முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சரான மகிந்தானந்த அளுத்கமகே அண்மையில் சுமத்தி இருந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு லசித் மாலிங்க இதனை தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியை பணத்திற்காக காட்டிக்கொடுத்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது நாடு என்ற வகையில் மிகவும் அவபெயருக்கு உள்ளான சந்தர்ப்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து சாட்சியங்களும் இருக்குமாயின் அதன் உண்மை மற்றும் பொய்களை கண்டறிய நீண்டகாலம் செல்லாது என்பதை அந்த உலகக் கிண்ண போட்டியில் விளையாடிய வீரர் என்று தான் நம்புவதாகவும் மாலிங்க கூறியுள்ளார்.

போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டமைக்கான தெளிவான சாட்சியங்கள் இருக்குமாயின் மக்களை தவறாக வழி நடத்தாது, அந்த போட்டியை காட்டிக்கொடுத்த நபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால், இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நபர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் மாலிங்க குறிப்பிட்டுள்ளார்.

(தமிழ் வின்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.