இருபத்திரெண்டாவது தொடர்....................

ஈராக்கிய இராணுவத்துக்கு என்ன நடந்தது ? அமெரிக்க படைகளை எதிர்த்து போரிட்டவர்கள் யார் ? 

ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் இராணுவ நடவடிக்கை 21.03.2003 அன்று ஆரம்பிக்கப்பட்டது. தரைவழித்தாக்குதலுக்கு முன்பு பல வாரங்கள் தொடர்ச்சியான விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டது. பின்பு ஈரானிய நீண்ட எல்லை தவிர்ந்த ஈராக்கின் ஏனைய அரபு நாடுகளின் எல்லை வழியாக பல முனைகளிலிருந்தும் தரைவழித்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

கூட்டுப்படைகளுக்கு எதிராக சில இடங்களில் கடுமையான தாக்குதலுடன், தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தாலும், வேறு பகுதிகளில் எதிர்பார்த்தளவில் பாரிய எதிர்ப்புக்கள் இருக்கவில்லை.

தன்னைச் சுற்றி பல துரோகிகளும், அமெரிக்காவின் பணத்துக்கு சொரம்போனவர்களும் இருந்தார்கள் என்பதனை தரைவழித்தாக்குதலின் பின்புதான் சதாம் ஹுசைனால் உணர முடிந்தது. 

எதிர்த்துநின்று சண்டைசெய்யகூடிய சாதகமான இடங்களிலிருந்தும் ஈராக்கிய படைகள் எதிர்ப்புக்காட்டாமல் பின்வாங்கியது. ஈராக்கிய பாலைவனங்ககளை சுற்றி புதைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான கண்ணிவெடிகள் வெடிக்காத நிலையில் கூட்டுப்படையினர் தரைவழியாக ஈராக்கினுள் ஊடுருவினார்கள்.

சதாம் ஹுசைன் உற்பட ஈராக்கிய அரசில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர்கள் தளபதிகள் அடங்கலாக 52 பேர்கள் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள், அதிகாரிகள், கட்டளையிடும் இராணுவ தளபதிகள் கூட்டுப்படைகளிடம் சரணடைந்தார்கள்.

இதில் சரணடைந்த பலர் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் ஏற்கனவே அமெரிக்காவின் ஒற்றர்களாக செயல்பட்ட ஈராக்கிய கட்டளையிடும் தளபதிகளும், அதிகாரிகளும் பத்திரமாக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குடியுரிமை வழங்கப்பட்டு இன்றும் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஈராக்கின் தலைநகரான பக்தாத் நகருக்குள் அமெரிக்க படை ஊடுருவியது. அதன் பின்பு ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசைனுக்கும் ஏனைய முக்கிய அமைச்சர்களுக்கும் என்ன நடந்ததென்பதனை அறிய உலகம் ஆவலாக இருந்தது. சதாம் சரணடைந்தார் என்ற வதந்தி பரவியதே இதற்கு காரணமாகும். 

ஆனாலும் யுத்தம் முடியவில்லை. ஈராக்கின் பல திசைகளிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. இந்த தாக்குதல்களை சதாம் ஹுசைன்தான் மறைந்திருந்துகொண்டு தனது குடியரசு இராணுவத்தை வழிநடாத்துகிறார் என்றுதான் பலரும் நம்பினார்கள்.

இந்த நிலையில் 2003 .12. 14 அன்று சதாமின் சொந்த பிரதேசமான திக்ரித் நகருக்கு அண்மித்த பகுதியில் சதாம் ஹுசைன் அவர்கள் நிலக்கீழ் அமைவிடம் ஒன்றில் மறைந்திருந்தபோது அமெரிக்க படையினர்களால் பிடிபட்டார்.

அவர் இருந்த தோற்றத்தின் மூலம் அமெரிக்க படைகளினால் அடையாளம் காணமுடியவில்லை. அவர் நினைத்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால் தப்பிக்க முயற்சிக்காது தானே ஈராக்கின் அதிபர் என்று அமெரிக்கப் படைகளிடம் முழங்கினார்.

 

சதாம் ஹுசைன் பிடிபட்டிருந்தும் ஈராக்கில் போர் ஓயவில்லை. தொடர்ந்து போர் உக்கிரமாக நடந்துகொன்டே இருந்தது. மரண ஓலங்களால் நாளாந்தம் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும், அகதிகளாக இடம்பெயர்ந்த அவலங்கள் இடம்பெற்றுக்கொண்டே இருந்தது. 

அவ்வாறென்றால் அமெரிக்க படைகளுக்கு எதிராக போரிட்டவர்கள் யார் ? இவர்களை வழிநடாத்தியது யார் ?

சதாம் ஹுசைன் அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும் அங்கு இறுக்கமான கட்டுப்பாடு இருந்ததனால், ஒசாமா பின் லேடன் தலைமை வகித்த அல்-கொய்தா உற்பட எந்தவொரு இஸ்லாமிய ஆயுத இயக்கங்களினாலும் ஈராக்கினுள் ஊடுருவ முடியவில்லை.

ஆனால் அமெரிக்க கூட்டுப்படைகள் ஈராக்கினுள் நுழைந்ததன்பின்பு அல்-கொய்தா இயக்கமும், ஈரானிய ஆதரவு பெற்ற இயக்கங்களும் ஈராக்கினுள் ஊடுருவி அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளுக்கு எதிராக போரிட்டார்கள்.

ஈராக்கை சேர்ந்த அபூபக்கர் அல்-பக்தாதி தலைமையிலான அல்-கொய்தா இயக்கம் ஈராக்கின் பல பாகங்களிலும் அமெரிக்க படைகளுக்கு எதிராக அதிர்ச்சி தரக்கூடிய தாக்குதலை தொடர்ந்தார்கள்.

அதுபோல் ஈரானிய ஆதரவு பெற்ற மதகுருவான முக்ததா அல்-சத்ர் தலைமையிலான மஹ்தி இராணுவத்தினர் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளுக்கு எதிராக பலமான தாக்குதலை நடாத்தி வந்தார்கள்.

இந்த முக்ததா அல்-சத்ர் அவர்கள் ஈராக்கை சேர்ந்தவர். இவரது தந்தை உற்பட இவரது குடும்பத்தினர் பலர் சதாம் ஹுசைனின் ஆட்சியில் கொல்லப்பட்டிருந்தார்கள். அதனால் ஈரானில் வாழ்ந்துவந்த முக்ததா அவர்கள் ஈராக்கிய படைகள் பலவீனமடைந்தவுடன் ஈராக்கினுள் ஊடுருவி அமெரிக்க படைகளுக்கு எதிராக போர் தொடுத்தார்.

அத்துடன் சதாமின் ஆட்சி வீழ்ந்ததன் பின்பு அமெரிக்க படைகளிடம் சரணடைய மறுத்து பின்வாங்கி சென்ற ஈராக் இராணுவத்தினரில் ஏராளமானோர் அபூபக்கர் அல்-பக்தாதி தலைமையிலான அல்-கொய்தா இயக்கத்தில் இணைந்துகொண்டு அமெரிக்க படைகளுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டார்கள்.

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

தொடரும்.....................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.