பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் சம்பந்தப்பட்ட செயலணியில் தமிழ் பேசும் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.


தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் காரணத்தினால், நேற்றையதினத்தில் இருந்து, தேர்தல் பிரசாரத்தை உத்தியோகபூர்வமாக, ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் இருக்கும் சூழ்நிலையைப் பார்க்கும் போது, இந்த தேர்தலானது, ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்த தேர்தலை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம்.

பொது மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல், இந்த தேர்தல் நடைபெற வேண்டுமென்பது எமது விருப்பம்.

மார்ச் மாதம் 19 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், எமது தேர்தல் பிரசாரங்களை நிறுத்துகின்றோம் என தெரிவித்திருந்தோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், நேற்றையதினத்தில் இருந்து, உத்தியோகபூர்வமாக கட்சியாக தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கின்றோம்.

தேர்தல் பிரசாரத்தின் போது, கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் கடைப்பிடிப்போம். எமது வேட்பாளர்கள் அனைவருக்கும் இந்த அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக இடைவெளியைப் பேணுதல், போன்ற பல்வேறு வழிமுறைகள், சிபார்சுகள், தேர்தல் ஆணைக்குழுவினால், வழங்கப்பட்டுள்ளது. அதைக் கடுமையாக கடைப்பிடித்து, மக்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு, மக்கள் மத்தியில் திரும்பவும், இந்த தொற்றுப்பரவாத வகையில், பொறுப்புணர்வுடன் செயற்படுவோம்.

அதுமட்டுமன்றி, தேர்தல் நடைபெறும் முறையிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. தொற்றுப் பரவாமல் தடுப்பதற்காக, தேர்தல் பிரசார நடவடிக்கைகளில், பலவிதமான மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தேர்தல் தினத்தன்று, தேர்தல் நடைபெறும் விதத்திலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

கட்சிகள் மட்டத்திலும், சிபார்சுகள் கோரப்பட்டு, நாங்களும் பல சிபார்சுகள் செய்திருக்கின்றோம். சில நடைமுறைகள் தேர்தல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதன் காரணமாக, அது சட்டத்தை திருத்தித் தான் செய்ய முடியுமே தவிர, ஆணைக்குழுவின் வழிமுறைகளை வெளியிடுவதன் மூலம், அதனைத் திருத்த முடியாது.

இம்முறை வடகிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றோம். இந்த தேர்தலிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்ற போது, எவ்வாறான பின்னணியில் இந்தத் தேர்தலை சந்திக்கின்றோம் என்பதனை, நாங்கள் மக்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர், அரசியல் தீர்வைப் பெறுவதற்கும், யுத்தத்திற்குப் பின்னரான, மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பும் செயற்பாட்டில், ஈடுபட வேண்டுமென்பதில் குறியாக இருந்தோம். இவை அனைத்தையும் முன்னேற்றங்களாக கருதுகின்றோம்.அனைத்து விடயங்களையும் முழுமையாக தீர்த்துக்கொள்ள முடியவில்லை.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலை, 2015 ஆம் ஆண்டு போட்டியிட்டதற்கு முற்றிலும் மாறான ஒரு சூழ்நிலை. தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பலமாக இருக்கின்றார்கள் என்ற கருத்து உள்ளது. வித்தியாசமான சூழ்நிலையில் போட்டியிடுகின்ற நிலமை காணப்படுகின்றது. சவால்கள், கூடுதலாக இருக்கின்றது. தென்னிலங்கையில் பலமானவர்களாக இருந்தாலும் கூட, எமது பிரதேசங்களில் நாங்கள் பலமாக இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பலமான ஒரே அணியாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. நாங்கள் பிரிந்து, பல அணிகளாக, பல எண்ணிக்கையாக பாராளுமன்றத்திற்குச் செல்வோமாக இருந்தால், பலவீனப்படும்.

ஆகையினால்,ஒரே ஒரு அணியாக செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. எமது மக்கள் இதனை ஏற்று மாற்று அணிகள் என்ற கோசத்தைப் புறக்கணித்து, பலமான ஒரு அணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தெரிவு செய்ய வேண்டும் என்றார்.

அததெரண

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.