புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த ஒருவருக்கு
மீண்டுமொரு முறை கொவிட் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜா-எல பகுதியிலுள்ள ஒருவருக்கே இவ்வாறு இரண்டாவது முறையாகவும் கொவிட் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

67 வயதான குறித்த நபருக்கு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் தடவையாக கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு மாத கால சிகிச்சைகளின் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி குறித்த நபர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 14 நாட்கள் சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட குறித்த நபர் ஏப்ரல் 30ஆம் திகதி சுகயீனமுற்ற நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை ஊடாக குறித்த நபருக்கு மீண்டுமொரு முறை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரை மீண்டுமொருமுறை ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்க தேசிய வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தமை தொடர்பில் ஐ.டி.எச் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ளடங்கிய அனைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளதாக ஜா-எல சுகாதார வைத்திய அதிகாரி அநுர அபேரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த நபர் சிறுநீரகம் மற்றும் நீரிழிவு நோய்களினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தாலியிலிருந்து வருகைத் தந்த ஒருவருடன் பழகியதை அடுத்தே, குறித்த நபருக்கு முன்னர் இந்த வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டிலுள்ள நால்வர் தற்போது சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக ஜா-எல சுகாதார வைத்திய அதிகாரி அநுர அபேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

(சிவா ராமசாமி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.