(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிரான குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நீமன்றத்தின் ஆலோசனையுடன் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த அடிப்படைவாத செயற்பாடுகளுக்காக வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளிலிருந்தும், தேசிய ரீதியிலான சட்டத்திற்கு அமைவான மற்றும் சட்டத்திற்கு புறம்பான வர்த்தக நிறுவனங்களிலிருந்தும் நிதி கிடைக்கப் பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற்று 14 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பை பொலிஸார் கொண்டிருப்பதனால் அதனை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த ஊடகச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பல சம்பவங்கள் தொடர்பிலான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய இதுவைரயில் 200 க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத விசாரணைப்பிரிவு, கொழும்பு குற்றப் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினரால் 26 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 8 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நபர்களுள் 32 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 35 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 63 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, அதனுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல்வேறு குற்றச் செயல் சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் சம்பவத்தின் பின்னர், சாய்ந்தமருது பகுதியின் வீடொன்றில் தற்கொலை தாக்குதலை செய்துகொண்டு உயிரிழந்த மொஹம்மட் ரில்வான் தொடர்பிலே முதல்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதலின் பிரதான சூஸ்திரதாரியாக குறிப்பிடப்படும் சஹ்ரான் ஹாசிமின் இளைய சகோதரன் ஆவார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி பாலமுனை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை வெடிக்கச் செய்து பரிசோதனை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் இவரே தொடர்பு கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த முதற்கட்ட பரிசோதனையின் போது குறித்த நபர் காயமடைந்துள்ளதாகவும், அவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய சம்பந்தப்பட்ட நபருக்கு சிகிச்கை அளித்ததாக கூறப்படும் வைத்தியரிடமும் வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் திட்டமிட்டே சில தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வவுனதீவு சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டமை மற்றும் அவர்களுடைய கடமை நேர துப்பாக்கியை கொள்ளையிட்டமை போன்ற செயற்பாடுகளும் இந்த அடிப்படைவாத குழுவினராலே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.

மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பான சந்தேக நபர்களை அடையாளம் காணுவதற்காக பொலிஸாருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய நபரை குறித்த அடிப்படைவாத குழுவினர் கொலை செய்ய முயற்சித்திருந்ததுடன், இதன்போது குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியிருந்தனர்.

சந்தேக நபர்கள் வவுனதீவு பகுதியில் இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொலைச் சம்பவத்தின் போது காணாமல் போயிருந்த இரு துப்பாக்கிகளில் ஒன்றை பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் குடும்பங்களுக்கு பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் நிதி வழங்கியுள்ளதாகவும், அதற்காக அவருக்கு எங்கிருந்து நிதி கிடைக்கப் பெற்றது என்பது தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

வணாத்துவில் பகுதியில் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரை கொலை செய்வதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

பாலமுனை மோட்டார் சைக்கிளை வெடிக்கச் செய்து பரிசோதனையுடன் தொடர்புடைய இருவர், குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் போது உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் அடிப்படைவாத செயற்பாட்டாளர்களால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டுள்ளமை தற்போது உறுதியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய மூன்று டி 56 ரக துப்பாக்கிகளும், இரு ரிவேல்டர் ரக துப்பாக்கிகளும், பிஸ்டோல், குழல் 12 ரக துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள், தோட்டாக்கள் உள்ளிட்ட பல வகையான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபர்களின் செயற்பாடுகளுக்காக வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளாலும், தேசிய ரீதியிலான சட்டத்திற்கு புறம்பான மற்றும் சட்டத்திற்கமைவான வர்த்தகத் துறையினராலும் நிதி கிடைக்கப் பெற்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தற்கொலைதாரிகள் குண்டு தயாரிக்க பயன்படுத்தியதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்சாலையினால் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுடன் செய்துவந்த வர்த்தக நடவடிக்கையின் போது கிடைக்கப் பெற்ற நிதியையும் இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

உயிர்த்த ஞாயிறு சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனால் சந்தேக நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படவுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு, கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
Blogger இயக்குவது.