் யாசீன் அவர்களை 2004 இல் இஸ்ரேல் விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடாத்தி கொலை செய்தது. அதன்பின்பு புதிய தலைவராக அப்துல் அஜீஸ் ரன்திசி தெரிவு செய்யப்பட்டார். அவரையும் அதே ஆண்டு இஸ்ரேல் கொலை செய்தது.

1967 இல் இஸ்ரேலுடனான யுத்தத்தில் ஜோர்டான் படைக்கு தளபதியாக தலைமைதாங்கியவர் மன்னர் ஹுசைன் அவர்கள். அவரது மறைவுக்கு பின்பு ஜோர்டானில் செயல்படுவதற்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஹமாஸ் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பின்பு சிரியாவிலிருந்து இயங்கிய காலித் மிஷால் அவர்கள் அங்கு நடைபெற்ற யுத்தம் காரணமாக சிரியாவிலிருந்து வெளியேறி தற்போது கட்டார் நாட்டிலிருந்து செயல்பட்டு வருகின்றார்.

கட்டார் நாடும் ஹமாஸ் இயக்கத்தை தடை செய்து கட்டாரிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற அழுத்தத்தை சவூதி அரேபியா உற்பட சில அரபு நாடுகள் மூலமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் முயற்சி செய்தது. ஆனாலும் கட்டார் அதற்கு இணங்கவில்லை.

காலித் மிஷால் அவர்கள் “யா அல்லாஹ் ! நான் உனது பாதையில் போரிட்டு ஷஹீத் ஆவதற்குரிய பாக்கியத்தை எனக்கு தந்தருள்வாயாக” என்று பிரார்த்தித்து தனது தாயை ஆமீன் கூறுமாறு வேண்டினார். ஆனால் அவரது தாய் “நீண்ட ஆயுளுக்கு பின்பு எனது மகனுக்கு ஷஹீத் ஆவதற்குரிய பாக்கியத்தை வழங்குவாயாக” என்று பிரார்தித்தார்.

பாலஸ்தீன போராளிகளும், அதன் தளபதிகளும் எப்போதும் உயிருக்கு பயந்தவர்கள் அல்ல. மாறாக சஹீதாவதுக்கு ஆசைப்படுபவர்கள் என்பது அவர்களது வாழ்க்கை வரலாறுகளை பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகின்றது.

அவர்களுக்கு அவ்வாறானதொரு உறுதியான மனோநிலையை வழங்கிய இறைவன் மகா பெரியவன்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

தொடரும்..................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.