(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சி தனது கன்னி தேர்தல் பிரசாரத்தை எந்த மாவட்டத்தில் எவ்வாறு முன்னெடுக்கும் என்பது பற்றி  திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளது.

சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள கொவிட் - 19 கட்டுப்பாட்டு பாதுகாப்பு ஆலோசனைகள் உள்ளிட்டவற்றைக் கருத்திற் கொண்டு பெருமளவு மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் வகையில் எவ்வாறு பிரசாரங்கள் முன்னெடுப்பது என்பது பற்றி கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என்று ஐ.தே.க. பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் எந்த மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது? எவ்வாறு கூட்டங்கள் நடத்தப்படப் போகின்றன என்பது பற்றி வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். பிரசார கூட்டங்களை ஆரம்பிக்கும் முன்னர் சர்வ மத வழிபாடுகள் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வழமையாக தேர்தல்கள் இடம்பெறுவதைப் போன்றல்லாமல் தற்போது மாறுபட்ட நிலைமையே நாட்டில் காணப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் நிலைமை இன்னும் மாற்றமடையவில்லை. எனவே தேர்தல் பிரசார கூட்டங்கள் எவ்வாறு முக்கியத்துவமுடையனவோ அதனை விட அதிகமாக பொது மக்களின் பாதுகாப்பு எமக்கு அத்தியாவசியமானதாகும்.

எனவே வழமையைப் போன்று பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து விட முடியாது. சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்கள் என அனைத்தையும் கவனத்தில் பிரசார நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும் என்றும் அகிலவிராஜ்காரியவசம் தெரிவித்தார்.

அதற்கமைய இன்று சனிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் சர்வ மதவழிபாட்டுத் தளங்களுக்கும் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டனர். இன்று மாலை 4 மணிக்கு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள வாலுகராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் புதிய நகர மண்டபத்திற்கருகில் அமைந்துள்ள தவடகஹ பள்ளி வாசலில் மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் கொட்டாஞ்சேனையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் மாலை 5 மணிக்கு மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மாலை 5.30 மணிக்கு கொட்டாஞ்சேனையிலுள்ள சிவன் கோவிலிலும் அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு ஹூனுபிட்டியிலுள்ள கங்காராம விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.