(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள், அந்த வைத்தியசாலையின் கொள்ளளவையும் மிஞ்சியுள்ளதாக வைத்தியசாலையின் உடற் கூற்று விஷேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 120 கொரோனா தொற்றாளர்களுக்கே சிகிச்சையளிக்க முடியுமான பூரண வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும், இன்று காலை 10.00 மணி வரையிலான காலப்பகுதியில் மட்டும் அங்கு 141 தொற்றாளர்கள் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இந் நிலையில் புதிதாக எவரேனும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களை அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக பொறுப்பேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனினும் இந் நிலைமையை சீர் செய்ய, தற்போதும் உடலில் குறித்த வைரஸ் இல்லை என தெரியவந்தும் மேலதிக இறுதி பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் தொற்றாளர்கள் பலர் அங்கு தங்கியுள்ளனர்.

அவர்களை வேறு வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றுவதன் ஊடாக அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் புதிய தொற்றாளர்களை அனுமதிக்கலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு, குறித்த வைத்தியசாலை அறிவித்துள்ளது.
இந் நிலையில் நாட்டில் இன்று இரவு 8.00 மணி வரையிலான 12 மணி நேரத்தில் புதிதாக 4 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் ஜா எல - சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த, தற்போது ஒலுவில் தனிமைபப்டுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறினார்.

அதன்படி இன்று இரவு 8.00 மணி வரை இலங்கையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக உயர்வடைந்துள்ளது.
இதில் 269 பேர் கடற்படையினராவர். அவர்களில் 190 பேர் வெலிசறை கடற்படை தளத்துக்குள்ளும், ஏனைய 79 பேரும் கடற்படை தளத்துக்கு வெளியே, விடுமுறையில் இருந்த போதும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் பாதிக்கப்பட்ட மேலும் மூவர்  பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.

அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது.  இந் நிலையில் மேலும் 507 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 187 ஆகும். அவர்கள்   நாடளாவிய ரீதியில் 29 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொரோனா தொற்று அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்ட பொலிஸாரை கொரோனா தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகளுக்குட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகொள்ளும் அதிகாரிகளுக்கு இலகுவில் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகமுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா நோயாளியொருவரை எவரேனும் தொடர்புகொள்ளும் பட்சத்தில், அது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுமாறு, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அபாயம் நிலவும் பகுதிகளுக்கு செல்லும் பொலிஸாருக்கு பாதுகாப்பு அங்கி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் வீதி தடைகளில், கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கையுறை மற்றும் முகக்கவசம் போன்றன கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.