பொதுத் தேர்தலை நடத்துவதற்கான உறுதியான திகதியை வார இறுதியிலேயே அறிவிக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


அதேவேளை சுகாதார தரப்பிடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காததன் காரணமாகவே தேர்தல் நடத்தும் திகதியை அதிகாரபூர்வமாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
எனினும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், இலக்கங்களை உடனடியாக வர்த்தமானியில் வெளியிட தீர்மானித்திருப்பதாகவும் சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டிருக்கும் வழிகாட்டல் கையேட்டினை வர்த்தமானியில் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய நிலையில் 70 நாட்களாவது கால அவகாசம் தேவைப்படுகின்றது. முன்னைய தேர்தல்களை விட இரு மடங்கு காலத்தை இத்தேர்தலின் போதே செலவிட வேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இன்னமும் சவாலாகவே உள்ளது. இத்தேர்தலுக்கு எதிரியாகவே கொரோனாவை பார்க்க முடிகிறது. தற்போதைய நிலையில் தேர்தலுக்கான சரியான திகதியை தீர்மானிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.

இம்மாதம் 14ஆம் 15ஆம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் ஒத்திகை வாக்கெடுப்பை நடத்தியதன் பின்னர் தேர்தல் நடக்கும் திகதியை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என நம்புகிறோம்.

அம்பலாங்கொடையில் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட ஒத்திகை வாக்கெடுப்பை நோக்கும் போது எம்மால் திருப்தி அடைய முடியாதுள்ளது. அங்கு நாம் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அடுத்து நடத்தக்கூடிய ஒத்திகையின் போது அவற்றை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை கையாள எண்ணி இருக்கின்றோம்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் மன்னார், வுனியா மாவட்டங்களை இணைத்த இந்த ஒத்திகை வாக்கெடுப்பு இடம்பெறும். தேவையான மாவட்டங்களில் இணைத்தும் ஏனையவற்றில் தனித்தும் இந்த ஒத்திகை வாக்கெடுப்புகள் நடத்தப்படும். இதற்காக கூடுதலான அதிகாரிகளை சேவைக்கு அழைத்துள்ளோம்.

இந்த பொதுத் தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே 600 கோடி ரூபா தேவைப்படும் என மதிப்பீடு செய்திருந்தோம். ஆனால் செலவுகள் அதிகரித்து காணப்படுவதால் 700 கோடி ரூபா தேவைப்படும் என கணக்கிடப்பட்டது.

தற்போது பெறும் அளவான சுகாதார சேவை அதிகாரிகளும் கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுருப்பதால் 900 கோடி ரூபாய்க்கும் கூடுதலான நிதி தேவைப்படும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிதி மதிப்பீடு தொடர்பாக நிதி அமைச்சுக்கு அறிவித்திருக்கின்றோம். ஒதுக்கப்படக் கூடிய நிதியில் 40 முதல் 50 சதவீதமான தொகை விசேட கொடுப்பனவுகளுக்காகவே ஒதுக்க வேண்டியுள்ளது என்றார்.

எம்.ஏ.எம். நிலாம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.