அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், திங்கட்கிழமை (04) நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்திலேயே அவர் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அந்த பேஸ்புக் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் கலந்துகொள்ளாது என்று தான் எண்ணுவதாகவும் அவர்களது நிலைப்பாடுகளை அந்தந்தக் கட்சிகளே கூறவேண்டும் என்றும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளும் என்று அக்கட்சியின் செயலாளர் கூறியிருந்தாலும் அக்கட்சியின் நிலைப்பாடு மாற இடமுண்டு என்றும் எது எப்படியாயினும் மிகப் பெரும்பான்மை எம்.பிக்களே தங்கள் வசமே உள்ளனர் என்றும் அவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
“நாம் கோருவது, சபாநாயகர் தலைமையில், நாடாளுமன்றக் கூட்டம். இங்கே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டம், பிரதமர் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம். இதற்கு எந்தவித உத்தியோகப்பூர்வ அந்தஸ்தும் கிடையாது.
“பிரதமர் வேண்டுமானால், மீண்டும் ஒருமுறை கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டலாம். அல்லது அவரது ஆளும் கட்சி எம்.பிக்களை கூட்டி பேசலாம். இவை எப்போதும் நடக்கின்ற கூட்டங்கள் ஆகும்.
“ஆனால், சபாநாயகர் தலைமையில் நடைபெறும், கூட்ட நிகழ்ச்சி நிரல் கொண்ட, உத்தியோகப்பூர்வ அந்தஸ்து கொண்ட, நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசும் விடயங்களை, பிரதமர் தலைமையிலான எம்.பிக்கள் கூட்டத்தில் பேசி எதுவும் ஆக போவதில்லை.
“பிரதமரின் அழைப்பை ஏற்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நாம் கலந்துகொண்டு தெரிவித்த யோசனைகள் எதுவும் இதுவரை அரசாங்கத்தால் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதையும் கருத்தில் கொண்டுதான் நாம் எமது இந்த நிலைபாட்டை எடுத்துள்ளோம்.
“தேசிய இடர் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை, மக்கள் மத்தியில் ஏற்புடைமை பெற்று வருவதை கண்ட அரசாங்கம் பதட்டமடைந்து, அதை சமாளிக்க செய்யும் தந்திரமாகவே இதை நாம் பார்க்கிறோம். இதில் நாம் அகப்பட மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போதுள்ள அரசாங்கத்திடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளன என்று கூறியுள்ள அவர், கொரோனா நிவாரணத்துக்கு எவ்வளவு வெளிநாட்டு நிதி வந்தது, எவ்வளவு உள்நாட்டு நிதி வந்தது, அவற்றை என்ன செய்தீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்நாட்டில் உண்மையில் எத்தனை கொரொனா நோயாளர் உள்ளனர் என்றும்  எத்தனை முதற்தொற்றாளர் உள்ளனர் என்றும் ஒரு நாளைக்கு எத்தனை பேரை பரிசோதனை செய்கிறீர்கள் என்றும் பரிசோதனை செய்யும் உபகரணங்கள் இந்நாட்டில் எத்தனை உள்ளன என்றும் எத்தனை இன்னமும் தேவை போன்ற பல கேள்விகளை அந்தப் பதிவில் அவர் வினவியுள்ளார்.
இந்த அனைத்துக் கேள்விகளையும் நாடாளுமன்றத்தில் கேட்டால் பதில் கிடைக்கும் என்றும் எனவே, இந்தக் கேள்விகள் அனைத்தையும் விவாதம் செய்து, வெளிப்படையாக பேச, நாடாளுமன்றம் கூடுவேண்டும் என்று தாங்கள் கோருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.