உதவும் மனநிலை


மற்றவர்களுக்கு உதவும் மனநிலை கொண்டவர்கள், பிறர்நலம் பேணக்கூடியவர்களாகவும் மற்றவர்களின் நல் வாழ்வில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பதால் அது அவர்களின்,

• சிந்தனையில் ஆழம்மிக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது
• அவர்களது சமூகத்தொடர்பை அதிகரிக்கச் செய்கிறது
• அவர்களது சுயமான பிரச்சினைகளிலிருந்து மனதைத் திசை திருப்பிவிடுகிறது 
• தன்மதிப்பை வளர்க்கிறது 
• வழங்கும் ஆற்றலை வலுப்படுத்துகிறது

என ‘எக்ஸ்டர் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுசேன் ரிசர்ட்’ மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றவர்களுக்கு உதவுவது எமது மனநிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்துவது போன்று எமது உடல் நலத்திலும் பல நன்மைகளை கொண்டு சேர்ப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
மற்றவர்களுக்கு உதவுவது,

• எம்மை சுறுசுறுப்பாக செயற்படத் தூண்டுகிறது 
• எமது உடலில் ஏற்படும் அழுத்தங்களைக் குறைத்துவிடுகின்றது 
• எமது உடலில் உருவாகும் எதிர்மறையான செயல்விழைவுகளையும் குறைத்துவிடுகின்றது
• நோய்களிலிருந்து எமது உடலை பாதுகாக்கத் துணைபுரிகின்றது 

என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாம் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் சிறியனவோ பெரியனவோ எந்த வகையில் இருந்த போதிலும் அவை எமக்கு உள உடல் ரீதியான நன்மைகளை பெற்றுத்தருவதை காணலாம். குறிப்பாக எமக்கு ஏற்படும் மனஅழுத்தம் மனஉளைச்சல் என்பன குறைந்து போவதற்கு மற்றவருக்கு உதவுதல் காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எங்களுக்கு நாம் செலவு செய்வதைவிட மற்றவர்களுக்கு செலவிடுவதானது மனதில் கூடுதலான மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் மற்றவருக்கு உதவுவது நரம்பியல் மாற்றத்தை தூண்டி எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மற்றவர்கள் ஏதேனும் மனஅழுத்தம் சார்ந்த சங்கடங்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும்போது அதிலிருந்து வெளிவர அவர்களுக்கு உதவிசெய்வதானது எமது சொந்த உணர்ச்சிகள் ஒரு ஒழுங்குமுறைக்கு ஏற்ப செயற்பட ஆரம்பிக்கிறது என்று கொலம்பிய பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

உதவும் மனப்பான்மை பற்றிய ஓர் ஆய்வு வயதானவர்களை வைத்து நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் மற்றவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் உதவி செய்யாமல் இருந்தவர்களைவிட நீண்டகாலம் வாழக்கூடியவர்களாகவும் மகிழ்ச்சியான மனநிலையைக் கொண்டவர்களாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.

அதேநேரம் மற்றவர்களுக்கு உதவி செய்தவர்கள் அவர்களால் உதவி செய்யப்பட்டதை உணரும்போது அவர்களது மூளை இரசாயனத்தில் மிகச்சிறந்த மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மற்றவர்களுக்கு உதவிசெய்ய, கொடுக்க, எடுக்க, பரிமாற பெரிய செல்வமும் தகுதியும் திறனும் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏதாவது ஓர் இலகுவான முறையால் கூட மற்றவர்களை எங்களால் சந்தோசப்படுத்தலாம்.

நாம் யாராக இருப்பினும் பரவாயில்லை. ஆனால் மனிதனாக இருந்தால் மட்டுமே போதும்.

அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.