உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும்  மனித உரிமைகள் சாசனப் பகுதி 19ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ,ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991ஆம் ஆண்டு இந்நாளிலேயே "பத்திரிகை சுதந்திர சாசனம்"முன்வைக்கப்பட்டது.இது 1991ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தின் 26ம் ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,உலகின் சகல பிராந்தியங்களுக்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்தினதும் ,பாதுகாப்பிற்கும் ,மேம்படுத்தலிற்குமான ஆணை என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.இந் நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் "யுனெஸ்கோ கிலெர்மோகானா "உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கின்றனர்.இவ்விருது கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானா இசாசா என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.இவர் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 17ல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

உலக இதழியல் வளர்ச்சியானது 1513ல் லண்டனில் செய்திப் புத்தகங்கள் வெளியிடும் முறையினால் ஆரம்பமானது.1566இத்தாலியின் வெனிஸ் நகரில் பொது இடங்களில் அறிவுப்புக்களை ஒட்டுகின்ற முறை தொடங்கப்பட்டது.இதைப்படிக்க விரும்புவோர் கசட்டா எனும் சிறிய நாணயத்தை கட்டணமாக வழங்க வேண்டும்.இதிலிருந்து தான் பொதுமக்களுக்கான தகவல் தரும் ஆவணங்கள் கசட் என்று அழைக்கப்பட்டது.லண்டனில் உள்நாட்டுச் செய்திகளை வெளியிடும் பொருட்டு 1628 ல் டியூனல்ஸ் என்ற பத்திரிகைத் தொகுதிகள் உருவாகத் தொடங்கின.1665இல் லண்டன் மாநகரிலிருந்து ஒக்ஸ்போர்ட் கெசற் என்ற வாரம் இருமுறைப் பத்திரிகை உருவாயிற்று.காலப்போக்கில் இப்பத்திரிகை லண்டன் கெசற் என்று பெயர் மாற்றம் பெற்றது.உலகின் முதல் நாளிதழான டெய்லி கோரன்ட் என்ற பத்திரிகை அங்கிருந்து தான் தோன்றிற்று.மோர்னிங் குரோனிகல்ஸ் என்ற பத்திரிகையின் ஆசிரியரான ஜேம்ஸ் பெரி மற்றும் டய்ம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜான் வாங்டர் ஆகியோருக்கு உலகப் பத்திரிகையியல் வளர்ச்சியில் முக்கிய பங்குண்டு.இவற்றின் தாக்கத்தின் காரணமாக இந்தியாவின் கல்கத்தாவில் 1780 இல்  பெங்கல் கெசற் என்ற பத்திரிகை தோற்றம் பெற்றது.இலங்கையின் இதழியல் வரலாறு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை தொடக்கமாய் கொண்டது.1802ஆம் ஆண்டில் த கவர்மென்ட் கெசற் என்ற ஆங்கில வார இதழினை இலங்கையின் ஆள்பதி நிர்வாகம் வெளியிட்டது.அரச அறிவித்தல்கள் ,அரச விளம்பரங்களைக் கொண்ட வர்த்தமானிப் பத்திரிகையாகும் .பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை 1796ஆம் ஆண்டில் கைப்பற்றினர்.தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பிரித்தானிய அரசின் செய்திகளைக் கொண்டு செல்வதற்காக 1802 ஆம் ஆண்டில் இலங்கை அரச வர்த்தமானி என்ற பத்திரிகையை முதன் முதலாக ஆங்கிலத்தில் வெளிப்பட்டனர்.தமது குடியேற்ற நாடுகளில் இவ்வாறான பத்திரிகைகள் பிரித்தானிய அரசால் வெளியிடப்பட்டு வந்துள்ளன.1784இல் கல்கத்தா வர்த்தமானி,1780ல் சென்லூசியா வர்த்தமானி ,ஆபிரிக்கா வர்த்தமானி போன்றவையாகும்.


இலங்கை வர்த்தமானியின் முதல் இதழ் 1802 மார்ச் 15 இல் வெளிவந்தது.இது டச்சு இலங்கைக் காலத்தில் 1737இல் நிறுவப்பட்ட பதிப்பகத்தில் பிரான்சு டி புரூயின் என்பவரால் அச்சிடப்பட்டது.இதன் தமிழ்ப் பதிப்பு 1806இலும் சிங்களப் பதிப்பு 1814இலும் ஆரம்பிக்கப்பட்டது.1972ஆம் ஆண்டில் இலங்கையில் பதவியில் இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அரசு இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை அறிவித்ததோடு இலங்கை மேலாட்சியை இல்லாதொழித்தார்.இதனையடுத்து அரச வர்த்தமானி 15,011வது இதழுடன் நிறுத்தப்பட்டது.பின்னர் பதவியேற்ற ஜெயவர்தன அரசு 1978இல் புதிய அரசியலமைப்பை நிறுவியதை அடுத்து வர்த்தமானி மீண்டும் வெளியிடப்பட்டது.

கோல்புறூக் சிபார்சுகளில் காணப்பட்ட குறைகளைச் சுட்டிக்காட்டி அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் கொழும்பு வாழ் ஆங்கில வர்த்தகர் குழுவியால் 1834இல் வெளியிடப்பட்ட ஒப்ஸ்ஸவர் கொமர்சியல் அட்வடய்ஸர் எனும் இதழே இலங்கையில் வெளிவந்த முதலாவது சுதந்திர இதழாகும்.ஜோர்ச் வின்டர் இதன் முதல் ஆசிரியராக இருந்தார்.இவ்விதழே தற்போது  லேக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் ஸிலோன் ஒப்ஸவர் மற்றும் ஸன்டே ஒப்ஸவர் ஆகிய இதழ்களின் முன்னோடி இதழ்களாகும்.1836ஆம் ஆண்டு கொழும்பு ஜேர்னல் எனும் ஆங்கில இதழ் ஆள்பதி சேர் ரோபர்ட் வில்மட் கோட்டலின் அவர்களி்ன் நிருவாகத்தில் அரச அச்சகத்தின் மூலம் வெளியிடப்பட்டது.ஜோர்ச் லீ இதன் ஆசிரியராக இருந்தார்."ஒப்சவர்"இதழ் மூலம் அரசுக்கு எதிராக வெளியிடப்பட்ட அதிருப்திக்கு எதிர்க் குரலாக வெளியிடப்பட்ட  அதிருப்திக்கு எதிர்க் குரலாக இது வெளிவந்தது.சிறிது காலத்தில் நின்று விட்டது அதன் தொடர்ச்சி போல ஆள்பதி நிர்வாகத்தின் அனுசரனையுடன் 1837இல் "ஸிலோன் குரோனிகல் "ஆங்கில வார இதழ் வெளிவந்தது.1838ல் அது நின்றுவிட்டது.

மக்களாட்சியைத் தாங்கும் நான்கு தூண்களாக விளங்குவது நாடாளுமன்றம்,நீதித்துறை,நிர்வாகம்,பத்திரிகைத்துறை.இதில் பத்திரிகைத்துறையே பல காலமாக அடக்குமுறைகளைச் சந்தித்து வந்துள்ளது.அதிகாரங்களை எதிர்த்தே வளர்ந்துள்ளது.அடிக்க அடிக்க பந்து துள்ளி எழுவது போல இந்த அடக்குமுறைகளைச் சந்தித்து பத்திரிகைத்துறை எழுச்சி பெற்றதே தவிர சோர்ந்து போய்விடவில்லை.பத்திரிகையாளர்கள் புதிய வீச்சோடு தங்கள் கடமையைச் செய்து வருகின்றனர்.துப்பாக்கி முனையை விடவும் பேனா முனையே வலிமையானது என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு.அந்த வரலாற்று நாயகர்களை நாம் வரவேற்க வேண்டாமா??அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டாமா??

பத்திரிகை சுதந்திரமே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் உலக பத்திரிகை சுதந்திர நாளில் பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவளிப்போம் என்று உறுதி ஏற்றுக்கொள்வோம்.மனிதர்களின் உணர்வுகளையும் ,சிந்தனைகளையும் ,பன்மடங்காகப் பெருக்குவதன் மூலம் துடிப்பு மிக்க சமூகமாக நாம் உருவாகிறோம்.எண்ணிலடங்கா மனிதர்களின் அயராத உழைப்பால் பத்திரிகை சுதந்திரம் முன்னேறியுள்ளது.பத்திரிகையாளர்கள் எப்போதும் எல்லா நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளாகவே செயல்பட்டு வருகின்றனர்.மக்களுக்கு எதிராகச் செயல்படும் அரசுகள் பத்திரிகையாளர்களையே எதிரிகளாக நினைத்து அவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுகின்றன.


கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த  2012முதல் 2016ஆம் ஆண்டுவரை உலகம் முழுவதும் 530 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.சரியாவில் அதிகபடியாக 86பத்திரிகையாளர்கள் ,ஈராக்கில் 46பேர்,மெக்சிக்கோவில் 37பேர்,சோமாலியாவில் 36பேர் ,பாகிஸ்தானில் 30பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 29பேர்,பிலிப்பைன்ஸ்,யெமனில் தலா 21பேர்,ஆப்கானில் 20பேர்,ஹோன்டுரசில் 19பேர்,லிபியாவில் 17பேர்,வங்காளதேசம் மற்றும் உக்ரைனில் தலா 10பேர் ,பிரான்ஸில் 8பேர்,பராகுவே மற்றும் துருக்கியில் தலா 6பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
பத்திரிகையாளர் படுகாெலை என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைந்து வந்தது ஆயினும் அரபு நாடுகளில் பத்திரிகையாளர் படுகொலை தொடர்பான 36வழக்குகள் பதிவாகியுள்ளன.லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 107பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.ஆபிரிக்காவில் 2012 ஆம் ஆண்டு 26பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை குறைந்தது.2016ம் ஆண்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் எண்ணிக்கை 7ஆக தரவு உள்ளது.பன்னாட்டு அளவில் படுகொலை செய்யப்பட்ட 530 பத்திரிகையாளர்களில் தொலைக்காட்சி நிருபர்கள் 166பேர்,நாளிதழ்களில் பணிபுரிந்த நிருபர்கள் 142பேர்,வானொலியில் பணிபுரிந்தவர்கள் 118பேர் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

பத்திரிகை தர்மத்தை  பேணி வளர்க்க வேண்டும் என்று ஐ.நா மன்றம் உலக நாடுகளுக்கு அறிவுறுத்திய போதிலும் ,எந்த நாட்டு அரசும் பத்திரிகையாளர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரத் தயாராக இல்லை என்பதே உண்மை.அரசு செய்யும் தவறுகளை வெளிப்படுத்தும் பத்திரிகைகளைப் பழிவாங்கவே துடிக்கின்றன.பத்திரிகை அலுவலங்களை தாக்குவதும் ,பத்திரிகையாளர்களை இடைமறித்துக் கொலை செய்வதும் அநியாயத்தின் எல்லையாகும்.இது மக்களாட்சி விடுக்கும் அறைகூவலாகும்.மக்களின் கல்வியறிவு வளர்ச்சி பெற்றதன் அடையாளமாகவே பத்திரிகைகள் பிறப்பெடுத்தன.உலகின் எந்தத் திசையில் என்ன நிகழ்கிறது என்பதை அறியவும் ,அரசுகள் செய்யும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் பத்திரிகைகள் உதவுகின்றன.நியூஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நான்கு திசைகளின் முதல் எழுத்துக்களே வரி வடிவங்களாக அமைக்கப்பட்டுள்ளன.உலகின் நான்கு திசைகளிலும் நடப்பவற்றைக் கொண்டு வந்து தரும் பத்திரிகைகளே செய்தித்தாள் என்று அழைக்கப்படுகின்றது.

இலங்கையில் கடந்தகாலம் முதல் அண்மைக்காலம் வரை எண்ணிக்கையில் அடங்காத பத்திரிகையாளர்கள் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர்.சிலர் காணாமலேய போய்விட்டனர்.பல பத்திரிகை அலுவலகங்கள் எரிக்கப்பட்டன.இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர் ஜே.எஸ் திசைநாயகத்துக்கு 20ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது."சண்டே டைம்ஸ்"பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியவரும் ,தனி இணையத்தளத்தை நடத்தியவருமான இவர் தீவிரவாதத்தை ஆதரித்தது உறுதி செய்யப்பட்டதால் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

அரசிற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்த லசந்த விக்ரமதுங்க அவரது பத்திரிகை அலுவலகத்திற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் 9பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.27பேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.மக்களுக்காகத் தொண்டு செய்பவர்களுக்கு மரணம் என்பது எப்போதும் இல்லை .அவர்கள் பூமியில் புதைக்கப்படுவதில்லை .விதைக்கப்படுகிறார்கள் அதிலிருந்து அவர்கள் ஆயிரம் ஆயிரமாய் முளைத்தெழுவார்கள்.

இலங்கையில் ஊடகத்துறை 2016ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 வருடங்களாக கடினமான நிலைமையில் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.4 வருடங்களுக்கு முன் ஆரோக்கியமற்றதாக காணப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களினதும் ஊடகங்களினதும் நிலை எவ்வாறாயினும் இன்று இலங்கையில் ஊடக சுதந்திரமானது தொற்று நோய் போல் பரவுவும் தவறான தகவலிற்கு எதிராக போராடும் போது ஏற்படும் மிரட்டல்,தணிக்கை,சர்வதிகாரப்பிரச்சாரம்,உடலியல் மற்றும் இணைய துன்புறுத்தல் போன்ற தொன்று தொட்டு காணப்படும் சவால்களிலிருந்து மீள வேண்டும்.டிஜிட்டல் மற்றும் வழமையான ஊடகங்களில் காணப்படும் போலியான தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகள் நாடு பூராகவும் ஊடக சுதந்திரத்தை பாதிக்கின்றது.ஒழுக்கரீதியான தொழில் தகைமையுடனான ஊடகவியல் இன்றைய சூழலிற்கும் நாட்டிற்கும் தேவையான ஒன்றாகும்.நாட்டில் உள்ள மக்களும் ,அரசியல் தலைமைகளும் மனம் வைத்தால் மட்டுமே ஊடகவியலாளர்கள் காப்பற்றப்பட்டு ,ஊடக சுதந்திரத்தை வென்றெடுக்க முடியும் என்று சொல்வதில் ஜயமில்லை.

அப்ரா அன்ஸார்
ஊடகவியலாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.