(Dr.Ahamed Fareed)

கனத்த மன வேதனையில் எந்தவித அரசியல் பார்வையும் அற்றவனாக இந்த பதிவை இடுகின்றேன். கொரோனாவினால் ஏற்படும் ஜனாஸாக்கள் தொடர்ச்சியாக எரிக்கப்படுவது முஸ்லிம் உம்மத்துகளின் மனங்களையெல்லாம் சுட்டுப்பொசுக்கும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டி உள்ளது.இது ஒரு முன்னுதாரணமாக காலமெல்லாம் இருந்து விடுமோ என அச்சப்பட வேண்டியுள்ளது.”தலையிடியும் காய்ச்சலும் தனக்குத்தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பார் முதியோர்.

1. ஜனாஸாக்களை கையாளுவதில் காலா காலமாக பேணப்பட்டு வரும் இஸ்லாமிய சட்ட வரையறைகளையும் கோட்பாடுகளையும் கண்டு கொள்ளாமல் நடந்து கொண்டமை.

2. உலக சுகாதார ஸ்தாபனம் ( W.H.O) தொற்று நோய் இறப்புக்களால் ஏற்படும் மனித உடல்கள் விடயத்தில் ,குறிப்பிட்டுள்ள சுற்று நிருபங்களை கணக்கில் எடுக்காமை.

3. அரசுக்கு சார்பான, எதிர்க்கட்சியுடன் சேர்ந்துள்ள , நடுநிலைபேணும் முஸ்லிம் அரசியல்கட்சிகளின் தலைவர்கள் , பிரமுகர்களுடைய கருத்துக்களும் கோரிக்கைகளும் செல்லாக்காசாக நோக்குதல்.

4. இலங்கையிலுள்ள ஜம்மியதுல் உலமா போன்ற இஸ்லாமிய வழிகாட்டும் அமைப்புகளுக்கு , ஏதோ விளக்கம் கூறி அவர்களது வாயை மூடவைத்தமை.

5. இந்நாட்டிலுள்ள பிரபல்யமான துறை சார் நிபுணர்களான  Professors களான Sherifdeen, Rizvi Sheriff, Kamaldeen உள்ளிட்ட பல பேர் அரச உயர்மட்டத்துடன் பேசியதையும் மீடியாக்களில் பார்த்தோம். ஆனால் பேசப்பட்ட விடயங்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் விளக்கம் இல்லை.

6. இஸ்லாமிய நாடுகள் சில ஆங்காங்கே விடுத்த சில கோரிக்கைகளும் செவிடன்  காதில் ஊதிய சங்கு போலாயிற்று.

இந்த சந்தேகங்களுக்கெல்லாம்  சரியான பதிலை நாட்டை ஆளுபவர்களிடம் நாட்டின் பிரஜைகள் எதிர்பார்ப்பது நியாயம்தானே? பொறுப்புவாய்ந்த கௌரவமானதாக கருதப்படும் தொழிற் சங்கத்துக்கும்  மூளைசலவை ச்செய்யப்பட்டுவிட்டனவா? அப்படி மனமாற்றம் அவர்களுக்கு ஏற்பட பின்னணி என்ன?

நாம் என்ன செய்கிறோம்?

1. ஒரு சில சகோதரர்கள்  , கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம்கள் ஒன்றுபட்டு வாக்கைப் பயன்படுத்தாதால் வந்த வினை இது என்கிறார்கள்.
2. மற்றும் சிலர் , கடந்த காலங்களில் சில முஸ்லிம் தலைவர்களும்  ,இயக்கங்களும் மேற்கொண்ட இன ரீதியான தீவிர பிரச்சாரங்களை காரணம் காட்டி நிகழ்வுகளை  சமநிலைப்படுத்த முயல்கிறார்கள்.
3.சாக்கடை சஹ்ரானின் கீழ்த்தரமான செயலுக்கு ஒட்டுமொத்த முழு சமூகத்தின்மீதும் பழி போடுகிறார்கள்.
4.எல்லாவற்றுக்கும் மேலாக தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களும் , கட்சி சார்ந்த காழ்ப்புணர்ச்சிகளும் எம் சமூகத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

பணத்துக்காக கட்சி தொடங்குவதும், பணத்தை சேர்த்துவிட்டு கட்சி தொடங்குவதும் தினசரி நிகழ்வுகளாகிவிட்டன. நம்மிட் சிலர் மூளைக்கும் நாக்குக்கும்  தொடர்பேயில்லாமல் மேடைகளில் “கத்தி “ வாக்குகளை இலக்கு வைக்கும் உசுப்பேத்தும் அரசியலையும் செய்கிறார்கள்.  தேர்தல்களை மட்டும் மையப்படுத்திய வாழ்வாதாரங்கள்! சமூக நலன் அற்ற தன்னலங்கருதிய காய் நகர்த்தல்களால் பெரும்பான்மை சமூகத்தின் கடைக்கண் பார்வைக்கு ஆளாகிவிட்டோம் .கல்வித்தகைமைகள் ,கொள்கை ,கோட்பாடுகள் தூக்குக் கயிற்றில் ஏறிவிட்டன .எமது மக்களை நடைமுறை சார்ந்த யதார்த்த ரீதியிலான அரசியல் மயப்படுத்தலுக்கு தயார்படத்த லுக்கான தேவையின் அவசரமும் அவசியமும் உணரப்படவே இல்லை.

சனநாயக நாடொன்றில் மதச்சுதந்திரமும் தாம் விரும்பியவர்களுக்கும் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் உரிமையும் உண்டு .இலங்கையின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பும் நிறைய உள்ளது.சுதந்திரம் கிடைத்ததுலிருந்து சிறுபான்மை முஸ்லீம் சமூகம் ஐக்கிய தேசியக்கட்சி சார்பான அரசியல் நிலைப்பாட்டில் இருந்தது உண்மை. ஆனால் அதனை ஒரு காரணமாக வைத்து  அவ்வப்போது ஆட்சிக்கு வந்த சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கங்கள் முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டவும்இல்லை,பெரிதாக பழிவாங்கவும் இல்லை.மாறாக அவர்களது மனங்களை மாற்றுகின்ற ,மனங்களை வெல்லுகின்ற வேலைத்திட்டங்களை முதன்மைப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றார்கள்.கல்முனை, சம்மாந்துறை,மூதூர் , கொழும்பு மத்தி போன்ற தொகுதிகள் சிறிலங்கா சுதந்திர கட்சியின் கோட்டைகள் என்ற  அழியாத தடங்கள் இன்னும் உண்டு.ஏன், புத்தளம், மட்டக்களப்பின்  காத்தான்குடி, ஏறாவூர் போன்ற பிரதேசங்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கைக்கு எட்டிய தூரத்துக்கு வந்ததை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.காலஞ்சென்ற கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அப்போதெல்லாம் பதவிக்கு வந்த சிறிலங்கா சுதந்திரகட்சி அரசாங்கங்கள் மூலமாக இராஜ தந்திரமான காய்நகர்த்தல்கள் மூலம் சாதித்தவை ஏராளம் ஏராளம். சந்திரிகா அம்மையார் நாட்டின் தலைவராக  காலஞ்சென்ற  தலைவர் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தை  அணிதிரட்டியமை மற்றொரு வரலாறு அல்லவா?

ஆகவே சிறுபான்மை முஸ்லீங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட தலைமையை மதிப்பதும் செவிமடுப்பதும் ஆட்சியாளர்களின் கடமையாகும். இதன்மூலம் முழு சமூகமும் கௌரவப்படுத்தப்பட்டதாக  திருப்தியடையலாம் அல்லவா!

நான் ஒன்றைமட்டும் துணிந்து கூற விரும்புகிறேன். இப்போது நடைபெறுகின்ற நிகழ்வுகளை அவதானிக்கும்போது பெரும்பான்மை கட்சிகள் அனைத்துமே ஒரு பொது நிகழ்ச்சி நிரலிலேயே இயங்குகின்றன.ஆகவே  திறந்த மனதுடன் ,தூர நோக்குடனும் ,தீர்க்கதரிசனமாகவும் எதிர்காலத்தை எதிரகொள்வோமாக!

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.