விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது கூரிய ஆயுதத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்தாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

´ரொனால் சில்வா´ அல்லது ´ரொஹான்சன்´ என்ற சந்தேகநபர் மட்டக்குளி பகுதியில் வைத்து மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதற்கு முன்னர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இன்று (19) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அதில் ஒரு சந்தேக நபரை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

மேலதிக மூவரையும் 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.

கடந்த புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டியொன்றில் வருகைத்தந்த சிலர் கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது கூரிய ஆயுதத்தை கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

பின்னர் காயமடைந்த கஞ்சிபானி இம்ரானின் தந்தை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை கடந்த மே 29 திகதி சொய்சாபுர பகுதியில் உள்ள ஹோட்டல் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்த வருகைத் தந்தவர்கள் பயன்படுத்திய வெகன் ஆர் ரக காரை செலுத்திய சாரதி கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 4.15 க்கு கஸ்கிஸ்ஸ பகுதியில் ஒழிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று 56 வயதான குறித்த சாரதியின் தாயும் 24 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கைது செய்யும் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு தயாரிப்பான டி 56 ரக துப்பாக்கியொன்றும், ஜெலடின் துப்பாக்கி ஒன்றும், மி.மீ 9 டி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகள், மற்றும் மேலதிகமாக சில ரவைகளும் கல்கிஸ்ஸ பொலஜஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Adaderana.lk

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.