எம்.என்.எம். யஸீர் அறபாத், ஓட்டமாவடி.

உலக நாடுகள் கொவிட்–19 எனும் கொரோனா நோயினால் மரண பீதியிலிருக்க, இலங்கையில் கொரோனாவின் பெயரால் முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம் சமூகம் இன்று சோதனைகளாலும் வேதனைகளாலும் சிக்குண்டு காணப்படுகிறது. கொவிட்–19 தொற்றினால் மரணிப்பது என்ற சோதனையைவிட, மரணித்த ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற வேதனையை ஜீரணிக்க முடியாதது.

இலங்கையில் கொவிட்–19 தொற்று ஆரம்பித்த காலப்பகுதியில், முஸ்லிம் ஒருவர் மரணிக்க நேர்ந்தால் அந்த ஜனாஸாவை அடக்கம் செய்யவேண்டும் என்ற அடிப்படையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் அரசுக்கு மிக நெருக்கமான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி போன்றோரின் முயற்சியினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனையின்படி அடக்கம் செய்வதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது.

கொவிட்–19 தொற்றினால் முதலாவது முஸ்லிம் ஒருவர் மரணிக்கும் வரை, ஜனாஸாவை அடக்கம் செய்வது பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கவில்லை. சுற்றுநிரும் வெளியிடப்பட்டிருப்பதால், அரசாங்கத்துடன் அவை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்கான தேவையும் அரசியல் தலைவர்களுக்கு ஏற்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில்தான் கொவிட்–19 தொற்றினால் முதலாவது முஸ்லிம் சகோதரர் ஒருவர் மரணிக்கிறார். ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் இந்த ஜனாஸா செய்தி கிடைக்கின்றது. அப்போது ஏற்கனவே எரிப்பதற்கு அல்லது அடக்கம் செய்வதற்கு அனுமதி இருப்பதால் அதை யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், ஜனாஸாவை அடக்கம்செய்ய அனுமதிக்காமல் எரிக்கப்போகிறார்கள் என்ற செய்தி கடைசி நேரத்தில்தான் தெரியவருகிறது.

இந்த நிலமையை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் அரச உயர்மட்டங்களோடு அவசர அவசரமாக பேசிக்கொண்டிருக்கும்போதே, ஜனாஸா எரிக்கப்பட்டதாக துக்ககரமான செய்தி வந்தடைகிறது.

இறந்த உடல்களை எரிப்பது என்பது, முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜீரணிக்க முடியாததொரு விடயம். முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் அதன் நியாயங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான ஜனாஸாவை அடக்குவதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. 

இதன்பின்னர், கொவிட்–19 தொற்றினால் இறந்த உடல்களை எரித்தல் அல்லது புதைத்தல் என்ற அரசாங்கத்தின் சுற்றுநிருபம், இறக்கும் அனைவரையும் எரிக்கவேண்டும் என ஒரேயடியாக மாற்றப்படுகிறது. அடக்கம் செய்வதிலுள்ள நியாயங்களை எடுத்துவைத்து, அரசாங்கத்தின் ஈனச் செயலை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முதல் மனிதனாக பகிரங்கமாக தட்டிக்கேட்கிறார்.

அரச உயர்மட்டங்கள் மாத்திரமின்றி அரசாங்கத்தின் கவனத்துக்கும் ஜனாஸா எரிப்பு விவகாரத்தை எத்திவைக்கிறார். இனியாவது ஜனாஸாக்கள் எரிக்கப்படாமல், அடக்கம் செய்வதற்கான அனுதியைப் பெறுவதற்கு அரசாங்கத்தின் செல்வாக்குமிக்கவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களுடனும் பேசி, இவ்விடயத்தை சாதிக்கும் முயற்சிகளில் மும்முரமாக செயற்பட்டார்.

அத்துடன் இது தேர்தல் காலமாக இருப்பதால், ஒவ்வொருவரும் தங்களதும் தான்சார்ந்த கட்சியினதும் வெற்றியை இலக்காக கொண்டு மக்கள் மத்தியில் புள்ளிபோட்டுக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ரவூப் ஹக்கீம், அரசியலை ஒதுக்கிவைத்து விட்டு, எதிர்முகாம் அரசியல்வாதிகளையும் இணைத்துக்கொண்டு சமூகத்தின் முக்கிய பிரச்சினையை அரசாங்கத்துடன் பேசுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி குழு கூட்டம் கூட்டப்பட்டபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரதமருடன் பேசுவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் குழு தீர்மானித்தது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சகிதம் பிரத்தியேகமாக பேசுவதற்கான நேரத்தை ஒதுக்கி தருமாறு பிரதமரிடம் கேட்கப்பட்டது. ஆனால், அனைவரும் இருக்கத்தக்க நிலையில், பகிரங்கமாக பேசுவதற்கே பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.

ஜனாஸா எரிப்பு விவகாரம் அரசில் நோக்கோடு, இனவாத அரசியல் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், இக்கூட்டத்தில் அவ்வாறானவர்களும் கலந்துகொண்டிருக்கும்போது இதன் நியாயங்கள் புரிந்துகொள்ளப்படாது எதிர்க்கப்படலாம் என்பதாலேயே தனித்துப் பேச அனுமதி கோரப்பட்டிருந்தது.

ஜனாஸாவை அடக்கம் செய்வதிலுள்ள நியாயங்கள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகள், ஏனைய நாடுகளில் இவ்வாறு மரணிப்பவர்களை அடக்குவதற்கான அனுமதி, இறந்த உடலிலிருந்து வைரஸ் கிருமிகள் பரவாது என்பதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் போன்றன முஸ்லிம் தரப்பில் இக்கூட்டத்தில் ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டன. 

இந்த விடயத்தை ஆராய்வதற்கு, நிபுணத்துவமிக்க குழுவொன்றை நியமித்து தீர்க்கமானதொரு முடிவை எட்டுவதற்கான கருத்தாடல்கள் இடம்பெற்றாலும், அதையும் இனவாத அரசியலாக்கும் முயற்சிகளில் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றோர் ஈடுபட்டனர். அடக்கம் செய்வதிலுள்ள நியாயங்களை புரிந்துகொள்ளாமல் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜனாஸாக்களை அடக்கம் செய்தால் சிங்கள மக்கள் வீதிக்கு வருவார்கள் என்பதை காரணம்காட்டி, ஜனாஸாக்கள் எரிக்கப்பட ஆரம்பித்தன.

தனது சிங்கள வாக்குவங்கியைப் பற்றி கவலைப்படாமல், ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் தைரியமாக குரல்கொடுத்த ரவூப் ஹக்கீமுக்கு சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் வெளிக்கிளம்ப ஆரம்பித்தன. இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுக்கும் சில முஸ்லிம் தரப்பினரும், ரவூப் ஹக்கீமின் போராட்டத்தை மலினப்படுத்தி ஜனாஸா எரிப்புக்கு மறைமுக ஆதரவை வெளிப்படுத்தினர். ஒருசிலர் பகிரங்கமாகவே ஜனாஸா எரிப்பை நியாயப்படுத்தியும் இருந்தனர்.

இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை ரவூப் ஹக்கீமுக்கு இல்லை. பர்ளு கிபாயாவான ஜனாஸாவுக்குரிய கடமையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம்களின் பிரதிநிதியாக குரல்கொடுத்தார். பர்ளு கிபாயா கடமையை அவர் செய்யாவிட்டால், ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இறைவனிடத்தில் குற்றவாளிகளாக நிற்கவேண்டியேற்படும். 

இந்த விடயத்தில் ரவூப் ஹக்கீம் அரசியல் செய்பவராக இருந்திருந்தால், மற்றவர்களை விட அவர்தான் அமைதியாக இருந்திருக்கவேண்டும். காரணம், அவர் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதால் அதிகளவான சிங்கள வாக்குளை நம்பியிருக்கிறார். தனது வாக்குவங்கியை தக்கவைப்பதற்கு நினைத்திருந்தால், சிங்கள மக்களை உசுப்பேற்றுவதாக நம்பப்படும் இந்த விடயத்தில் அவர் மெளனம் காத்திருக்கலாம்.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் ரவூப் ஹக்கீம் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு முஸ்லிம் செய்யவேண்டிய கடமையையே செய்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எல்லோரும் மௌனித்திருந்தபோது, வெதும்பிய உள்ளங்களுக்கு ஆறுதலாக ரவூப் ஹக்கீமின் குரல் ஒலித்தது சற்று நிம்மதியைத் தந்தது. ஜனாஸாக்களை எரிப்பதை தடுக்கும் நோக்கில் அவர் இன்றுவரை வெளிப்படையாகும் மறைமுகமாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சமூகத்துக்கு இப்படியான பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது, ரவூப் ஹக்கீம் முதல் மனிதனாக முன்வந்து குரல்கொடுக்கும்போது அதிகமான விமர்சனங்களுக்கு ஆளாகுகின்றார். அதுவும் குறிப்பாக இது தேர்தல் காலம் என்பதால், ஜனாஸா எரிப்பை நியாயப்படுத்தி அவரின் செயற்பாடுகளுக்கு அரசியல் சாயம் பூசுவது மிகவும் வேதனையான விடயம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொருத்தளவில், ஸ்தாபத் தலைவர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் வெளிநாடுகளுடனான தனது இராஜதந்திர உறவுகளை தொடங்கினார். அதனை இன்றும் பலப்படுத்திக் கொண்டிருப்பவராக ரவூப் ஹக்கீம் காணப்படுகிறார். முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, சர்வதேச சமூகத்திடம் தைரியமாக எத்திவைப்பத்தில் அவரின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

ரவூப் ஹக்கீம் ஆளும் கட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி, சமூகம் பாதிக்கப்படும்போது தனது இராஜதந்திர நகர்வுகள் ஊடாக ஆளும் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து, முஸ்லிம்களின் விடயத்தில் கரிசணை கொள்ளச் செய்வதில் இராஜதந்திரமாக கடந்த காலங்களிலும் செயற்பட்டுள்ளார் என்பது வரலாறு.

இவ்விடயங்களில் பூரண தெளிவில்லாத ஒரு சிலரால் ரவூப் ஹக்கீம் விமர்சிக்கப்படுகிறார். ஆனாலும், தேர்தல் காலங்களில் நானும் தலைவர்தான் என்று முஸ்லிம் பிரதேசங்களுக்கு வருபவர்கள் மற்றும் இந்த அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளோ, பிரமுகர்களோ விமர்சிக்கப்படவில்லை என்பது நமக்கு ஒரு விடயத்தை உணர்த்துகிறது. 

"காய்க்கும் மரத்துக்கே கல்லடி விழும்"

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.