(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தின் 3 ஆம் இலக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மீறும் செயல் என்பதால் அதற்கு எதிராக தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து தேசிய மக்கள் சக்தி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை தேசிய மக்கள் சக்தியின் சார்பில் சட்டத்தரணிகளான உபுல் குமரப்பெரும, ஹர்ஷன நாணக்கார மற்றும் அமைச்சின் முன்னாள் செயலாளரான ஆஷோக பீரிஸ் என்பவரும் இவ்வாறு முறைப்பாடளித்திருந்தனர்.

ஆணைக்குழுவில் முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் செயலாளரான ஆஷோக பீரிஸ், தேர்தல் நெருங்கும் போது அரச நியமனங்களை வழங்குதல், பதவி உயர்வுகளை வழங்குதல் என்பன முன்னெடுக்கப்படக்கூடாது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் சுற்று நிரூபம் வெளியிடப்படும். அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள்/ திணைக்களங்களுக்கு பொறுந்தும் வகையிலேயே இவ்வாறு சுற்று நிரூபம் வெளியிடப்படும்.

அதற்கேற்ப இம்முறை பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல்கள் ஆணையாளரினால் அவ்வாறான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டது. சுற்று நிரூபம் வெளியிடப்பட்டதன் பின்னரும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் 7 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த நியமனம் குறித்த சுற்று நிரூபத்திற்கு முரணானதாகும்.

எனவே தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்திற்கு முரணாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொடர்பில் ஆணைக்குழு கவனம் செலுத்துவதோடு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தெரிவிக்கையில், இம் மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சுக்களின், செயலாளர்களை அரச அதிகாரிகளாக கருத முடியாது என்று கூறினார். அவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றமையே அதற்கான காரணம் என்றும் அவர் கூறுகின்றார்.

அரசியலமைப்பின் 170 ஆவது உறுப்புரையின் படி நோக்கும் போது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், நீதிமன்ற அதிகாரிகள், பாராளுமன்ற சேவை குழு போன்ற குழுவினர் அரச அதிகாரிகளாகக் கருதப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சுக்களின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் அல்லர் என்று எந்த சந்தர்ப்பத்திலும் கூறப்படவில்லை.

அரசாங்கத்தால் வெளியிடப்படும் சில சுற்று நிரூபங்கள் மூலமும் செயலாளர்கள் அரச அதிகாரிகள் என்பது தெளிவாகிறது. எனவே அரச அதிகாரிகளாகக் கருதப்படும் செயலாளர்களை புதிதாக நியமிப்பதோ, நீக்குவதோ அல்லது மாற்றுவதோ தற்போது சட்ட விரோதமானதாகும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.