இலங்கை முஸ்லிம் சமூகமும் ஊடகத்துறையும்


மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கமைய நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் அனைத்து துறைகளிலும் புதுமைகளை புகுத்தும் நவீன தொழிநுட்பம் ஊடகத்துறையை மட்டும் விட்டுவிடவில்லை. தற்சமயம் உலகை ஆட்டிப்படைத்துத் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸினால் தமக்கிடையேயான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ள உலக நாடுகள் செய்திகள் தகவல் பரிமாற்றத்தை மட்டும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் நொடி நேர தாமதமின்றி பரிமாறிக் கொள்கின்றன.
சிதறிக் கிடந்த மனித சமூகத்தை இனம், மதம், மொழி, நாடு என்ற வரையறையின்றி உலக மக்கள் என்ற ஒரு உறவு முறை அடிப்படையில் பிணைப்பை உண்டாக்க ஒரு துறையாக உருப்பெற்ற இவ்வூடகம் இன்று இவ்வுலகை தன் விரல் நுனியில் ஆட்டிப்படைக்கும் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

 ஊடகத்துறையானது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என சில அறிஞர்களால் சித்தரிக்கப்படுகிறது. ஏனெனில் அரசின்; செயற்பாடுகளை மக்களுக்கும், மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் அரசுக்கும் தெரிய வைக்கும் ஒரு சிறந்த ஊடக சக்தி நாட்டின் அரசையே கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை பெற்றது. எனவேதான் மாவீரன் நெப்போலியன் *“1000வாள்களுக்கு முன்னாள் நான் பயப்படமாட்டேன்; ஆனால் ஒரு பத்திரிகைக்கு முன் நான் பயப்படுகிறேன்”* என்று கூறியுள்ளார்.
மனிதர்களுக்கு சேவை புரியும் ;நோக்குடன் உருப்பெற்ற ஊடகங்கள் காலப்போக்கில் மனிதனை தனக்கு கீழ் ஆட்டிப்படைக்கும் அளவுக்கு முன்னெறியுள்ளன.

தற்காலத்தில் ஊடகங்களின் செல்வாக்கு பற்றி கூற வந்த கலாநிதி முஹம்மத் அல்லாபி பின்வருமபரு கூறுகிறார். “மக்களுக்கு அறிவூட்டவும்ரூபவ் உணர்வூட்டவும் பயன்படுத்தப்படும் சாதனங்கள் மத்தியில் தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.ஏனெனில், அனுமதியின்றி அவை வீடுகளுக்குள் நுழைந்து முன்னறிவித்தலின்றி காதுகளுக்கு புகுத்தப்படுகின்றன. மிக இலகுவாக எமது கைகளை வந்தடைகின்றன.” உண்மையில் இக்கூற்றின்படி இன்றைய நவீன உலகில் நமது விருப்பமோ அனுமதியோ இன்றி ஊடகங்கள் எமது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதை நாம் உணர முடிகிறது.
நாம் வாழும் இலங்கை நாட்டை பொறுத்தவரையில் ஊடகம் என்பது சிறுபான்மையினரை தாக்குவதற்காக பெரும்பான்மையினர் கையாழும் ஆயுதமாகவே திகழ்கிறது. 1883இல் “முஸ்லிம் நேசன்” என்ற இதழினூடாக அறிஞர் ஆ.ஊ.சித்திலெப்பை முஸ்லிம்களின் கல்வி, சமூக,கலாசார மேம்பாட்டிற்காக வித்திட்டுள்ளார். ஆனால். காலப்போக்கில் அவ்விதழின் முற்றுகைக்குப் பிறகு இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் எழுப்ப ஒரு ஊடகமேனும் இல்லாமல் அநாதையாக கிடந்த அவல நிலையை எமது சமூகத்திற்கு உணரவைத்த பெருமை நம்நாட்டின் பெரும்பான்மை சக்திகளுடன் சேர்ந்து செயற்படுகின்ற ஊடகங்களையே சேரும்.

எமது முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் ஊடகத்துறையை சினிமா, கேளிக்கை, ஆபாசம் என்ற கோணத்தில் நோக்கும் ஒரு சாராரும் ஊடகமே உலகம் என செயற்படும் மற்றொரு சாராரையும் நாம் காணலாம். ஆனால் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியில் ஊடகத்தை கையாள இஸ்லாம் அனுமதித்துள்ளது என்பதை உணர்ந்து செயற்படுவோர் எத்தனை பேரை நாம் காண்கிறோம்? ஏகாதிபத்தியவாதிகள் நாடுபிடித்து சமயப்பிரச்சாரம் செய்த காலம் மாறி; நாகரிகத்தினதும் விஞ்ஞானத்தினதும் வளர்ச்சியின் பயனாக இன்று ஊடகத்தின் மூலம் சமயப்போதனைகளும், கொள்கை பிரச்சாரங்களும் உலகில் பல புரட்சிகரமான மாற்றங்களை எற்படுத்தியுள்ளன.
இவ்வாறு இருக்கையில் நன்மையை ஏவி தீமையை தடுத்து முழு மனித சமுதாயத்தையும் நேர்வழிப்படுத்தும் சத்தியத்தை எத்திவைக்கும் உண்ணத பணியைச் செய்யவென வந்திருக்கும் முஸ்லிம் சமூகத்தினர் ஊடகத்துறையை தமக்காக பயன்படுத்தாமலும் ஈடுபாடு காட்டாமலும் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இனவாத்தை தமது குருதியில் கொண்டுள்ள பெரும்பான்மைச் சமூகம் ஆயுதம் ஏந்தி முஸ்லிம்களுடன் போராட முடியாது என்பதை உணர்ந்து சிந்தனா சக்தி ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் முஸ்லிம்களை பலவீனப்படுத்தி வெற்றியடைய முற்படுகின்றனர். தீய செயல்கள் மூலம் முஸ்லிம்களை வழிகெடுப்பதும் முஸ்லிம்கள் என்றால் குழப்பக்காரர்கள், பயங்கரவாதிகள் என்ற விம்பத்தை சித்தரிப்பதுமே தமது பணி என செயற்படுகின்ற பெரும்பான்மைக்கு ஊடகச்சுதந்திரம் என்ற பெயரில் துணைபுரிபவர்களும் பெரும்பான்மையைச் சேர்ந்தவர்களே. இவ்வளவு நாட்களாக பசுத்தோல் போர்த்திய புலி போல செயற்பட்ட ஊடகங்களின் முகத்திரை சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி மூலம் கிழிந்ததன் மூலம் இனவெரி பிடித்த மிருகங்களின் உண்மை சுயரூபத்தை நாம் விளங்கிக் கொண்டோம்.

கடந்த சில வருடங்களாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தாக்குகின்ற ஊடகங்களின் செயற்பாட்டை தட்டிக்கேட்க நம்நாட்டு அரசாங்கம் முன்வருமா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வி. இத்தனை நாட்களும் அநியாயத்தை தட்டிக்கேட்காமல் பொறுமை காத்ததன் விளைவு முஸ்லிம் ஜனாஸாக்களை தீயிலிட்டு பொசுக்கும்வரை சென்றுள்ளது. இன்னுமே பொறுமை காத்தால் முஸ்லிம்களை உயிருடன் எரிக்கவும் தயங்கமாட்டார்கள். அதனையும் இந்நாட்டு அரசு கைகட்டி வேடிக்கை பார்க்குமே ஒழிய முஸ்லிம்களை காக்க முன்வராது. தன்கையே தனக்குதவி என்பதிற்கமைய இலங்கைவாழ் முஸ்லிம்கள் தமக்காக குரல் எழுப்ப தாமே முன்வர வேண்டும். சிறு தீக்குச்சி பெருங் கானகத்தை பற்றி எரியச் செய்யும் வலிமை போன்றது பேனா எனும் ஆயுதம். ஆதனை வைத்துதானே பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை தாக்க முற்படுகின்றனர். அவர்களை எதிர்த்து தாக்கும் வலிமை நமக்கு இல்லையா என்ன? இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க அறிவு, சிந்தனா ரீதியாகவே நாமும் நமக்காக குரல் எழுப்பினால் என்ன? இஸ்லாத்தினை நிலைநாட்டவும் அதன் தூய்மையை பாதுகாக்கவும் போர்களம் சென்றுதான் போராட வேண்டுமென்றில்லை. ஊடகம் எனும் ஆயுதம் தரித்து முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு இணையாக நாமும் போராடலாம். கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு ஜிஹாத் புரியலாம். பேனாவின் முனையை விடவா கத்தியின் முனை வலிமையாகி விடப்போகிறது?
நமது இஸ்லாம் மார்க்கம் நமக்கு கருத்து சுதந்திரத்தை அளிக்கவில்லையா? 1400 வருடங்களுக்கு முன்னரே சத்திய மார்க்கம் இஸ்லாம் சிறந்த ஊடக ஒழுக்க நெறிகள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் விளக்கியுள்ளது. மனிதனுக்கு பேசும் உரிமையை வழங்கிய இஸ்லாம் அதற்கென சில வரையரைகளையும் விதித்துள்ளது. “நீங்கள் அவர்களுடன் அழகிய முறையிலேயே விவாதம் புரியுங்கள்” (16-125) என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. மேலும் உறுதிசெய்யப்பட்ட உண்மையான செய்திகளை மாத்திரமே மக்கள் மத்தியில் பரவச்செய்ய கூறியுள்ளது.

தற்காலத்தில் இலங்கையில் பல ஊடகங்கள் பக்கச்சார்பாக நடப்பதன் மூலம் அநியாயத்தின் பக்கம் நின்று உண்மைகளை இருளில் மறையச்செய்கின்றன. மேலும் முஸ்லிம்களுக்கெதிராக அவற்றை திரி படையச் செய்கின்றன. இச் சூழ்நிலையில் சத்தியத்தின் குரலாக அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் மிக்க முன்மாதிரியான ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தினருக்கு தேவை. முஸ்லிம் மக்கள் தமக்கென ஒரு வானோலியோ, தொலைக்காட்சி சேவையோ இல்லாமல் இருந்த காலம் மாறி தமக்கென ஓரிரு ஊடக சேவைகளை ஆரம்பித்து நடாத்தி வருவது மகிழ்ச்சியே என்றாலும் அவை முஸ்லி ம்களுக்கெதிராக நடைபெறும் அநியாயத்தை தட்டிக் கழிக்குமளவு வளர்ச்சியடையாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

 நாட்டில் சிறுபான்மையினராக வாழ்வதும், முஸ்லிம் சமூகத்தினரிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள், பிரதேசவாதம் போன்ற பல காரணிகள் முஸ்லிம்களுக்கான தனியான ஊடக வளர்ச்சியை முடக்குகிறன. வெறுமனே Facebook, Twitter, WhatsApp,
Instagram என சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்வதில் அர்த்தமில்லை. அவ்வாறான தகவல்கள் உண்மையாகவும் நீதமாகவும் இருக்கும் பட்சத்தில் அவை பரவுவதை அரசு தடைசெய்வதுடன், தகவல் பகிர்பவர்களை கைது செய்கிறது. எனவேதான் முஸ்லிம் சமூகம் தமக்கென ஒரு பலம் வாய்ந்த தேசிய ஊடகத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். அத்தோடு சமூகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் ஊடகங்களை இன்னும் வலிமைபடுத்தப்பட வேண்டும். முஸ்லிம் சமுதாயம் மட்டுமன்றி முழு இலங்கையும் வியந்து பார்க்கும் வகையிலும் அதனைக்கண்டு ஐயம் கொள்ளும் வகையிலும் முஸ்லிம் ஊடகங்கள் இருக்க வேண்டும்.

இலங்கையில் நாட்டில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவறாக சித்தரிப்பதை தடுப்பதற்கு மட்டுமன்றி இஸ்லாமிய பிக்ஹ் ஆய்வு, இஸ்லாமிய பொருளாதாரம், முகாமைத்துவம், விஞ்ஞானம், மருத்துவம், இலக்கியம், சட்டம், வணிகம் என பல்துறை சார் வகையில் முஸ்லிம்கள் ஊடகங்களில் கவனஞ் செலுத்த வெண்டும். நமது ஊடகங்கள் பிரச்சினையை மட்டும் பேசாமல் அதற்காண தீர்வுகளையும் முன்வைக்க முனைய வேண்டும். இன்று உலகில் அனைவரும் அஞ்சி நடுங்கும் பேரழிவு ஆயுதம் ஊடகம் என்றால் அது மிகையாகாது. பலர் அதனை தமது சுயநலத்திற்காக தவறாக பயன்படுத்தும் போது சத்தியத்தை நிலைநாட்ட நாம் அவ்வாயுதத்தை கையில் எடுக்க ஏன் அஞ்ச வேண்டும்? தற்கால அறிஞர் கலாநிதி யூசுப் அல்கர்ழாவி “எமது சமகால தூதை அதன் சமகால மொழியில் முன்வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் சுட்டும் சமகால மொழி ஊடகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறுபான்மையினராக நாம் வாழும் இந்நாட்டில் எமது ஊடக பலம் அதிகரிக்கப்படவில்லையெனின், நமது குரல் ஓங்கி ஒலுக்கவில்லையெனில் எதிர்கால நம் சமூகம் இன்னும் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது மறுப்பதற்கில்லை.


“வழித்தடம்” - All University Muslim Student Association
A.M. Aaysha
South Eastern University of  Sri Lanka

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.