(எம்.ஆர்.எம்.வஸீம்)

இரண்டு ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கவே ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம். ஏப்ரல் தாக்குதல் அரசாங்கத்தின் சதித்திட்டமாகும். அதனை வெளிப்படுத்தியதாலேயே அரசாங்கத்தின் கூலிப்படைகள் எனக்கு எதிராக விமர்சனங்களை மேற்கொண்டுவருகின்றன. யார் என்ன சொன்னாலும் சத்தியத்தை வெளிப்படுத்தும் எனது வாயை யாராலும் மூடிவிடமுடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தேசியப்பட்டியல் உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பதுளையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மெதிரிகிரிய பிரதேசத்தில் நான் ஆற்றிய நீண்ட உரையில் ஒரு துண்டை பிடித்துக்கொண்டு அரசாங்கத்துக்கு துணைபோகும் சில ஊடகங்கள் என்னை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால் கருணா அம்மான் எமது இராணுவத்தினர் மூவாயிரம் பேரை கொலை செய்ததாக பகிரங்கமாக தெரிவிக்கின்றார்.

அவரை விமர்சிக்கவோ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவோ இந்த ஊடகங்கள் முன்வரவில்லை. கருணாவை கைதுசெய்யுமவரை மக்களை திரட்டிக்கொண்டு போராட்டம் ஒன்றுக்கு தயாராகப்போவதாக நான் தெரிவித்ததனாலே எனக்கு எதிராக இந்தளவு சேறுபூசும் நடவடிக்கையை அரச தரப்பினரும் சில ஊடகங்களும் மேற்கொண்டுவருகின்றன.

அத்துடன் அரசியல் மேடைகளில் எம்மை விமர்சிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருணா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. அதேபோன்று என்னை விமர்சிக்கும் அளவுக்கு அரசாங்கத்துக்கு துணைபோகும் ஊடகங்களும் கருணாவின் கூற்று தொடர்பாக அலட்டிக்கொள்வதில்லை. அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசாங்கத்தின் சதித்திட்டம் என நான் தெரிவித்திருந்தேன்.

இதனாலே தற்போது நான் தெரிவித்த ஒரு கருத்தை பெரிதுபடுத்திக்கொண்டு விமர்சிக்கின்றனர். கர்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்பாக நான் முன்வைத்த கருத்து எனது சொந்த கருத்தாகும். அது என்னுடன் தொடர்புபட்டதொன்றாகும். அதற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் சம்பந்தமில்லை.

மேலும் நாட்டை இரண்டு ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து பாதுகாக்கவே ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியுள்ளோம். இது கட்சியல்ல, மக்கள் சக்தி. அனைத்து தரப்பினரும் இதில் இணைந்துகொள்ளலாம். ராஜபக்ஷ ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கம் நாட்டில் இல்லாமலாக்கப்படவேண்டும். நாட்டின் ஜனாதிபதியாக தம்பி இருக்கும்போது அவரின் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக போட்டியிடுகின்றார். அதேபோன்று மாத்தளை மாவட்டத்தில் புதிதாக ஒரு ராஜபக்ஷ களமிறங்கி இருக்கின்றார். அதனால் ராஜபக்ஷவினரின் ஆதிக்கம் இதனுடன் முடிவடைவதில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விரட்டினாலும் போகாமல் இருக்கும் விக்ரமசிங்கவின் ஏகாதிபத்தியமாகும். கட்சி ஆதரவாளர்கள் அவரை விரட்டினாலும் அதனைவிட்டுக்கொடுக்காமல் இருக்கின்றார். 1994 இல் இருந்து கட்சியின் தலைவராக இருந்துவருகின்றார். ஆனால் நாட்டின் ஜனாதிபதியாக முடியவில்லை. இரண்டுமுறை பிரதமராக இருந்தும் பூரண காலம் அவரால் இருக்கமுடியவில்லை. அதனால் தற்போது கட்சியை இளம் உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு தெரிவிக்கும்போது அதற்கு விட்டுக்கொடுக்காமல் தனது புதையல் போன்று ஏகாதிபத்தியவாதியாக செயற்படுகின்றார்.

அதனால்தான் இந்த இரண்டு ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கவே ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி இருக்கின்றோம். மக்கள் பலத்துடன் ஆட்சியை கைப்பற்றுவதுடன் சிறிகொத்தவின் அதிகாரத்தையும் கைப்பற்றுவோம் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.