2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க அரசாங்க அச்சகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

மாவட்ட மட்டத்தில் அச்சிடப்பட வேண்டிய வாக்குகளடங்கிய விபரங்கள் தனித்தனிப் பிரிவுகளாக கையளிக்கப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் எந்த ஒரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிப்பு சூனியம் ஆக்கப்பட்டால் அதற்குப் பதிலாக புதிய வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆணையாளர் நாயகம் அரசாங்க அச்சகருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் 1,62,63,885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 1,72,73,300 வாக்குகள் அச்சிடுவதற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவை 3,45,466 புத்தக கட்டுகளாக கட்டப்படும். இதுதவிர இரட்டை வாக்குச்சீட்டுகளாக 4,14,525 வாக்குச் சீட்டுக்கள் 16,581 கட்டுகளாக தயார்படுத்தப்படவுள்ளன.

மொத்தம் 25 மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளன. இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் பத்தாவது மாவட்டமாகவும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்கள் 11 ஆவது மாவட்டமாகவும் உள்ளீர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ரீதியில் வாக்காளர் தொகை கூடுதலாக கம்பஹா மாவட்டத்தில் 17,85,964 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஆகக் குறைந்த வாக்காளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதன் எண்ணிக்கை 78,360 ஆக பதிவாகியுள்ளது.

கொழும்பு மாவட்டம் 18,05,300, கம்பஹா 19,03,650, களுத்துறை 10,37,000, கண்டி 12,08,500, மாத்தளை 4,31,000, நுவரெலியா 6,13,600, காலி 9,19,650, மாத்தறை 6,96,100, அம்பாந்தோட்டை 5,22,950, யாழ்ப்பாணம் 5,12,900, கிளிநொச்சி 99,400, மன்னார் 95,000, வவுனியா 1,28,700, முல்லைத்தீவு 85,200, மட்டக்களப்பு 4,37,950, அம்பாரை 5,47,900, திருகோணமலை 3.09.900, குருணாகல் 14,21,150, புத்தளம் 6,55,900, அநுராதபுரம் 7,75,600, பொலன்னறுவை 3,51,400, பதுளை 7,02,700, மொனறாகலை 4,00,100, இரத்தினபுரி 9,25,500, கோகலை 7,24,250 என பதிவாகியுள்ளது.

எம்.ஏ.எம். நிலாம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.