(நா.தனுஜா)

தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடும் நிதியினளவு மற்றும் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கான தேர்தல் தொகுதி என்பன வரையறுக்கப்படாத வரையில் தற்போதைய தேர்தல் முறையில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்ட சிறிய கட்சிகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இதற்கான தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

பொதுத்தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடத்தப்படுவதை அனைத்துத் தரப்பினரும் உறுதிசெய்ய வேண்டுமென்று கரு ஜயசூரிய தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.

அந்தவகையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
தற்போதைய தேர்தல் சட்டங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு செலவிடக்கூடிய நிதியினளவு மற்றும் தேர்தல் தொகுதி வரையறை என்பவை உள்ளடக்கப்படவில்லை. எனவே இந்தத் தேர்தல் முறைமையானது அனைத்து வேட்பாளர்களுக்குமான சமவாய்ப்புக்களை உறுதிசெய்யவில்லை.

குறிப்பாக வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட சிறிய கட்சிகள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு எதிர்மறையான பாதிப்புக்களை எதிர்கொள்பவர்களுக்கான தீர்வுகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.