பொத்துவில் மக்களின் பிரச்சினை : தொல்லியல் சின்னங்களை முகாமை செய்யும் ஜனாதிபதி செயலணி முக்கிய உறுப்பினர்களை சந்தித்தார் ஹரீஸ் !

அண்மையில் பொத்துவிலில் உள்ள முஹுது மகா விகாரையை அண்மித்த காணிகளை மையப்படுத்தி தொல்லியல் துறை வழங்கிய அறிவித்தலை தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர், கிழக்கு ஆளுநர் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் அங்கு சென்று பார்வையிட்டதுடன் கடற்படையினரையும் பாதுகாப்பில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள் என்கின்ற விவகாரம் கிழக்கு மக்களிடம் அதிலும் குறிப்பாக பொத்துவில் பிரதேச மக்களிடம் பாரியசந்தேகத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கியுள்ளது.

அந்த தொல்லியல் நிலம் குறித்து தகவல்கள்  தொடர்பிலும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள தொல்லியல் சின்னங்களை முகாமை செய்யும் ஜனாதிபதி செயலணி முக்கிய உறுப்பினர்களான களணி பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ மற்றும் தனியார் ஊடக வலையமைப்பொன்றின் தலைவர் திலிப் ஜயவீர ஆகியோரை அண்மையில் கொழும்பில் சந்தித்து பேசினார்.

கிழக்கு பிரதேசங்கள் அடங்கலாக தொல்லியல் சின்னங்களை முகாமை செய்யும் ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ள இந்நிலையில் பொத்துவில் முஹுது மகா விகாரையை அண்மித்த  மக்களின் மன நிலைகள், அந்த பிரதேச மக்களின் வாழ்வாதார நிலை, தொழில் துறைகளின் நிலைமைகள், பொத்துவில் பிரதேச மக்களின் பக்க நியாயங்களை அந்த உறுப்பினர்களிடம் விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துக்கூறியதுடன் நாட்டின் கடந்த அசாதாரண சூழ்நிலைகளின் போது பௌத்த மதகுருக்களையும், அந்த விகாரையையும் பாதுகாக்க அப்பிரதேச மக்கள் எடுத்த கரிசணைகளையும் இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் பொத்துவிலில் அந்த பிரச்சினையை கையாளும் முக்கிய மக்கள் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள் , பிரதேச முக்கியஸ்தர்கள் அடங்கிய சிவில் நடவடிக்கை குழுவினரை தொல்லியல் சின்னங்களை முகாமை செய்யும் ஜனாதிபதி செயலணியினர் சந்திக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்துதருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அந்த சந்திப்பின் போது கேட்டுக்கொண்டதிற்கு இணங்க பாதுகாப்பு செயலாளர் அடங்கலாக தொல்லியல் சின்னங்களை முகாமை செய்யும் ஜனாதிபதி செயலணியை விரைவில் சந்திக்க ஏற்பாடுகள் செய்துதருவதாக தொல்லியல் சின்னங்களை முகாமை செய்யும் ஜனாதிபதி செயலணி முக்கிய உறுப்பினர்களான பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ மற்றும் திலிப் ஜயவீர ஆகியோர் இச்சந்திப்பின் போது உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.