இருபத்தியோராவது தொடர்.................... 

ஈராக்கினுள் யூதர்களினால் இஸ்லாமிய தடயங்கள் அழிப்பும், அமெரிக்காவினால் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட இலஞ்சமும்


சவூதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் அனுசரணையுடன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளிடம் ஈராக் முற்றாக வீழ்ந்தது. அதன் பின்பு அமெரிக்கப்படையினருடன் சேர்ந்து இஸ்ரேலிய படைப்பிரிவு ஒன்று ஈராக்கினுள் ஊடுருவியது. 

பாலஸ்தீனைப் போன்றே ஈராக் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறுகளைக் கொண்ட நாடு. அந்த பூமியில் இப்ராஹீம் நபி, லூத் நபி, யூனூஸ் நபி உற்பட ஏராளமான நபிமார்கள் வாழ்ந்துள்ளார்கள். நான்காவது ஹலீபாவான அலி (ரழி) அவர்கள் ஈராக்கில் உள்ள கூபாவை தலைநகராக கொண்டே ஆட்சி செய்தார்.

அத்துடன் சில நபிமார்கள் உற்பட நபித்தோழர்கள், தாபியீன்கள், தபியித்தாபியீன்கள், இமாம்கள் போன்றவர்களின் அடக்கஸ்தளங்களும், முகம்மது நபியின் பேரரான ஹுசைன் அவர்கள் கொலை செய்யப்பட்ட கர்பலாவும் ஈராக்கிலேயே உள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகள் இஸ்லாமியர்களின் வரலாற்றுக்கு உரிமைகோரும் நினைவுச் சின்னங்களும், ஆவணங்களும், தொல்பொருள் சான்றுகளும் ஈராக்கின் தேசிய நூதனசாலையிலும், சுவடிக்கூடத்திலும் பாதுகாக்கப்பட்டிருந்தன.

ஈராக் வீழ்ந்ததன் பின்பு ஈராக்கின் தேசிய நூதனசாலையிலும், சுவடிக்கூடத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பாதுகாப்பட்டிருந்த விலைமதிக்க முடியாத இஸ்லாமிய கலாச்சார பொக்கிசங்களை அமெரிக்க, இஸ்ரேலிய படையினர் கூட்டாகச்சேர்ந்து கொள்ளையடித்து தங்களது நாட்டுக்கு எடுத்துச் சென்றதோடு சிலதை தீயிட்டு எரித்தனர்.

ஈராக்கின் தேசிய நூதனசாலையும், சுவடிக்கூடமும் தீயிட்டு எரிக்கப்பட்டன. பாதுகாக்கப்பட்ட நல்லடியார்களின் பழமைவாய்ந்த அடக்கஸ்த்தளமும் அழிக்கப்பட்டது. இதனை ஓர் “கலாச்சார வன்புணர்வு” என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இது மனிதகுலத்துக்கு இழைக்கப்பட்ட பாரிய குற்றமாகும்.

அத்துடன் இரண்டாவது உலகமகா யுத்தத்தில் ரஷ்யாவிடம் ஜேர்மன் வீழ்ந்ததன்பின்பு அங்கு ரஷ்ய படைகள் செய்ததுபோன்று அமெரிக்க இஸ்ரேல் படைப்பிரிவினர் கூட்டாகச்சேர்ந்து ஈராக்கில் நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அதாவது ஈராக்கிய விஞ்ஜானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், புத்திஜீவிகள், துறைசார்ந்த வல்லுனர்கள், நிபுணர்கள் உற்பட சுமார் ஐநூறு பேர்கள் அடங்கிய பட்டியலுடன் நுழைந்த இஸ்ரேலிய படையினர் இவர்கள் அனைவரையும் வலைவிரித்துத்தேடி அவர்களை கண்ட இடங்களில் ஈவிரக்கமின்றி கொலை செய்தார்கள்.

ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி ஈராக்கில் இருந்த தொண்ணூறு சதவீதமான உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வுகூடங்கள், தொழிற்சாலைகள் என்பன முற்றாக தீயிட்டு எரித்து நாசமாக்கப்பட்டன. அத்துடன் கச்சேரிகளில் இருந்த தனிநபர் ஆவணங்களும் முற்றாக அழிக்கப்பட்டன.

நியாயமற்ற முறையில் ஓர் இறைமையுள்ள நாட்டின்மீது போர் தொடுத்தது மட்டுமல்லாது அதன் சொத்துக்கள் மீதும், அந்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை மட்டுமல்லாது முழு உலக இஸ்லாமியர்களின் பொக்கிசங்களையும் அழித்து தங்களது வெறியாட்டத்தை அமெரிக்க, இஸ்ரேலிய படைப்பிரிவினர் மேற்கொண்டிருந்தும், அதற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் அனைத்து முஸ்லிம் நாட்டு தலைவர்களும் வாய்மூடி மௌனியாக இருந்தார்கள்.

ஆனால் மலேசியா நாட்டின் அன்றைய பிரதமர் மகாதீர் மஹ்மூத் அவர்களும், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் மட்டுமே இந்த செயலை கண்டித்து குரல் கொடுத்தனர். அதுமட்டுமல்லாது அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் ஒரு கையாலாகாத அமெரிக்காவின் அடிமை. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று மகாதீர் மஹ்மூத் கோரிக்கை விடுத்திருந்தார். 

அத்துடன் சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளில் உள்ள மார்க்க அறிஞர்கள் இந்த வெறியாட்டத்தை கண்டித்து குரல் கொடுத்தபோது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதன்மூலம் இஸ்லாமியர்களின் வரலாற்று பொக்கிசங்களை அழிக்கும் அமெரிக்க இஸ்ரேலியர்களின் கூட்டு நாசகார நடவடிக்கைக்கு அரபு நாடுகளும் உடந்தை என்பது புலனாகின்றது. 

   
மலேசிய பிரதமர் போன்று வேறுசில முஸ்லிம் நாட்டு தலைவர்கள் இதற்கு எதிராக குரல்கொடுக்க முற்பட்டபோது அவர்களது நாட்டின் அபிவிருத்திக்கு பல மில்லியன் டாலர் வழங்கியதுடன், அந்த தலைவர்களுக்கும் இலஞ்சம் வழங்கப்பட்டது. அதன்பின்பு முஸ்லிம் தலைவர்கள் வாய்மூடிவிட்டார்கள். 

அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனத்துக்கும், அத்துமீறலுக்கும் எதிராக தனது நட்பு நாடுகள் முரண்பட்டால் அல்லது கிளர்ந்தெழுந்தால் அதனை அடக்குவதற்கு அமெரிக்கா கையாளும் முதல்கட்ட இராஜதந்திரம்தான் இலஞ்சமாகும்.

அந்தவகையில் கடந்த வருடம் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியமான OIC உலக இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதனால் அதற்கு மாற்று அமைப்பொன்றை உருவாக்குவதற்கு மலேசிய பிரதமர் மஹாதீர் மஹ்மூத் தலைமையில் கோலாலம்பூரில் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டின் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கானை கலந்துகொள்ளாமல் தடுப்பதற்காக பாகிஸ்தான் செலுத்தவேண்டிய கடனை சவூதி அரேபியா ரத்து செய்ததுடன், இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்காவும் முன்வந்தது. அதனால் பாகிஸ்தான் பிரதமர் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

அதன்பின்பு இம்மாநாட்டை ஏற்பாடு செய்த மலேசிய பிரதமர் மஹதீர் மஹ்மூத் பதவியிழந்தார். அமெரிக்காவிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்ட அவரது கூட்டணி கட்சியினர் தங்களது ஆதரவினை விலக்கிக்கொண்டதாலேயே அவர் பதவியிழந்தார்.

மேலும் அமெரிக்க படையெடுப்பினால் ஈராக்கில் சதாமின் படைகளுக்கு என்ன நடந்தென்றும், சதாம் பிடிபட்டும் அங்கு தொடர்ந்து போர்செய்தவர்கள் யாரென்றும் அடுத்த பதிவில் எதிர்பாருங்கள். 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது

தொடரும்.................................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.